நிறுவனம்:தி/ கும்புறுபிட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
பெயர் | தி/ கும்புறுபிட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | கும்புறுபிட்டி |
முகவரி | தி/ கும்புறுபிட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, கும்புறுபிட்டி, திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
கும்புறுபிட்டி கிராமத்திற்கு இன்றைக்கு 129 வருடங்களுக்கு முன் கல்வி அறிவைப் புகட்டி சமூகத்தை கல்வியின் பால் இட்டுச் செல்வதற்கு முனைந்து நின்று தி/ கும்புறுபிட்டி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையை ஆரம்பித்த சமூக கைங்கரியத்திற்கு வாழ்த்துக்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களை தாண்டி பாடசாலை இன்று ஓர் தரம் II பாடசாலையாக சமூகத்திற்கு கல்விப் பணியாற்றி வருகின்றது.
தி/கும்புறுபிட்டி மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் பாடசாலை 1885 ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. பாடசாலையின் 128 வருடகால வரலாற்றை தேடியறிந்து தொகுப்பதென்பது சற்றுக் கடினமான காரியமாகும். 1983ஆம் ஆண்டுக்குப் பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையும் 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிராமத்தின் இடப்பெயர்வும் பாடசாலை சேதமுற்று அழிவடைந்த நிலையில் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ள தகவல்கள் எல்லாம் அழிவுக்குட்பட்டதும் துரதிஷ்டவசமான சம்பவங்களே. இருந்த போதிலும் பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களிடம் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
03.05.1960ஆம் ஆண்டு கந்தையா ஜெபரட்ணம் என்பவரை ஆசிரியராக மெதடிஸ்தமிசன் நியமித்தது. அக்காலத்தில் கனகசபை கஜரெத்தினம் என்பவர் அதிபராக கடமையாற்றினார். இவரும் மெதடிஸ்தமிசன் மூலம் நியமனம் பெற்றவர் என்பதை அறியமுடிகிறது. அக்காலத்தில் சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்றார்கள் என்பதை க. ஜெபரட்ணம் ஆசிரியர் மூலம் அறிய முடிகிறது. பின்னர் இவர் அதிபராக கொத்தணி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
தி/கும்புறுபிட்டி மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் பாடசாலையில் திரு. க. ஜெபரட்ணம் ஆசிரியர் 03.05.1960 - 01.09.1961 வரை கடமையாற்றினார் என்பதை அறியமுடிகிறது. திரு. க. கஜரெத்தினம் அவர்களுக்கு முன் டேவிட் சில்வா என்பவர் அதிபராக கடமையாற்றினார் என்பதை அறியமுடிகிறது.
பாடசாலை வரலாற்றில் 1969ம் ஆண்டு திரு. கு. பாலச்சந்திர ஐயர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் தனது துணைவியான உஷாதேவி அவர்களுடன் அக்கிராமத்திலுள்ள பிள்ளையார் கோவிலில் பாடசாலைக்கு தங்கியிருந்து கல்விப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1969ம் ஆண்டு பாலச்சந்திர ஐயரின் மனைவி திருமதி. உஷாதேவி அம்மா 1970ம் ஆண்டு ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.
அந்தோனிப்பிள்ளை அதிபரைத் தொடர்ந்து திரு. தம்பிப்பிள்ளை இரத்தினவேல் அவர்கள் இப்பாடசாலையில் அதிபராகப் பொறுப்பேற்று 1972ம் ஆண்டு காலப்பகுதியில் கணிசமான காலம் அதிபராக இருந்தார் என்பது திருமதி. உஷாதேவி பாலச்சந்திரஐயர் மூலம் அறிய முடிகிறது. பாலச்சந்திரஜயர் தற்சமயம் இல்லை இறையடி அடைந்துவிட்டார். திரு. தம்பிப்பிள்ளை இரத்தினவேல் அதிபர் அவர்கள் தி/ இ. கி. ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபராக கடமையாற்றிய திரு. இ. முருகதாஸ் அவர்களின் தந்தையாவார்.
திரு. தம்பிப்பிள்ளை இரத்தினவேல் அதிபர் அவர்கள் 1972ம் அண்டு பாலச்சந்திர ஐயரிடம் கையளித்துச் செல்கின்றார். 1972ஆம் ஆண்டு தொடக்கம் 1983ம் ஆண்டு வரை திரு. கு. பாலச்சந்திர ஐயர் அதிபராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் இக்கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் வணக்கத்துக்குரிய பிதா செல்லர் பாடசாலை வளர்ச்சியிலும் மாணர்களின் கல்வி வளர்ச்சியிலும் கூடிய அக்கறை செலுத்தியதை அறியமுடிகிறது.
1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருமதி. தில்லைநாதன் என்பவரும் இராஜேஸ்வரி, திருமதி. சத்தியமூர்த்தி ஆகிய மூவரும் இப்பாடசாலையில் முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டனர். இக்காலப்பகுதியில் வகுப்பு 01 தொடக்கம் 5வரையுமே இருந்தது. இதற்கு ஒரு கட்டிடம் மட்டுமே இருந்தது.
