நிறுவனம்:சாம்பல்தீவு கிராமம்
பெயர் | சாம்பல்தீவு கிராமம் |
வகை | கிராமம் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருக்கோணமலை |
ஊர் | சாம்பல்தீவு |
முகவரி | சாம்பல்தீவு, திருக்கோணமலை |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
சாம்பல்தீவு கிராமமானது திருகோணமலை நகரத்திற்கு வடக்கே 18 கிலோமீற்றர் தொலைவில் திருகோணமலை - புல்மோட்டை வீதியை மத்தியில் கொண்டு 13.3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கிழக்கு - தெற்கு எல்லையாக கடல்நீர் ஏரியையும், கிழக்கு - வடக்கு எல்லையாக கடலையும், வடக்கு - மேற்கு எல்லையாக ஒரு சிறு மலைத்தொடரையும், மேற்கில் சிறுப்பிட்டிக்குளத்தையும் எல்லைகளாக கொண்டு அமைந்துள்ளது. சல்லி, மாங்கணாய், செம்பாடு, ஆத்திமோட்டை, கோணேசபுரி, இலுப்பைக்குளம், சிறுப்பிட்டி பகுதிகளை உள்ள தமிழ் கிராமம் ஆகும்.
இப்பிரதேசத்தின் பெயர் தொடர்ந்து பலகாலமாக சாம்பல்தீவு என்று வழங்கி வருகின்றது. இப் பெயருக்கு ஏற்றாற்போல இப்பிரதேசம் எல்லாப் பகுதியிலும் கடலால் சூழப்பட்டுத் தீவாக இல்லை. ஆனால் இது எல்லைகளாகக் கடலையும், கடல்நீர் ஏரியையும், வயல் நிலங்களையும், மேட்டு நிலங்களையும் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசமாகவிருப்பதனால் "தீவு" என்று இப்பகுதி மக்களால் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் தீவு என்ற சொல்லுடன் "சாம்பல்" என்ற ஒரு சொல்லையும் இணைத்து எப்படிச் சாம்பல்தீவு என்று வழங்கப்படலாயிற்று என்ற கேள்வி எழுகின்றது. இப் பிரதேசத்திற்கு முக்கியமான கோணேஸ்வரர் ஆலயத்தில் முற்காலங்களில் பெரும் வேள்வி நடந்ததென்றும், அவ்வேள்வி நடைபெறுவதற்கு மூட்டப்பட்ட பெரும் தீயில் இருந்து வந்த சாம்பல்கள் இப் பகுதியில் கொட்டப்பட்டதென்றும், அதனாலேயே இப்பகுதி சாம்பல்தீவு என்று வழங்கப்படலாயிற்று என்று ஒருபகுதி மக்கள் கூறுகின்றனர். அதாவது கோணேஸ்வரர் ஆலயத்தின் சாம்பல் கொட்டப்பட்ட பகுதியாகையால் "சாம்பல்தீவு" என்று பெயர் வழங்கப்படுகின்றது என்பது இவர்களது கருத்தாகும். ஆனால் இன்னொரு பகுதி மக்கள் சாம்பல்தீவு என்ற பெயருக்குரிய காரணமாக வேறொரு கருத்தைக் கூறுகின்றனர். அதாவது "ஆம்பல்" எனப்படும் பெறுமதி வாய்ந்த ஒரு வகைக் கடல்படு திரவியம் இப்பிரதேசத்தின் கடற்கரைகளில் வந்து அடைவதனால்தான் இது முதலில் "ஆம்பல்தீவு" எனப்பட்டதென்றும் பின்பு "ஆம்பல்தீவு” என்ற சொல்தான் மருவி "சாம்பலத்தீவு" என்று வந்துள்ளது என்று இவர்கள் கூறுகின்றனர்.
பெயருக்குரிய இத்தகைய வரலாறு கொண்ட பிரதேசம் திருகோணமலை நகரத்தையும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும் தமது ஆதிக்கத்துக்குட்படுத்தியிருந்த அரசர்களின் செல்வாக்குக்குட்பட்டிருந்தது என்பதை அறிய முடிகின்றது. இக்கிராமத்திற்குச் சற்றுத்தொலைவில் உள்ள குச்சவெளி, திரியாய் ஆகிய கிராமங்களில் பல்லவர் காலக் கல்வெட்டுக்களை கண்டெடுத்துள்ளதாக திரு. செ. குணசிங்கம் என்ற வரலாற்று ஆசிரியர் “திருக்கோணேஸ்வரம்” என்ற தன்னுடைய ஆய்வு நூலில் எழுதியுள்ளார். எனவே குச்சவெளி, திரியாய் ஆகிய கிராமங்களில் பல்லவர் ஆதிக்கம் இடம் பெற்றிருக்கிறது எனக்கொள்ளலாம். திருகோணமலை நகரத்தையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஆதிக்கத்துக்குட்படுத்தியிருந்த பல்லவர்கள் குச்சவெளி, திரியாய் ஆகிய கிராமங்கள் வரையும் தமது ஆதிக்கத்தை வைத்திருந்தார்கள். எனவே அக்கிராமங்களுக்கும் திருக்கோணமலைக்கும் உட்பட்ட பகுதியான சாம்பல்தீவுக் கிராமமும் அவர்களது ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கவேண்டும். பல்லவர் காலத்தில் பல்லவர்களது ஆதிக்கத்திற்குள் உட்பட்டிருந்தது மட்டுமல்லாமல் சோழர்களது ஆதிக்கத்திற்குள்ளும் இக்கிராமம் இடம்பெற்றுள்ளது.
