நிறுவனம்:சிவயோகபுரம் நடேசர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவயோகபுரம் நடேசர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சிவயோகபுரம்
முகவரி சிவயோகபுரம் நடேசர் ஆலயம், சிவயோகபுரம், திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இலங்கையிலுள்ள ஒரேயொரு நடேசர் ஆலயம் என்ற தனிப்பெருமையை உடையது இவ்வாலயம். திருக்கோணமலையிலிருந்து அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் திருக்கோணமலைப் நகரத்தில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாலயம் இருக்கின்றது. மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள ஒரு சமவெளியில் ஆண்டான் குளத்திற்குச் சமீபமாக இருக்கும் இவ்வாலயம் அமைதியான சூழலில் அமைந்திருக்கின்றது. தற்சமயம் மாகாண சபை ஆலயத்தின் முன்னால் அமைந்துள்ளது.

இங்கிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாய் வெந்நீரூற்றுக்கள் இருக்கின்றன. குளக்கோட்டு மன்னன் கட்டிய கோணேசர் கோவில் போத்துக்கீசரால் அழிக்கப்பட்டபின் கோணேசப் பெருமானுக்கு புதியதோர் ஆலயம் அமைக்குந் திருப்பணியை நிறைவேற்றி 1963ஆம் ஆண்டு கோணேசப் பெருமானுக்கு முதற் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த தருமசீலரும், திருக்கோணமலை முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. ந. இ. இராஜவரோதயம் அவர்கள் தர்மசாதனம் செய்த காணியில் நடேசர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

சமய, சமூகப் பணிகளால் மக்களுக்குத் தொண்டு செய்து கொண்டிருக்கும் சிவயோக சமாஜத்தை ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் ஸ்தாபித்தார்கள். திருக்கோணேஸ்வரத்தில் கருவுற்ற சிவயோக சமாஜம் திருக்கோணமலைப் நகரத்தில் அருளொளி வீசிக்கொண்டிருந்த காலத்தில் சேவைகளுக்கு மகுடம் வைத்தாற்போல விளங்குவது இந்த நடேசர் ஆலயம். இலங்கையில் நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோவில் இல்லாதிருந்த குறையை நிறைவுசெய்து முதன்முதல் நடேசராலயத்தைச் சுவாமி கெங்காதரானந்த அவர்கள் அமைத்துள்ளார்கள். கருவறையில் சிதம்பரத்திலிருந்து யாழ் நகர் பொறியியலாளர் ஸ்ரீ இ. வைத்திலிங்கம் அவர்களால் கொண்டுவரப்பட்ட நடராஜத் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது.

ஆலயத்தின் உள்வீதியின் நிருதி மூலையில் விநாயகருக்கும், வாயு மூலையில் பாலசுப்பிரமணியருக்கும், ஈசானத்தில் வைரவருக்கும் தனித்தனியே அழகிய ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. மணிக்கோபுரமும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. பஞ்சாக்கரப் படிகளையுடைய அம்பலத்தோடு, சிற்சபையுள் சிவகாமசுந்தரி சமேதராக நடராஜப் பெருமான் அனவரதத் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் அருட்கூத்தை அடியார்கள் கண்டுகளிக்கவேண்டிய அழகிய ஆலயமாக இது அமைந்திருக்கின்றது. பஞ்சாக்கரப் படியை அடுத்து மகா மண்டபம், ஸ்நபன மண்டபம், தரிசன மண்டபம் யாவும் சாஸ்திர விதிகளுக்கமைவாக, புதுமைப் பொலிவோடு அழகாகக் கட்டப்பட்டிருக்கின்றன. மாறுபடாத இந்துமத தத்துவங்கள் நிலையாயிருப்பதனையும், மாறுபட்டுவரும் மக்களுடைய வாழ்க்கையின் எதிர்காலச் சுபீட்சத்தையும், செந்நெறியையும் கருத்திற் கொண்டு இவ்வாலயத்தை ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் அமைத்துள்ளார்கள். தொடர்ந்து ராஜகோபுரத்தையும் நிர்மாணிப்பதற்கு சுவாமிஜீயுடைய திருவுள்ளத்தில் எண்ணம் நிறைந்திருக்கின்றது. மக்கள் தங்கியிருந்து வழிபாடு செய்வதற்கும், யோகசாதனைகள் பயில்வதற்கும் மடங்களும் கட்டப்பட்டிருக்கின்றன.

இவ்வாலயத் திருப்பணியைச் சுவாமிஜியவர்கள் 1970ஆம் ஆண்டு ஆரம்பித்து 1972ஆம் ஆண்டு ஆனிமாதம் பன்னிரண்டாம் திகதி மகாகும்பாபிஷேகத்தைச் செய்துவைத்தார்கள். இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நடராஜ மூர்த்தியைச் சிதம்பரத்திலிருந்து கொண்டுவந்து யாழ்ப்பாணத்தில் பத்து நாட்களாக நடைபெற்ற மகாயாகத்தில் வைத்திருந்து. அங்கிருந்து சிவயோக சமாஜ யோகாச்சிரமத்திற்குக் கொண்டு வந்தார்கள். யோகாச்சிரமத்திலிருந்து நகர்வலமாகச் சென்று இங்குள்ள ஆலயங்களுக்குத் தரிசனங்கொடுத்து சைவமக்கள் பயபக்தியோடு தொடர சைவஸ்தாபனங்கள் பஜனை செய்து கொண்டு சிவயோகபுரத்திற்கு எழுந்தருளச் செய்து பிரதிஷ்டை செய்தார்கள்.

சாஸ்திரோத்தமான கிரியைகளோடு ஜலாசயப் பிரதிஷ்டையாக நடராஜப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றார். இம்மாபெரும் திருப்பணிக்கு சுவாமிஜியவர்களுக்கு அணுக்கத் தொண்டர்களாயுள்ள சில அன்பர்கள் உடனிருந்து திரிகரண சுத்தியோடு உதவிபுரிந்தார்கள். அவர்கள் நினைவிலிருத்தப்பட வேண்டியவர்கள். திருக்கோணமலையில் இவ்வாலயம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பூஜைகள், பூஜைக்குரிய திரவியங்கள், பூஜை முறைகள் ஆகமசாஸ்திர முறை வழுவாமல், கால தேச வர்த்தமானத்திற்கேற்ற வகையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த காலத்தையும், இனிவரும் காலத்தையும் கருத்திற்கொண்டு இவ்வாலயம் இயங்கிவருகின்றது. சைவசமயத்தவர்கள் உன்னிப்பாகக் கவனித்தால் உண்மை விளங்கும்.

தினமும் காலைச்சந்தி, உச்சிக்காலம், மாலைச்சந்தி ஆகிய மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. நடராஜப் பெருமானுக்குரிய ஆறு அபிஷேகங்களும் அலங்காரப் பூஜை களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திருவாதிரைவிழா பெருவிழாவாக நடைபெறுகின்றது. சிவராத்திரி விழாவும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கன்னியாய், அன்புவளிபுரம், பாலையூற்று, பாரதிபுரம், வரோதயநகர் முதலிய அயல்கிராமங்களிலிருந்தும், வேறு பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.