நிறுவனம்:தி/ மெதடிஸ்த மகளிர் கல்லூரி
பெயர் | தி/ மெதடிஸ்த மகளிர் கல்லூரி |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | திருகோணமலை |
முகவரி | தி/ மெதடிஸ்த மகளிர் கல்லூரி, திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
திருக்கோணமலை கிழக்கிலங்கையில் நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. காலங்கள் மாறும் போது கூடவே கருத்துக்களும் கலாச்சாரங்களும் மாறலாம். ஆனால் உண்மை வரலாற்றை மாற்ற முடியாது. திருக்கோணமலை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வனப்புடன் கூடிய நகரம். மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட வெளிநாட்டவர்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். வடக்கு கிழக்கு மக்களின் நடுநாயகமாகவும் விளங்குகின்றது. கிழக்கு மக்களின் வாழ்க்கை கோலங்களையும், வடக்கு மக்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இணைத்து நிற்கும் பாலமாகவும் இது விளங்குகின்றது என்பது அதன் பூகோள அமைப்புக்கள், கலாச்சாரங்கள் மக்களின் வாழ்வு முறைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
1529ம் வருடத்திற்கும் அப்பால் மிக நீண்ட வரலாற்றில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரான்ஷியர், பிரித்தானியர் ஆகிய வெளிநாட்டு படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின் சுதந்திர தேசத்தின் ஓர் முக்கிய பிரதேசமாக விளங்கி வரும் இந்தப் பிரதேசத்தின் தொன்மை மிகு வரலாறும் மிக நீண்டதேயாகும். இத்தனை வரலாற்றுப் பதிவுகளுடன் தொன்மையும், பெருமையும் கொண்டு விளங்கும் அடையாளச்சின்னமே திருக்கோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி ஆகும். 1814ஆம் ஆண்டில் மெதடிஸ்த திருச்சபையினர் இலங்கையின் வெலிகம கரையோரத்திற்கு வந்திறங்கியமை மெதடிஸ்த திருச்சபையின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கியது எனலாம். "இலங்கையின் கல்வித் தேவையை மேம்படச் செய்தல் வேண்டும்" எனும் உயரிய நோக்குடன் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகளை அமைத்தனர். அந்த வகையில் 1819ல் திருக்கோணமலையில் மெதடிஸ்த திருச்சபை அமைக்கப்பட்டு மெதடிஸ்த உயர்தரப் பாடசாலையும் (Mothodist High School) நிறுவப்பட்டது. 1912ம் ஆண்டில் பல வசதிகள் கொண்ட பாடசாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. 1821, 1823 காலத்தில் மேலும் மூன்று பாடசாலைகள் றொபேர்ட் ஹாபர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1856ம் ஆண்டு ஜோன் வோட்டன் தலைமையில் திருச்சபைக்கு அருகில் தனியான கட்டிடத்துடன் இடமாற்றப்பட்டது. இதுவே இன்றைய எமது மெதடிஸ்த மகளிர் கல்லூரி ஆகும். இது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் "வேம்படிப் பாடசாலை" என அழைக்கப்பட்டது. 1859ல் மேலும் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு "மெதடிஸ்த பெண்கள் கல்லூரி" என்ற பெயருடன் விடுதி வசதியும் கொண்ட ஒரு பாடசாலையாக விளங்கியது. 1902ம் ஆண்டளவில் மாணவர் தொகை மிக வேகமாக அதிகரித்தது. அதன் காரணமாக பௌதீக வளங்களும் அதிகரிக்கப்பட்டன. இதன் காரணமாக திருக்கோணமலை மாவட்டத்தில் அதி உயர் வளர்ச்சியடைந்த பாடசாலையாக இது காணப்பட்டது.
இக்காலப் பகுதியில் இருநேரப் பாடசாலை நடைபெற்றதுடன், வார இறுதி நாளான சனிக்கிழமைகளிலும் பாடசாலை நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். மாணவர் ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்பட்டது. அத்துடன் உடல், உள நலமேம்பாடு கருதிப்பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவரிடையே சேமிப்புப் பழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. 1966ம் ஆண்டில் Mothodist English School ஆக பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்தும் அதிபராக எம். அருமைநாயகமே பணியாற்றி உள்ளார். இந்தக் காலப்பகுதியில் வேம்படிப்பாடசாலை என்றும் இது அழைக்கப்பட்டுள்ளது.