இக்கிராமத்தின் கரையோரப்பகுதி ஆகிய "மாங்கணாய்" என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சோழர் காலத்திற்குரியது, என்று திரு. செ. குணசிங்கம் அவர்கள் திருக்கோணேஸ்வரம் என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கல்வெட்டில் மாங்கணாய் பகுதி மன்னன் ஒருவரால் நன்கொடையாக அரண்மனை உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்திலிருந்து 03 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெரியகுளம் என்ற பகுதியிலும், 07 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அயல் கிராமமான நிலாவெளி என்ற கிராமத்திலும் சோழர்காலக் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றிலிருந்து நோக்குகின்றபோது சோழர்களது ஆதிக்கத்திற்குள்ளும் இக் கிராமம் உட்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றது. இவ்வாறு காலத்திற்குக் காலம் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும், திருகோணமலை நகரத்தையும் தமது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த மன்னர்களின் ஆதிக்கத்திற்குள் சாம்பல்தீவுக் கிராமமும் உட்பட்டிருக்கிறது.
அதன் பின்பு பலகாலம் இக்கிராமத்தின் வரலாறு எப்படியிருந்தது என்பதை அறியமுடியவில்லை. பின்னரான காலப்பகுதிகளில் குறித்த பகுதி சிறு சனத்தொகையுடன் காணப்பட்டுள்ளது. பின்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இப்பிரதேசத்தின் வரலாற்றை அறியக்கூடியதாகவுள்ளது. குடியிருப்புக்கள் இப்பிரதேசத்தின் கரையோரப்பகுதியாகிய "மாங்கணாய்" என்ற பகுதியிலும், இப்பிரதேசத்தின் மேற்கிலுள்ள பகுதியாகிய "சிறுபிட்டி" என்ற பகுதியிலும் காணப்பட்டிருக்கின்றன. சிறுப்பிட்டி என்ற இடத்தில் ஒருசில குடியிருப்புக்களே இருந்திருக்கின்றன. மாங்கணாய் என்ற பகுதியிலே ஏறக்குறை 20 குடும்பங்கள் அளவில் இருந்திருக்கின்றன.
1824ம் ஆண்டு மாவட்ட ஆட்சியாளர்களால் சேகரிக்கப்பட்டு வருமான ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்ட சனத்தொகை பற்றிய தரவுகளை 1827ம் ஆண்டில் "NICHOLAS BERGMAN" என்பவர் தொகுத்து அச்சிட்ட "RETURN OF THE POPULATION OF THE ISLAND OF CEYLON" என்ற அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மாங்கணாய் என்ற பகுதியில் 1824இல் 156 பேர் இருந்ததாகவும், சிறுப்பிட்டி என்ற பகுதியில் 10 பேர் இருந்ததாகவும் காட்டப்பட்டுள்ளது. எனவே ஆரம்பக்குடியிருப்புக்கள். மாங்கணாய், சிறுப்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே காணப்பட்டிருக்கின்றது.
இக்கிராமத்தின் அயல்கிராமங்களான கும்புறுப்பிட்டி, கன்னியாய், உப்புவெளி போன்ற பகுதிகளில் இருந்தும், திருகோணமலை நகரத்திலிருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் குடிவரவு இடம் பெற்றிருக்கின்றது. இவ்விதம் இடம் பெயர்ந்து வந்து சாம்பல்தீவுப் பிரதேசத்தில் குடியமர்ந்த மக்கள் இங்குள்ள விவசாயத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இவர்கள் சாம்பல்தீவு முதல் பெரியகுளம், ஆலங்குளம் போன்ற தூர இடங்களிலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.1880ம் ஆண்டு சாம்பல்தீவில் முதல் கல்வி நிறுவனமாக, சாம்பல்தீவு மெதடிஸ்த மிஷன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த கிராமம், திருக்கோணமலை கல்வி வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
1880ம் ஆண்டளவில் இப்பிரதேசத்திற்கு ஒரு குறிப்பிடக்கூடிய குடிவரவு இடம்பெற்றுள்ளது. இப்பிரதேசத்தின் கிழக்கு மூலையில் காணப்படும் சல்லி என்றழைக்கப்படும் பகுதியில் வாழுகின்ற ஆரம்பக் குடிகளாகவே இக்குடிவரவு காணப்பட்டிருக்கின்றது. சல்லி என்கிற இப்பகுதிக்கு மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மக்களே வந்து குடியேறியுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயுள்ள மீன்பிடி மக்கள் அதிகமாகவாழ்கின்ற பகுதியாகிய வல்வெட்டித்துறை என்னும் பகுதியிலிருந்தே வந்து குடியேறியுள்ளனர்.
