நிறுவனம்:தி/ இ. கி. ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி/ இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் திருக்கோணமலை
முகவரி ஸ்ரீ கோணலிங்கப் பிள்ளையார் ஆலயம், திருக்கோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

தி/ இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் கல்லூரி வளாகத்தில் அழகுற அமைந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தின் நூதனப் பிரதிஷ்டா மஹா ஸ்தம்பாபிஷேகம் 1997.09.07ம் திகதி சிறப்பாக நடந்திருந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவில் 2009.10.30ம் திகதி முதலாவது புனராவர்த்தன கும்பாபிஷேகம் இறை அருளால் இனிதே நிகழ்ந்தேறியது. மூன்றாவது புனராவர்த்தன கும்பாபிஷேகம் 2021.12.01ம் திகதி நடைபெற்றது.

1890களின் பிற்பகுதியில் சைவப் பெரியார்களால் தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சிறிய அளவில் ஆரம்பப் பாடசாலையாக அமைக்கப்பட்ட போது அதனைச் சூழ உள்ள பகுதிகள் தோட்டக்காணிகளாக அமைந்திருந்ததாக அறிய முடிகின்றது. அத் தோட்டக்காணிகளில் காணப்பட்ட தோட்டக் கிணறுகளும் அத்தோட்டங்களில் அருவுருவ வழிபாட்டின் அடையாளமாக காணப்பட்ட உருவங்களும் தற்போதும் பல குடியிருப்புக் காணிகளில் இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. இச் சூழல் பின்னணியில் ஆரம்பப்பாடசாலைக்காணியிலும் அருவுருவ வழிபாட்டின் உருவங்கள் சிறிய ஒரு அமைவிடத்தில் காளிகோயில் பக்கமாக உள்ள மதிலுடன் இணைந்ததாக (முன்னயை காளியப்பு மண்டபத்திற்கு முன்பாக) அமைந்திருந்ததை சமூகத்தில் பலரும் அறிவர்.

இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை, இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலையென இரு ஆரம்பப்பாடசாலைகள் இக்கல்லூரியின் ஒரே வளாகத்தில் இயங்கி வந்தன. 1925ம் ஆண்டு சுவாமி விபுலானந்த அடிகளார் இராமகிருஷ்ண மிஷனுக்காக இரு பாடசாலைகளினதும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கல்விப்பணியை ஆரம்பித்த போது கல்லூரி வளாகத்தில் அருவுருவத் திருமேனிகளை ஸ்தாபித்து ஆனைமுகத்தானாக எழுந்தருளச் செய்து தெய்வப்பணியையும் ஆரம்பித்ததாக அறியக்கூடியதாக உள்ளது.

விபுலானந்த அடிகளார் இங்குள்ள அருவுருவங்களைப் பற்றிக்கூறும் போது இது வெறும் கல் அல்ல அறிவு, ஆனந்தம், அருள் யாவும் ஒன்றிணைந்த ஆனை முகப்பெருமான், இத் தும்பிக்கையான் தான் நமது நம்பிக்கை என தன் அருள் மொழியை பகர்ந்துள்ளார். அடிகளாரது மாணவர்கள் அக்காலத்து ஆசிரியர்கள் சுவாமி அவர்களின் அருள் மொழியால் ஈர்க்கப்பட்டதுடன் அவ் அருவுருவ வழிபாடும் தொடர்ந்து இடம் பெறலாயிற்று. தினமும் விளக்கேற்றி, பலர் சாத்தி, பூசை மேற்கொள்ளும் கருமங்கள் மாணவர்கள் ஆசிரியர்களால் நம்பிக்கையுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

ஏழு தசாப்தங்களாக அதே அமைவிடத்தில் அமைந்து அருள் பாலித்த அருவுருவத்திருமேனிகள் 1992ம் ஆண்டு அன்றைய காளியப்பு மண்டபமும் நடராஜானந்தா மண்டபமும் இடிக்கப்பட்டு புதிய ஒரே பெரிய மாடிக்கட்டடம் ஒன்றை அமைக்கும் செயற்பாட்டினால் இடமாற்றி புதிய அமைவிடத்தைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. அம்பலவாணர் அகத்தின் முன் பக்கச் சுவருடன் சேர்ந்ததாகவும், வெளிப்புறமாகக் காணப்பட்ட மாடிப் படிக்கட்டுச் சுவருக்கு அண்மித்ததாகவும் சிறிய பீடம் அமைத்து அவ் அருவுருவங்களை வழிபடுவதற்கு வழி செய்யப்பட்டது.

