நிறுவனம்:திரு/ மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் மூதூர்
முகவரி மூதூர், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் பார்க்குமிடமெங்கும் எழிலும் வங்கக் கடலின் கடலடி தொனியும் முக்கனிகளோடு நறுசுவைத் தேனும் கொண்ட வளமிக்க அழகிய கிராமமே மூதூர் கிராமமாகும். மகாவலி கங்கையின் இயற்கை வளத்தினால் விவசாயம் செய்து தன்னிறைவு கண்டு வாழ்ந்த மக்களின் அறிவுக் கண்ணைத் திறப்பதற்காக 1865ம் ஆண்டிலே அருட்தந்தை மெஸ்ஸியே அடிகளார் ஆலயவீதியிலே ஆரம்பப் பாடசாலையொன்றை நிறுவினார்.

இது மூதூரில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பாடசாலையாகவும், மூதூரின் இதயம் போன்று காணப்பட்டு வந்தது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய வரலாற்று உண்மை. காலப்போக்கில் இடப்பற்றாக்குறை காரணமாக கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தற்போதைய இடத்திலே 1912ம் ஆண்டிலே அருட் தந்தை லாசறஸ் அடிகளார் இடமாற்றி நிறுவினார் என்பதும் வரலாறு கூறுகிறது. இது மிசனறிப் பாடசாலையாக இயங்கி வந்த போது அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதன் விளைவாக இப் பாடசாலையும் 1960ம் ஆண்டு காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது முன்னரும் தற்போதும் புனித அந்தோனியார் வித்தியாலயம் என்னும் பெயருடன் கிறிஸ்தவப் பாடசாலையாக ஒரு கிறிஸ்தவ அதிபர்களின் நிருவாகத்தின் கீழேயே இயங்கியும் வருகின்றது.

மூதூர் பிரதேசம் என்னும்போது மூதூரின் இறங்குதுறை தொடக்கம் வெருகல் கங்கைவரை எல்லையாகக் கொண்ட பிரதேசமாகும். அக்காலத்தில் சம்பூர், சேனையூர், கட்டைப்பறிச்சான், ஆலங்கேணி போன்ற பிரதேச மாணவர்களுடன் மூதூர் முஸ்லீம் மாணவர்களும் இணைந்தே சமூக, சமய வேறுபாடின்றி கல்வி பயின்று பலர் உயர் பதவிகளைப் பெற்ற வரலாறும் உண்டு. அன்றைய காலகட்டத்தில் கலை, கலாச்சார விளையாட்டுப் போட்டிகளில் பாடசாலையே முன்னணி வகித்தமையும் எல்லோரும் அறிவர். மேலும் இந்த பாடசாலையிலேயே முதன் முதலாக வாண்ட் வாத்தியக் குழுவை (Band Group) உருவாக்கி அது என்றுமே சோர்ந்து போகாமல் பல தசாப்த காலமாக இயங்கிக் கொண்டு வருவதோடு மூதூரின் பல பிரதேசத்தில் நடைபெறும் பலதரப்பட்ட நிகழ்வுகளுக்கும் இது பயன்படுத்தி வருவது பெருமைபட வேண்டிய விடயமாகும்.