1901ம் ஆண்டு புள்ளி விபரக்கணிப்பீட்டு அறிக்கையில் சாம்பல்தீவின் சனத்தொகை சிறுப்பிட்டி, செம்பாடு சல்லி, என்ற பகுதிகளுக்குரியதாக பிரிந்து எழுதப்பட்டிருக்கின்றது. 1900ஆம் ஆண்டளவில் இக்கிராமத்தின் மத்திய பகுதியான செம்பாடு என்ற பகுதியில் மக்கள் குடியமரலாயினர். 1901ம் ஆண்டு புள்ளி விபர அறிக்கையில் செம்பாடு என்ற பகுதியில் சனத்தொகையிருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. சாம்பல்தீவு கிராமம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தொழிலடிப்படையிலான இரு பிரிவு மக்கள் வாழுகின்ற கிராமமாக மாறியிருக்கின்றது. சல்லிப் பகுதி மக்கள் மீன்பிடியையும், ஏனைய மக்கள் விவசாயத்தையும் அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்துவரலாயினர். 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் திருகோணமலை நகரம் தாக்கப்பட்டபோது குண்டுவீச்சுச் சம்பவங்களின் அதிர்ச்சியைக் கண்டு பயந்து சாம்பல்தீவு பிரதேச மக்கள் பலர் தற்காலிகமாகக் குடிபெயர்ந்து சென்று அண்மைக் கிராமங்களான நிலவெளி, பனிக்கட்டிமுறிப்பு, கும்புறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் சிறிது காலம் வாழ்ந்திருக்கின்றார்கள். இக்காலப் பகுதியில் பல மக்கள் தமது உடைமைகளை இழந்தும் உள்ளார்கள். சிலர் புதிய உடைமைகளை தேடியும் உள்ளார்கள்.
யுத்த காலத்தில் பிரித்தானிய அதிகாரிகளது தற்காலிக வாழ்விடப்பகுதியாகவும், யுத்த சேவைக்கு துணைபுரியும் துணை அலுவலகங்கள் அமைக்கப்பட்ட பகுதியாகவும் சாம்பல்தீவுப் பிரதேசம் காணப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் கடற்கரை ஓரங்களில் யுத்த வீரர்கள் தங்கியிருந்து திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கிவரும் கப்பல்களை அவதானிக்கக்கூடியதாக பல கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. இவையாவும் அழிந்த நிலையில் காணக்கூடியதாகவிருந்தன. சாம்பல்தீவுப் பிரதேசத்தின் எல்லையில் காணப்படும் மேட்டு நிலத்தின் உச்சியில்கூட இத்தகைய அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அவ்வலுவலகம் திருக்கோணமலையிலிருந்து கடற்படைத் தளத்துடன் தொலைத்தொடர்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருந்தது. இவ்வலுவலகமும் தற்போது அழிந்துவிட்டது.
1950ம் ஆண்டின் பின்பு இப்பிரதேசத்தின் விருத்தியுறாமல் இருந்த காட்டர்ந்த பகுதிகள் விருத்தியடையத் தொடங்கின. குறிப்பாக இக் கிராமத்தின் வடக்கு - மேற்கு எல்லையைச் சார்ந்துள்ள பகுதியாகிய ஆத்திமோட்டை என்னும் பகுதி இக்காலத்தில் விருத்தியுறலாயிற்று. இப்பகுதியில் மக்கள் பழைய குடியிருப்புப் பகுதியில் இருந்தும் கிராமத்திற்கு வெளியில் இருந்தும் வந்து குடியேறலாயினர். 1970ஆம் ஆண்டின் பின்பு இக்கிராமத்தின் மேற்குப் பகுதியைச் சார்ந்திருக்கும் இலுப்பைக்குளம், சாளம்பைமோட்டை ஆகிய பகுதிகள் விருத்தியுறலாயின. இப்பகுதிகளில் மக்கள் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதுடன் குடியமரவும் தொடங்கினர்.
2006ஆம் ஆண்டில் இக்கிராமத்திற்கு மற்றொரு முக்கியமான குடிவரவு இடம்பெற்றுள்ளது. திருக்கோணமலையின் பல பகுதிகளிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் சாம்பல்தீவின் கிழக்கு - மேற்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியான கோணேசபுரி என்னும் பகுதியில் குடியேற்றப்பட்டனர். 400 குடும்பங்கள் வரையில் இப்பகுதியில் குடியேறியுள்ளனர்.
இவ்வாறு சாம்பல்தீவு கிராமத்தின் வரலாறு மங்கணாய் கல்வெட்டு, சோழர், பல்லவர் காலம் முதல் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னைய காலப்பகுதிக்கு நீண்டுள்ளது.