நிறுவனம்:திரு/ இராஜ இராஜப் பெரும் பள்ளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜ இராஜப் பெரும் பள்ளி
வகை வரலாற்று காலத்துக்கு முற்பட்ட ஆலயம்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் பெரியகுளத்தின் பின் பகுதி
முகவரி இராஜ இராஜப் பெரும் பள்ளி, பெரியகுளத்தின் பின் பகுதி, திருக்கோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இலங்கையில் மகாசேன மன்னனால் 1200 ஆண்டுகளுக்கு முன் வீர மர காட்டுக்குள் தமிழ் பௌத்த துறவிகளுக்காக கட்டப்பட்ட இராஜ இராஜப் பெரும்பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில் இன்று வில்கம் விகாரையாக பெயர் மறுவி உள்ளது. திருகோணமலை நகரத்திலிருந்து சில கல் தொலைவில் இந்த இடம் காணப்படுகிறது. யாழ்ப்பாணம் செல்லும் பாதையில் பன்குளத்துக்கு முன்னதாக கன்னியாவைத் தாண்டி கிழக்கு திசையில் 5 Km தூரத்தில் பெரிய குளத்தின் பின் பகுதியில் இராஜ இராஜப் பெரும் பள்ளி உள்ளது.

திருகோணமலை வரலாற்று ஆராயச்சியாளர்களின் சொர்க்கபுரி என்று சொல்லும் அளவுக்கு கல்வெட்டுகளும் தொன்மைக்கால வாழ்வியல் ஆதாரங்களும் கலாசார சின்னங்களும் நிறைந்த இடம். பண்டைய காலங்களில் மக்கள் வாழ்ந்த இடங்கள் காடுகளில் மறைந்து கிடக்கின்றன. அந்த வகையில் 1929 ஆம் ஆண்டளவில் தொல்பொருளியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இடம் இராஜ இராஜப் பெரும்பள்ளியாகும். பௌத்தர்கள் இதனை வில்கம் விகார என அழைத்தாலும் தமிழர்கள் இதனை நாதனார் கோயில் என அழைக்கின்றனர். கோயில் போன்ற அமைப்புகளும் விகாரைக்குரிய அழிபாடுகளும் திராவிடக் கட்டிடக் கலை மரபுகளையும் உள்ளடக்கியதாக இந்தக் கட்டிடத் தொகுதி காணப்படுகிறது. பல தமிழ் எழுத்துகள் பொறிக்கபட்ட கல்வெட்டுக்கள் கவனிப்பாறின்றி ஆங்காங்க கிடக்கிறது. சிறந்த சுற்று மதில், குளிக்க, கால், கை, கழுவ கற்களால் ஆன தொட்டிகள், சிறந்த கழிவு நீர் கால்வாய்கள், எப்படி ஒரு நாகரிகமான மக்கள் அப்போதே வாழ்ந்துள்ளார்கள் என வியக்க வைக்கின்றது. அரண்மனை,கோயில்,விகாரை என மூன்று கட்டிடத்தொகுதியின் அடையாளங்களாக பரவிக் கிடக்கின்றன.

தற்சமயம் பௌத்த பிக்குகள் குறித்த இடத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனினும் தமிழருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட இடம் என்பது அங்குள்ள கல்வெட்டுக்களை கண்டாலே இனங்காண முடியும். பிராமிக் கல் வெட்டுக்களும், தமிழ் கல்வெட்டுக்களும் இந்த இடத்தின் வரலாற்றுக் காலத்தை உறுதிப்படுத்துகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டு கி.பி இரண்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிக்கப்பட்டு, நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டங்களில் பராமரிப்பு இன்றி அழிபாடுகளைக் கண்டுள்ளமையும் அறிய முடிகிறது. கி.பி.ஒன்பதாம் நூற்றண்டில் சோழ மன்னர்களின் ஈழம் மீதான படையெடுப்பு திருகோணமலை முழுவதையும் தங்கள் ஆழுகைக்கு கீழ் கொண்டு வந்தமையும், தமிழர் பகுதி எங்கும் அவர்கள் ஆட்சிக்கு சான்றாக கல்வெட்டுக்களும் கட்டிட எச்சங்களுமாக உள்ள இடங்களில் இராஜ இராஜப் பெரும்பள்ளி எனும் நாதன் கோயில் முக்கியம் பெறுகிறது.

இந்த இடத்துக்கு வந்த சோழர்கள் இதனைப் புனரமைத்து இராஜ இராஜப் பெரும் பள்ளி எனவும் பெயரிட்டு பலவகையான கொடையும் அளித்ததாக பேராசிரியர் பத்மநாதன் தன்னுடைய இலங்கை தமிழ் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இராஜ ராஜசோழன், இராஜேந்திர சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களும் சோழப் பிரதானிகளின் கல்வெட்டுக்களும் இதில் அடங்கும். இங்கு பதினாறு கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன. சுற்று வட்டாரத்தை மேலும் ஆய்வு செய்கிற போது இன்னும் பல கல்வெட்டுக்கள் வெளியே வரலாம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல தானம் வழங்கப்பட்டதையும் கொடை அளித்தமைப் பற்றியுமே பேசுகின்றன. இந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலமாகவும் அரண்மனைத் தொகுதியை அண்மித்ததாகவும் ஒரு வணிக மையத்தை கொண்டதாகவும் இருந்திருக்க கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் கல்பெட்டகம், குளிக்கப் பயன்படுத்தப்படும் கற்தொட்டி, சித்திர வடிவக் கற்களும் குண்டான் வடிவிலான குடைந்து தோண்டி எடுத்த தனியான கல் குண்டானும் இங்குள்ள சிறப்பம்சங்களாகும்.