அதிபர் எம். அருமைநாயகத்தின் காலப்பகுதியில் பல புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டன. பௌதீகவள அபிலிருத்தியுடன் ஆளணி வள அபிவிருத்தியுமாக பாடசாலை வளர்ச்சியடைந்து சென்றுள்ளது. இவர் 1975 வரை அதிபராக கடமையாற்றினார். 1930ல் செல்வி. எவரெட்டும், அதன் பின்னர் செல்வி. கார்டினரும் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்தினர். 1938ல் கிறீன்வூட் இப்பாடசாலையின் அதிபர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். 1942, 1945ல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது பாதுகாப்பு கருதி மாணவர்களை வேறு இடம் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் பாடசாலை நிர்வாகத்தில் பின்னடைவு ஏற்பட்டது. 1949இல் இந்தப் பாடசாலையின் பழைய மாணவியும், ஆசிரியராகவுமிருந்த செல்வி. அருமைநாயகம் மங்கயர்க்கரசி முதலாவது இலங்கையின் அதிபராக இப்பாடசாலையை பொறுப்பேற்றமையும், இவரது காலத்தில் பாடவிதானம், இணைப்பாடவிதானம் போன்றவற்றில் மாணவர்கள் மிகவும் உன்னதமான ஆற்றல்களை வெளிப்படுத்தியமை வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அறியக்கூடிய செய்திகளாகும். அதன் பின்னர் 1975, 1985 வரை திருமதி. இ. ஆர் குணரெட்ணம் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலத்தில் மாணவர் பல துறைகளிலும் தமது ஆற்றல்களைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக NCGE, HNC பொதுப் பரீட்சைகளில் சிறப்பான பெறுகைகளைப் பெற்றிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது. ஐக்கியநாடுகள் தினம், சர்வதேச மகளிர் தினம் என்பவையும் அனுஷ்டிக்கப்பட்டதுடன் புதிய விடுதிக்கட்டிடம் ஒன்றும் இக்காலப்பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 1985, 1986 வரை ஓராண்டு திரு. N. சந்திரகாந்தன் அதிபராக கடமையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து 1986 - 1990 வரை திருமதி. எம். சோமசுந்தரம் அதிபராக பொறுப்பேற்றுக் கடமையாற்றினார். இவரது காலப்பகுதியிலும் கல்லூரி தொடர்ந்தேர்ச்சியான வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவரைத் தொடர்ந்து 1991 - 2001ம் ஆண்டுவரை செல்வி. கே. பொன்னம்பலம் அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப்பகுதியிலும் பாடசாலையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விபுலானந்தர் தினம், பரிசளிப்பு விழா, Thinking Day என்பன கொண்டாடப்பட்டுள்ளன. புதிய மாடிக்கட்டிடம், விஞ்ஞான ஆய்வுகூடம் என்பனவும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தர்மவார நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. குறளமுதப் போட்டி, விளையாட்டுப் போட்டி, பொருட்கண்காட்சி என்பனவும் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து 2001ம் ஆண்டு தொடக்கம் 2014 வரை திருமதி. உ. ஜோதிநாதன் அதிபராகப் பொறுப்பேற்று மிகச்சிறப்பான முறையில் இயக்கி உள்ளார். கல்வியின் பிரதான இலக்கான உள்ளார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்வதற்கும் நிகழ்கால தேவைகள் கருதிய இலக்குடன் மாணவரின் பூரண வளர்ச்சிக்கான செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளார். இவரது தந்திரோபாய திட்டமிடலும் மற்றும் ஆசிரிய திறன் விருத்தி நடவடிக்கைகளும் பாடசாலையின் நிலைத்த வளர்ச்சிக்கும் நுண்கல்வி அறிவுத்திறத்திற்கும் இட்டுச் சென்றுள்ளன என்றால் மிகையாகாது. "அறிவு, திறன், மேம்பாடுகளுடன் பூரண ஆளுமையும் கொண்ட சமுதாயம்" எனும் உன்னத சமுதாயத்தினை கட்டியெழும்பும் மகோன்னத தூர நோக்கினைக் கொண்டு கல்லூரியின் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. இத்தகைய சகல செயற்பாடுகளிலும் உச்ச உயர்வை அடைய முழு முயற்சி (Utmost for the Highest) எனும் கல்லூரியின் மகுட வாகசம் மணிமுடியாய் இருப்பதும் சிறப்பம்சம் எனலாம். தற்சமயம் அதிபராக திருமதி. சுபா ஜேசுதாசன் பணியாற்றி வருகின்றார்.