நிறுவனம்:சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சேனையூர்
முகவரி சேனையூர், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருகோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரப்பற்றில் சேனையூர்க் கிராமத்தின் மத்தியில் இவ்வாலயம் இருக்கின்றது. அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்துள்ள, திருக்கரைசையம்பதி சிறப்புற்று விளங்கிய காலத்தில் சைவமக்கள் நெருக்கமாய் வாழ்ந்த கிராமங்களில் இதுவுமொன்று. குளக்கோட்ட மன்னன் கோணேஸ்வரத் திருப்பணிகளை நிறைவேற்றிய பின் விவசாய நோக்கங்களுக்காக அல்லைக் குளத்தைக் கட்டி மக்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து குடியேற்றினான். அவ்வாறு குடியேற்றப்பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்த முத்துலிங்க சந்நியாசி என்பவர் இவ்வூருக்கு அருகிலுள்ள மருதடிச்சேனை என்று கூறப்படும் இடத்தில் தங்கியிருந்தார். அவருடைய தபோபலத்தால் இந்த இடம் தெய்வீகமானதாகப் பிரகாசித்தது. அவர் இவ்வூரில் வாழ்ந்துவந்த திரு. கந்தப்பர் என்பவருக்கு, இந்த இடத்தில் ஆலயம் அமைக்கும்படி அருள்வாக்குக் கொடுத்தாராம். ஆலயம் அமைப்பதற்குரிய நிதியும் கொடுத்துச் சென்றதாகக் கூறுகின்றார்கள். அடுத்த முறை அந்தச் சந்நியாசி வந்தபோது ஆலயம் அமைக்கப்படாததைக் கண்டு வருந்தி தனது அருட் கட்டளையை உதாசீனம் செய்ததால் கந்தப்பர் குடியினர் மீது சினங்கொண்டு சாபமிட்டாராம். அந்தச் சாபம் பரம்பரை பரம்பரையாக அந்தக் குடும்பத்தினரைத் தாக்கிவருவதாகக் கூறுகின்றார்கள். பிறக்கும்போது நன்றாகப் பிறக்கும் பிள்ளைகள் வளர்ந்து வரும்போது எலும்புருக்கி நோயால் தாக்கப்படுகின்றார்களாம். ஏதாவது ஒரு குடும்பத்தில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ இந்த நோய் காணப்படுகின்றதாம்.

சினங்கொண்ட சந்நியாசியார் இங்கு வாழ்ந்திருந்த தியாகராசா தில்லைவனம் என்பவரை அழைத்து விபூதி மந்திரித்து அவருடைய வாயிலிட்டு, இந்த இடத்தில் ஆலயம் அமைக்கும் படியும், குளக்கோட்ட மன்னனால் கட்டப்பட்ட அல்லைக் குளத்தடியில் அரசடிவானில் உள்ள பிள்ளையாரை எடுத்துவந்து பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினாராம். சந்நியாசியுடைய தபோபலத்தால் தில்லைவனம் என்பவர் கல்வியறிவும், செல்வமும் பெற்றுச் சிறப்புற்று விளங்கினார். சுவாமியின் கட்டளையைச் சிரமேற்கொண்டு இந்த ஆலயத்தின் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங்களைக் கொண்ட சிறிய ஆலயத்தை அமைத்து அல்லைக்குளத்துப் பிள்ளையாரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டுவந்தார்கள். தில்லைவனம் பரம்பரையில் வந்தவர்கள் வறுமையால் அல்லல்படும் போது முன்னர் சாபத்திற் காளான கந்தப்பு குடியினர் சாப நீக்கத்திற்காக ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்து 1887ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தனர். ஆலயம் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் போது 1929ஆம் ஆண்டு ஒரு கும்பாபிஷேகமும், பின்னர் ஸ்தம்பமண்டபங்களைக் கட்டிப் புனருத்தாரணத் திருப்பணிகளை நிறைவேற்றி 1948 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகமும் செய்துள்ளனர்.

அதன்பின் வசந்த மண்டபம், வைரவர் கோவில், சந்தானகோபாலர், சுப்பிரமணியர் என்பவர்களுக்கும் ஆலயங்கட்டி 1972ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள். நவக்கிரக கோவிலும், வெளி மண்டபமும் அமைத்து ஆலயம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. ஆலயத்தில் நடைபெற்றுவந்த அலங்கார உற்சவத்தை 1981ஆம் ஆண்டிலிருந்து கொடியேற்றி மகோற்சவமாக நடத்துகின்றார்கள்.

அழகிய தூபியையுடைய கருவறையில் விநாயகப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மகாமண்டபத்தில், இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட, ஆதியில் ஸ்தாபித்திருந்த விநாயகர் சிலா விக்கிரகமும், எழுந்தருளி விநாயகரும், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சந்திரசேகரர், பால சுப்பிரமணியர், அஸ்திரதேவர் என்பனவும் உண்டு. பரிவார மூர்த்திகளும் சிறப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனி உத்திரத்தைக் கொடியேற்ற தினமாகக் கொண்டு தொடர்ந்து பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. மகாவலி கங்கையின் கழிமுகத்தில் பிள்ளையார் சமுத்திர தீர்த்தமாடுவார். ஆவணிச் சதுர்த்தி, ஆடி அமாவாசை, கெளரி விரதம், கந்தசஷ்டி, பெருங்கதைவிரதம், திருவெம்பாவை என்பன விசேட விழாக்களாக நடைபெற்று வருகின்றன.

மூன்றுகாலப்பூசை தினமும் நடைபெறுகின்றது. இவ்வாலயத்தில் ஒரு செப்பேடு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. அவ்வேட்டிலுள்ள முக்கிய பகுதிகள்...

"திரிகோணாசலத்தில் தென்பாரிசத்தில் திருக்கொட்டி யாபுரபற்று மருதடிச்சேனையில் இருக்கின்ற (தியாகராசா மகன்) ஆயிரத்தி என்ணூற்றி எண்பத்தி ஏழாம் ஆண்டு வைகாசி மாதத்தின் திங்கட்கிழமை 12ஆம் திகதி 12 மணிக்கு... கடாச்சம் பொருந்திய முத்துலிங்க சந்நியாசியார் எனது சொந்தக் காணியில் நிலம் எடுத்து விக்கினேஸ்வரருக்கு ஆலயம் கட்டும்படி உத்தரவு தந்தார். அவருடைய உத்தரவுப்படி ஆலயம் கட்டிவிச்சி அந்தப் பொன்னாச்சியார் வந்து அபிஷேகம் செய்து வைத்தோம். பூசை நெய்வேத்தியம் செய்து வந்தோம். ஒருவருடம் சென்றதன் பின் அவரின் குடியாராகிய சின்னாச்சியார் என்பவர் இந்தியாவுக்குச் சென்று தட்டு முட்டுச் சாமான்களும் செய்து கொடுத்தோம். இந்தத் தட்டு முட்டுச் சாமான்கள், கந்தபுராண ஏடு, காசிகாண்ட ஏடு, உபதேசகாண்ட ஏடு, குத்துவிளக்கு இரண்டு, வெங்கலக் கரண்டி ...(இவ்வாறு ஆலயப் பொருட்களின் பட்டியலொன்று எழுதப்பட்டிருக்கின்றது.)"

பண்டைக்காலத்தில் ஆலயத்தைப் பரிபாலனம் செய்துவந்த கந்தப்பர் பரம்பரையும், தில்லைவனம் பரம்பரையும் தற்போது ஒரு பரிபாலன சபையை அமைத்து ஆலயத்தைச் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.