நிறுவனம்:திரு/ அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம்
பெயர் | அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | திருக்கோணமலை நகரம் |
முகவரி | அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம், திருக்கோணமலை |
தொலைபேசி | 0262226439 |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம் (திருக்கோணமலை சிவன் ஆலயம்)
திருக்கோணமலை மண்ணின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய புனராவர்த்தன நூதன சப்ததள இராஜகோபுரம் அமைக்கப்பட்டு, 22 வருடங்களின் பின்னர் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்று, இன்று புகழ் பூத்து, நிற்கின்றது.
திருக்கோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டுகளைக் கடந்த ஆலயங்களில் செங்கற்பண்ணை சிவன் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வரலாறு, இன்று உள்ள எழுத்து மூல ஆவணங்கள் அடிப்படையில் 1815ஆம் ஆண்டிலும், எழுத்து மூல ஆவணங்களை கடந்த வரலாற்று சுவடுகளின் அடிப்படையில் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னரான காலப்பகுதியைச் சேர்ந்தாகவும் உள்ளது. திருக்கோணமலை மண்ணின் நீண்ட கால தமிழர் வரலாற்றுக்கு சுவடாக இவ்வாலயம் விளங்கி வந்துள்ளமை வரலாற்று ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போத்துக்கேயர் வருகையின் போது திருக்கோணமலையில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்களில் ஒன்றாக, செங்கற்பண்ணையில் இருந்த சுயம்பு லிங்கத்துடன் கூடிய கற் கோயிலும் இனங்காணப்பட்டுள்ளது. இதுவே இன்றைய அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம் ஆகும். இதன் அடிப்படையில் சிவன் ஆலயம் திருக்கோணமலையில் போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னரே நிலைபெற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் 1815 ஆம் ஆண்டில் ஆலயத்திற்கு காசியில் இருந்து வருகை தந்திருந்த சன்னியாசி ஒருவர் தான் கொண்டு வந்திருந்த ஆன்மார்த்த லிங்கத்தை செக்கடி மடாலயத்தில் (இன்றைய திருக்கோணமலை மத்திய வீதி) பிரதிஷ்டை செய்திருந்தார். 1829 ஆம் ஆண்டளவில் செக்கடி தெருவிலிருந்த காசி சிவலிங்கம், சொர்ணலிங்கம் முதலியாரால் செங்கற்பண்ணை பகுதியில் இருந்த தனது காணி 11 ஏக்கரை மையப்படுத்தி, செங்கற்பண்ணை வாழ் சைவ மக்களின் உதவியுடன், இந்திய ஆச்சாரிமாரினை கொண்டு 1829 ஆம் ஆண்டளவில் புதிய ஆலயத்தை கட்டி முடித்து, கும்பாபிஷேகம் செய்வித்தார். இதுவே சிவன் ஆலயத்தின் எழுத்து மூல ஆவணங்களின் அடிப்படையிலான முதலாவது கும்பாபிஷேகம் ஆகும்.
