நிறுவனம்:நிலாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
பெயர் | நிலாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | நிலாவெளி |
முகவரி | நிலாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், நிலாவெளி, திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
நிலாவெளிச் சித்திவிநாயகர் ஆலயத்துக்கு சமீபத்திலேயே முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. நிலாவெளிச் சித்திவிநாயகராலயத்திற்கு அருகில் வடக்குத் திசையில் முத்துமாரியம்மன் கோவில் காணப்படுகின்றது. சுமார் நூறு வருடங்களுக்குமுன் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாலயம் இருக்குமிடத்தில் சுருட்டுக் கொட்டில் ஒன்று இருந்தது. சின்னப்பொடியார் என்பவர் அக்கொட்டிலில் சுருட்டுத்தொழில் செய்துகொண்டிருந்தார். இந்தக் கொட்டிலில் சிப்பியில் திரியிட்டு நெய்விளக்கு வைப்பார்களாம். ஒருநாள் நெய் விடாமலே விளக்குத் தானாக எரிந்ததாம். இப்படித் தொடர்ந்து இரண்டு நாட்களாக விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இந்த அதிசய நிகழ்ச்சிக்குப் பின் சின்னப்பொடியருக்கு முத்துமாரி அம்மன் கனவிலே காட்சிகொடுத்ததால், அம்பாள் மீது கொண்ட பயபக்தியினாலே திரு. சின்னப்பொடியர் என்பவர் இந்தக் கோவிலைக் கட்டி ஆதரித்து வந்தார். கருவறையில் கும்பம் வைத்து முகஅங்கியிட்டுப் பூசை செய்துவருகின்றார்கள். கருவறையை மருவியபடி பிரம்மாண்டமான வேப்பமரம் முன்னர் இருந்துள்ளது. சின்னப்பொடியாருடைய காலத்திற்குப்பின் சித்திவிநாயகர் கோவிலைப் பராபரித்துவரும் பரிபாலன சபையே இந்தக் கோவிலையும் பரிபாலனம் செய்துவருகின்றது.
கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங்களைக் கொண்ட மடாலயமாக இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கின்றது. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாத்திரம் பூசை முன்னர் நடைபெற்று வந்துள்ளது. தற்பொழுது நித்திய பூஜை இடம்பெறுகின்றது. வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் செவ்வாய்க்கிழமை இக்கோவிலில் கும்பவிழா ஆரம்பமாகின்றது. தொடர்ந்து பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். பத்தாம் நாள் தீமிதிப்பு வைபவமும், பதினோராம் நாள் பொங்கல் வேள்விகளும் நடைபெற்று விழா நிறைவேறும். உருவாடி அருள்வாக்குக் கூறுவது இங்கு நடைபெறுவதால் சிறு தெய்வ வழிபாட்டில் பெருநம்பிக்கை வைத்திருக்கும் அடியார்கள் இங்கு உற்சவ காலங்களில் திரள் திரளாக வந்து கூடுவார்கள்.