நிறுவனம்:சித்த மருத்துவத் துறை, திருக்கோணமலை வளாகம்
பெயர் | சித்த மருத்துவத் துறை, திருக்கோணமலை வளாகம் |
வகை | பல்கலைக்கழக துறை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருக்கோணமலை |
ஊர் | கோணேசபுரி |
முகவரி | சித்த மருத்துவத் துறை, திருக்கோணமலை வளாகம், கோணேசபுரி, திருக்கோணமலை |
தொலைபேசி | 0262222644 |
மின்னஞ்சல் | headusmtc@gmail.com |
வலைத்தளம் |
இலங்கை சுதேச மருத்துவங்களில் ஒன்றாக காணப்படும் சித்த மருத்துவம் தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மக்களின் அன்றாட வாழ்விலும் வேரூன்றியுள்ளது. அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் சித்த மருத்துவத் துறை சார் விருத்தியின் அவசியத்தை அறிந்தும், மேலும் சித்த மருத்துவத்தின் முதல் முனியாக கருதப்படும் அகத்தியர் தனது பல்கலைக்கழகத்தை நிறுவியது திருக்கோணமலையின் மூதூர், கங்குவேலி என்னும் இடத்தில் என்பதாலும், இவற்றின் அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த திருமதி. கே. தங்கேஸ்வரி அவர்களின் கோரிக்கையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ பீடம் ஒன்றை நிறுவும் பணி கவனத்தில் கொண்டுவரப்பட்டது. இவற்றின் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சித்த மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வேண்டுகோள் கடிதத்தின் அடிப்படையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவையுடன் கலந்துரையாடி, சித்த மருத்துவ பீடத்தை திருக்கோணமலை வளாகத்தில் நிறுவுவதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பணியில் பலர் தங்களுடைய அளப்பெரிய சேவைகளை ஆற்றி உள்ளனர்.
2005 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 175வது கவுன்சிலில் இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டதுடன், 2007 ஆம் ஆண்டு சுதேச மருத்துவ குழுவின் நீண்ட விவாதத்தின் பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைமானி பட்டத்திற்கு (Bachelor of Siddha Medicine and Surgery) 2007/2008 கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் 20 பேரை ஒரு வருடத்திற்கு உள்வாங்குவது என்ற முடிவுக்கு வந்தது. இந்தச் சூழ்நிலையில் சித்த மருத்துவத்துறை ஒரு தனியான துறை நிலையில் இருப்பதனால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருக்கோணமலை வளாகத்தில் காணப்படும் பீடங்களுக்குள் உள்வாங்கப்பட முடியாத நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறை காணப்படுவது போன்று தனியான நிறுவனமாக இயங்குவதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 247 வது கவுன்சிலில் இளங்கலைமானி பட்டத்தை வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க Faculty of Applied Science உடன் துறையை இணைக்க முடிவு செய்யப்பட்டது.
2015/16 கல்வியாண்டில் இருந்து மாணவர் உள்ளிர்ப்பு 75 ஆக அதிகரிக்கப்பட்டதுடன், தற்பொழுது 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்த மருத்துவத் துறை சித்த மருத்துவ தனியான பீடமாக உயர்த்தப்படுவதற்குரிய செயற்பாடுகள் நிறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. மேலும் இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையில், 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சித்த மருத்துவத் துறையை மேலும் உயர்த்துவதற்காக உபகரணங்கள், ஆய்வு கூட உபகரணங்கள், தளபாடங்கள், புத்தகங்கள், வாகனங்கள் என்பன இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்டது. இந்திய தூதரகத்தின் உதவியுடன் முக்கிய ஆய்வு கூடகங்கள் அமைக்கப்பட்டது.
மேலும் போதனை வைத்தியசாலை அமைப்பதற்காக 7 ஏக்கர் விசாலமுடைய காணி அரசாங்கத்தினால் கோணேசபுரி சந்தியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சித்த மருத்துவ துறையின் தலைவராக வைத்திய கலாநிதி வல்லிபுரம் அனவரதன் அவர்கள் செயல்பட்டு வருகின்றார். சித்த மருத்துவத்துறை திருக்கோணமலை வளாகத்தில் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்பட்டு வருவதுடன், இளங்கலை மானிப்பட்டத்தின் இறுதியில் ஆய்வு ஒன்றையும் மேற்கொள்ள வேண்டிய வசதிகளுடன் காணப்படுகின்றது.