1974ஆம் ஆண்டு பிரதம கல்வி அதிகாரியாக இருந்த திரு. சலீம் அவர்களின் காலப்பகுதியில் பாடசாலைக்கு ஒரு புதிய கட்டிடம் கிடைத்தது. பாடசாலை வரலாற்றில் 1975ஆம் ஆண்டு காலப்பகுதியில் வகுப்பு 6 ஆரம்பிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஆசிரியர் விடுதி கிடைக்கப் பெற்றது. அக்காலப்பகுதியில் திரு. கு. பாலச்சந்திரஐயர் விடுதியில் குடியேறி பாடசாலை வளர்ச்சியில் அக்கறை செலுத்தியுள்ளார்.
1975ஆம் ஆண்டு திரு. நா. சத்தியமூர்த்தி, திருமதி. ரோகினி ஜோதிநாதன், திருமதி. சுலோசனா தேவராஜா ஆகியோர் ஆசிரியர்களாக முதல் நியமனம் பெற்றனர். இவர்களில் திரு. நா. சத்தியமூர்த்தி தி/ செல்வநாயகபுர இந்து மகா வித்தியாலய அதிபராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். திருமதி. ரோகினி ஜோதிநாதன் திருக்கோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி உள்ளார்.
இக்காலப்பகுதியில் தமிழ் மொழித்தினப் போட்டிக்கு மாணவர்கள் தேசிய மட்டம் வரை சென்றதாக திருமதி. பா. உஷாதேவி அம்மா மூலம் அறிய முடிகிறது. தி/ இ. கி. ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபரான திரு. செ. சண்முகநாயகம் இப்பாடசாலையின் பழைய மாணவராவார்.
மேலும் 1979 ஆம் ஆண்டு பாடசாலைக்கு மற்றுமொரு புதிய கட்டிடம் கிடைக்கப்பெற்றது. பாடசாலையின் வரலாற்றில் 1981 அல்லது 1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் க.பொ.த. சா/தர பரீட்சைக்கு மாணவர்கள் முதன்முதல் தோற்றினர். 1982ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று திருமதி. உஷாதேவி பாலச்சந்திரஐயர் தி/ புனித சூசையப்பர் கல்லூரிக்கச் சென்றார். இதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு திரு. பாலச்சந்திர ஐயர் இடமாற்றம் பெற்று லிங்கநகர் கோணலிங்கம் வித்தியாலயத்திற்கு சென்றதாக அறிய முடிகிறது.
06.5.1989ஆம் ஆண்டு முதல் திரு. க. தயானந்தகுரு அவர்கள் அதிபராக இருந்துள்ளார். இவரின் காலத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவை ஆரம்பித்து வகுப்புக்கள் நடைபெற்றதாக அதிபர் மூலம் அறியமுடிகிறது. எனினும் அனுமதி வழங்கப்பட முன் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் கிராமத்து மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்தனர். 14.06.1990 முதல் பாடசாலை மூடப்பட்டு மீண்டும், 01.08.1990 பாடசாலை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் 10.01.1996ஆம் ஆண்டுவரை பாடசாலை மூடப்பட்டு 10.01.1996ஆம் ஆண்டு அதே இடத்தில் பாடசாலை இயங்க முற்பட்டது. ஆனால் மாணவர்கள் எவரும் சமுகமளிக்கவில்லை. 01.03.1997ஆம் ஆண்டு அதிபர் திரு. க. தயானந்தகுரு தி/கப்பல்துறை அ.த.க.ப இற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
01.03.1997ம் ஆண்டு அதிபர். திரு. சண்முகராஜா அதிபராகக் கடமையேற்றார். 28.01.1998ஆம் ஆண்டு பாடசாலை இப்போதிருக்கும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின் அதிபர்களாக திரு. எஸ். மகேஸ்வரன், திரு. க. தர்மரெத்தின முதலி, திரு. பெ. ஐயமுத்து போன்றோர் கடமையாற்றி, பின்னர் திரு. வி. இராஜேந்திரன் அதிபராகக் கடமையாற்றி உள்ளார்.
இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களின் விபரங்கள்...
- திரு. டேவிட்
- திரு. நெல்லிநாதன் சாமுவேல் ஒப்பிலாமணி
- திரு. க. கஜரெத்தினம்
- திரு. க. கதிரவேற்பிள்ளை
- திரு. வேலுப்பிள்ளை
- திரு. கு. பாலச்சந்திரஐயர்
- திரு. எஸ். கிருபைராஜா
- திரு. மு. பொன்னுக்கோன்
- திரு. க. தயானந்தகுரு - 06.05.1989 - 01.03.1997
- திரு. த. சண்முகராஜா - 01.03.1997 - 26.07.1998
- திரு. எஸ். மகேஸ்வரன் - 27.07.1998 - 20.11.2000
- திரு. க. தர்மரெத்தினமுதலி - 18.06.2001 - 05.01.2010
- திரு. பெ. ஐயமுத்து - 06.09.2010 - 27.09.2012
- திரு .வி. இராஜேந்திரன் - 01.10.2012