சொர்ணலிங்கம் முதலியாரின் பின்னர் அவரது மகனான அருணாசலம்பிள்ளை முகாமையாளராக இருந்து ஆலயத்தை நிர்வகித்து வந்தார். இவரின் இறப்பின் பின்னர் கோயிலின் நிர்வாகம் ஓர் அறக்கட்டளை உறுதி மூலம் சௌந்தரராஜ குருக்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1872 ஆம் ஆண்டில் கோயில் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல 15 பேர் கொண்ட நிர்வாக குழு உருவாக்கப்பட்டு, நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. இதனை முத்துக்குமார் அவர்கள் முகாமையாளராக இருந்து நிர்வகித்தார். 1894ஆம் ஆண்டில் திருக்கோணமலை வாழ் சைவ மக்களின் ஒத்துழைப்புடன், சிவன் கோயிலில் விசாலாட்சி அம்மனுக்கு ஒரு சன்னதி அமைக்கப்பட்டு, அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன் இரண்டாவது குடமுழுக்கு 65 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றது. 1909ஆம் ஆண்டு நடேசருக்கு சன்னதி அமைக்கப்பட்டு, சிதம்பரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஐம்பொன் நடேசர் பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன், மூன்றாவது குடமுழுக்கு 15 வருடங்களின் பின்னர் நடைபெற்றது. இவ்வாண்டில் இருந்து இன்றுவரை சிவன் கோயிலில் வருடம் இரண்டு முறை ஆனி திருவிழாவிற்கும் மார்கழி திருவெம்பாவை திருவாதிரைக்கும் தேரோட்டம் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு சென்ற கோயில் நிர்வாகம் 1925ஆம் ஆண்டு திருக்கோணமலை உதவி அரசாங்க அதிபரினால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் கடித இலக்கம் 340/N346 of 21/10/1925 மூலம் மூன்று ஆணையாளர்கள் மு. சோமசுந்தரம், வு. சீவரட்ணம், பொன்னம்பலம் ஆகியோர் நியமிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் ஆறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் ஆணைக்குழுவினால் எட்டப்படவில்லை. இவ்வாறான அரச ஆணைக்குழுக்களின் பதிவுகளால், ஆலய வரலாறு கற்களில் பதிவு செய்யப்பட்டது போன்று நிலை பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற காலத்தில் 1942ஆம் ஆண்டு சித்திரை முதல் 1944ஆம் ஆண்டு ஆனி மாதம் வரை கோயிலில் நித்திய பூசை இன்றி ஆலயம் பாழடைந்து இருந்தது. 1945 ஆம் ஆண்டு மக்கள் திருக்கோணமலை உதவி அரசாங்க அதிபரிடம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றது. 1946 ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபரால் பரிந்துரைகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு இடைக்கால நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சைவ மக்களின் உதவியுடன் பிள்ளையார், முருகன், சண்டேசுவரர், நவக்கிரகம், சூரியன், நாகதம்பிரான், வைரவர் சன்னதிகள் கட்டப்பட்டு விக்கரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 48 வருடங்களின் பின்னர் 8ம் திகதி ஆடி மாதம் 1957ஆம் ஆண்டு நான்காவது குடமுழுக்கு இடம்பெற்றது. குடமுழுக்குக்கு முன்னர் 1957ஆம் ஆண்டு ஆனி மாதம் 8ம் திகதி 17 உறுப்பினர்களை கொண்ட புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதன் தலைவராக ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கைகளின் படி திருக்கோணமலையின் பழமைமிக்க, நில புலங்களை கொண்ட ஆலயமாக சிவன் ஆலயம் விளங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
27.07.1883 இல் இடம்பெற்ற இனக்கலவரத்தில் சிவன் ஆலயத்தின் நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த கோயில் தேர் மற்றும் ஆலய காரியாலயம் எரிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஆனி மாதம் மீண்டும் எறிகணைத் தாக்குதலில் ஆலயம் சேதமுற்றது. 1983ம் ஆண்டு கலவரத்தின்போது சேதமுற்ற கோயில் கருவறையில் இருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு, மீண்டுமோர் பாணலிங்கம் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தில் முன்னர் இருந்த சிவலிங்கம் தற்சமயம் மூலஸ்தானத்திற்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளது.
பானலிங்கம் ஆனது சுயம்பு லிங்கத்திற்கு ஒப்பானது ஆகும். லிங்கம் 18 அங்குலமும், ஆவுடை 24 அங்குலமும் கொண்ட கண்ணாடி போன்ற பளபளப்பான பலவித இலக்கணங்களின் அடிப்படையில் அமைக்கப் பெற்ற, லிங்கமே தற்சமயம் ஆலய மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் 24.06.1999ஆம் ஆண்டு சந்திரனுக்கு தனி சன்னதியும், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஐந்தாவது குடமுழுக்கு 42 ஆண்டுகளின் பின்னர் இனிதே இடம்பெற்றது. திரு. க. செல்வராஜா தலைமையிலான நிர்வாக குழு தற்சமயம் குறித்த ஆலயத்தை நிர்வாகித்து வருகின்றனர்.
திருக்கோணமலையில் நீண்ட கால வரலாற்றை கொண்ட, திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்த அளவில் நில புலங்களை கொண்ட ஆலயங்களில் சிவன் ஆலயம் முக்கியமான ஒன்றாகும் என்பதில் மாற்று கருத்தில்லை.