சுவாமி விபுலானந்த அடிகளாரால் தூரதிருஷ்டியுடன் விநாயகராக நம்பிக்கையுடன் வழிபட்ட உருவங்கள் தொடர்ச்சியாக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் வழிபட்டு வந்த நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடம் பொருத்தமானதாக அமையவில்லை என்ற குறை பாடசாலை சமூகத்தில் காணப்பட்டது. பொருத்தமான இடத்தில் சிறிய அளவில் விநாயகருக்கான வழிபாட்டு இடத்தினை நிரந்தரமாக அமைத்துக் கொள்ள அப்போது அதிபராக இருந்த திரு. சி. தண்டாயுதபாணி அவர்களின்தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்தது. எனினும் இடப்பற்றாக்குறை காரணமாக நிலையத்தைக் கண்டறிவதே கஷ்டமான காரியமாக காணப்பட்டது.

இந்நிலைமையில் அம்பலவாணர் அகத்தின் வெளிப்புற மாடிப்படிகள் இடிக்கப்பட்டு புதிய காளியப்பு மண்டப படிகள் ஊடாக வழி ஏற்படுத்தப்பட்டது. மாடிப்படிகள் அகற்றப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் ஆலயத்திற்குரிய நிலையத்தை விநாயகரே காட்டியதாக அமைந்தது. 01.02.1995ல் இந் நிலையத்தை உறுதி செய்ததைத் தொடர்ந்து அதிபர் தலைமையில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கியதாக பத்துப்பேர் கொண்ட திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. குறளமுத அதிபர் திரு. கா. விநாயகசோதி அவர்களால் சிறிய ஆலயத்திற்கான படம் வரையப்பட்டதுடன் கல்வித்திணைக்கள அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டது. பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் அவர்களிடம் சாஸ்திர ரீதியான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன் குறளமுத அதிபர் திரு. கா. விநாயகசோதி அவர்களிடம் கட்டிட அமைப்புக்கான ஆலோசனையும், வழிகாட்டல்களும் பெற்றுக் கொள்ளப்பட்டது. சிறப்பான ஸ்காந்ததாஸ் ரவீந்திரராஜா ஆசாரியார் அவர்கள் கல்லூரியில் அமையும் ஆலயத்தை சிறப்புற அமைத்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் சிற்பப் பணிகளை பொறுப்பேற்றார்.

சுவாமி ஆத்ம கனானந்தாஜி அவர்கள் 26.01.1995ம் திகதி கல்லூரிக்கு வருகை தந்த போது ஆசீர்வதிக்கப்பட்ட கல்லை அத்திவாரத்துக்கான முதற்கல்லாகப் பயன்படுத்தி காந்தி ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு. பொ. கந்தையா அவர்களால் 03.02.1995ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. நிதியைத் திரட்டுவதற்கான பணியை குறளமுத அதிபர் திரு. கா. விநாயகசோதி அவர்கள் ரூபா 25000/= அன்பளிப்புச் செய்து ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெற்றோர், பழைய மாணவர், நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் பணமாகவும் பொருளாகவும் அன்பளிப்பைச் செய்து நிதித் தேவையை ஈடு செய்தனர். இச் சந்தர்ப்பத்தில் கல்லூரி மாணவர்களும், அசிரியர்களும் ஆலய அமைப்புப் பணிகளில் தமது பெறுமதிமிக்க சேவையினை சிரமதானப் பணிகள் மூலம் வழங்கியமை நிதிச் சுமையைக் குறைப்பதாகவும் அனைவரது ஆர்வமான ஈடுபாட்டை வெளிப் படுத்துவதுமாக அமைந்தது. மாணவர்களுக்கு சிறந்த அனுபவமாகவும் அமைந்தது.

சுவாமி விபுலானந்த அடிகள் அருவுருவங்களை நம்பிக்கைக்குரிய தும்பிக்கையான் என வழிபட்டதனால் விக்கினங்கள் போக்கும் விநாயகராகவும், மாணவர்கள் கல்வி அறிவைப் பெற்று அவர்களது முயற்சிகளில் சித்தி பெற அருளும் தெய்வமாகவும் இவ் ஆலயம் அமைவதால் சித்தி விநாயகர் எனும் பெயர் மிகப் பொருத்தமுடையதாக அமையப் பெற்றது. விபுலானந்த அடிகளாரின் உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்பதை உணர்த்துவதாக முழுமையாக கொங்கிறீற்றினால் வார்க்கப்பட்ட கமலத்தில் (தாமரை மலரில்) விநாயகர் வீற்றிருப்பதாக ஆலயம் அமைந்துள்ளது. இது விநாயகரது ஐம்பத்தியிரண்டு வடிவங்களில் மூலத் தோற்றமாகவும் அறிய முடிகின்றது.

குற்றங்களையும், அசுத்தங்களையும் நீக்குவதற்கு மூலமாகத் திகழும் நீர்த் தடாகத்தில் விநாயகரை அமைத்துக் கொண்டமை, எம் குற்றங்களை களைந்து வழிபாட்டில் ஈடுபடுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட வேலைகள் 1996ல் சிறிது தேக்க நிலை கண்டாலும் அதனைத் தொடர்ந்து ஆலய தூபியையும் மண்டபத்தையும் அழகுற அமைத்துக் கொள்ள இக்கால இடைவெளி வாய்ப்பாகியது. இக்காலத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய கருங்கல்லிலாலான விநாயகர் விக்கிரகம் வவுவுனியாவைச் சேர்ந்த ஸ்தபதி கூ. சண்முகவடிவேல் அவர்களால் வடிக்கப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்டு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் பேணப்பட்டது.

05.09.1997ம் திகதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் விநாயகர் விக்கிரகத்துக்கான பூசைகள் நடைபெற்று, விநாயகர் விக்கிரகம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு. இராமகிருஷ்ண மிஷன் கொழும்புக்கிளைத் தலைவர் சுவாமி ஆத்மகனந்தாஜி அவர்களுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்த சுவாமி தன்மயானந்தாஜி அவர்களும் மட்டக்களப்பு இராம கிருஷ்ண சங்கத்தைச் சேர்ந்த சுவாமி அஜராத்மானந்தாஜி அவர்களும் இணைந்து மூன்று புனிதர்களாலும் விநாயகர் விக்கிரகம் பிரதிட்சை செய்யப்பட்டது.

சுவாமி விபுலானந்த அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்டு வழிபட்டு வந்த அருவுருவங்களும் மூலஸ்தானத்திற்கு முன்புறமாக தடாகத்துடன் சேர்ந்ததாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. 06.09.1997ம் திகதி எண்ணெய்க் காப்பு நிகழ்வும் 07.09.1997ம் திகதி மகா கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. சங்காபிஷேகம் நிறைவு பெற்றதும் மகா கும்பாபிஷேக மலர் வெளியீடும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் நிர்வாக செயற்பாடுகள் கல்லூரியின் இந்து மாணவர் மன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டு தொடர்ச்சியாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

நாளாந்தம் காலையில் பூசை நடைபெறுவதுடன் வெள்ளிக்கிழமைகளிலும் விஷேட தினங்களிலும் மாலை வேளையில் அபிஷேகம் பூசை நடைபெறுகின்றமை மாணவர் ஆசிரியர் மத்தியில் ஆன்மீக சிந்தனைக்கு வழிகாட்டுவதாக அமைகின்றது. கல்லூரியின் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் கல்லூரி விநாயகர் ஆலய வழிபாட்டின் பின் ஆரம்பிப்பது கல்லூரி மரபாக உள்ளது.

பன்னிரண்டு வருடங்கள் பூர்த்தியானதைத் தொடர்ந்து புனராவர்த்தன கும்பாபிஷேகத்தை முறைப்படி சிறப்பாகச் செய்வதற்கு அன்றைய அதிபர் தலைமையில் பிரதி அதிபர்கள், இந்துமன்றப் பொறுப்பாசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிதாக புனருத்தாரணக் குழு ஒன்று அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மண்டபத்தை தூபியின் முன்பக்கத்துடன் இணைத்துக் கொள்ளும் பணிகளுடன் ஏனைய புனருத்தாரணப் பணிகள் அனைத்தும் உரிய காலத்தில் நிறைவு செய்யப்பட்டு 29.10.2009ம் திகதி எண்ணெய்க்காப்பு நிகழ்வும், 30.10.2009ம் திகதி கும்பாபிஷேக நிகழ்வும் சிறப்பாக நிகழ்ந்தேறியது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் நிதிப்பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இம்முதலாவது புனருத்தாரண கும்பாபிஷே கிரியைகள் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதமகுரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் அவர்களே பொறுப்பேற்று நடத்தி வைத்தார்.

இக்காலத்தில் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ஆலயத்தின் நித்திய பூசைகளை சிறப்பாக நாடாத்தி வைத்த மதிப்பிற்குரியவர், சிவகுமாரக் குருக்கள். சித்தி விநாயகர் ஆலய மூன்றாவது கும்பாபிஷேகம் 01.12.2021 நடத்த வேண்டும் என்ற சிந்தனை தோன்றிய போது கொவிட் காலம் தடைகளினை ஏற்படுத்தியது. விநாயகரின் பணி தொடர கல்வி சமூக மட்டத்தில் எடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கமைய பழைய மாணவர் சங்கம் இப்பணியை முன்னெடுக்க சம்மதித்து இதற்கான திருப்பணிக்குழு நியமிக்கப்பட்டு இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இப்பணியில் முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரது பங்களிப்புடன் இத்திருப்பணி நிறைவு பெற்றது. இதற்கான கிரியைக்கு ஆலோசனை வழங்கி வரும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்களின் வழிகாட்டல் மிக முக்கியமானது.