நிறுவனம்:சந்தியோகுமாயோர் யாத்திரை ஸ்தலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்தியோகுமாயோர் யாத்திரை ஸ்தலம்
வகை ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கிளாலி
முகவரி கிளாலி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


போர்த்துக்கேயர் காலத்தில் கிளாலி புனித சந்தியோகுமாயோர் தேவாலயமாக 1620 ஆம் ஆண்டளவில் உருவானதாக வரலாறுகள் மூலம் தெரிய வருகிறது. அக்காலத்தில் யேசு சபைக் குருக்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டில் தெல்லிப்பளையை நடுநிலையமாகக் கொண்டு அங்கு சம்பேதுரு பாவிலு ஆலயத்தை கட்டி சமயப் பணியாற்றி வந்தனர். மனம்திரும்பிக் கத்தோலிக்க சமயத்தை தழுவியவர்களுள் ஒருவராக பேதுரு புலவரும் விளங்கினார். கிளாலி புனித சந்தியாகுமாயோர் தேவாலயத்தை நிர்வாகித்தவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற ஒரு படைப்பை எழுத்துருவில் தருமாறு கேட்டதற்கிணங்க பேதுரு புலவர் குறித்த காலத்தில் தெல்லிப்பளையில் சமயத் திருப்பணி ஆற்றிய சுவாங்கறுவாலு சுவாமியாருடைய வழிகாட்டுதலிலும் மதுரையிலிருந்து கிடைக்கப்பெற்ற அகவற்பாக்களின் துணை கொண்டும் சந்தியோகுமாயோர் அம்மானையை 1647 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதற்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன. இத்தேவாலயமே வட போர்த்துக்கேய தமிழ் இராசதானியின் "கொம்பொஸ்ரெல்லா" ஆகியது. இடையிடையே நடைபெற்ற கண்டி இராச்சிய படையெடுப்புகளின் பின்னணியில் முக்கிய கடல் காவல்துறையாக கிளாலிக் காவல்துறை மாறியது. அங்கு கோயில் குடிகொண்டெழுந்து பரிமேலேறிவரும் யாகப்பர் கொம்பொஸ்ரெல்லாவில் அவர் உடல் இருக்கும் ஆலயத்தில் இருந்தது போன்று யாழ்குடா, மன்னார், ஆனையிறவுக் கோட்டைகளின் பாதுகாவலர் ஆனார். இங்கு பாடப்பட்ட காப்பு அம்மானையே சந்தியோகுமாயோர் அம்மானை. போர்த்துக்கேய வீரர்கள் புதிய கிறிஸ்தவர்களுக்கும் அருகே இருந்த 40 கிராமங்களுக்கும் தலைமை தாங்கிய வெள்ளை முதலியார் ஷபெற்றன் கோருக்கும் பாதுகாப்பாக இருந்தனர். போர்த்துக்கேய கோவில் தலங்களுள் புதுமை வாய்ந்ததும் பழமை வாய்ந்ததும் கிளாலியில் உள்ள சந்தியோகுமாயோர் ஆலயமே. அவர் பரிவாரங்களான பல புனிதர்கள் காவல் தெய்வங்கள் போன்று சிறு கோவில்கள் இன்றும் கிளாலியில் சுற்றிவரக் காணப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டு தொடக்கம் இந்த யாத்திரை ஸ்தலத்திற்கு பெருவாரியான பக்தர்கள் வந்து 23, 24 ஆம் திகதி ஆடியில் பெருவிழாவினை கொண்டாடினர்.

அதைவிட கிளாலியில் புனித சந்தியோகுமாயோர் மிக முக்கிய கேந்திர மைய ஆலயமாக அமைந்தது எனலாம். பூநகரிக்கு நேர் எதிரே அமைந்த நல்லூரின் அமைவிடம் இலங்கையின் பெருநிலப்பகுதியில் இருந்து ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கும் மையமாக அமைந்ததனால் வேறுபட்ட(யாழ், சைவ, வைணவ, பௌத்த ) மரபுகள் கலந்த பிராந்தியத்திற்கு வித்தியாசமாகவும் பாதுகாப்புக்கு உகந்ததாகவும் போர்த்துக்கேய மிஷனரிகளும் இராணுவமும் உணர்ந்ததன் பயனே கிளாலியின் எழுச்சிக்கும் சந்தியோகுமாயோர் ஆலயத்தின் தோற்றத்திற்கும் காரணமாகலாம். 1641 ஆம் ஆண்டின் இயேசு சபை பதிவேடுகளும் கடிதங்களும் இதற்கு சான்று பகர்கின்றன. இது முகமாலை கோவிலுக்கு சேர்ந்ததாக குறிப்பிடப்படுகின்றமையால் இயேசு சபைக் குருக்களே இதன் பொறுப்பாளர்களாக இருந்தனர் என ஊகிக்கலாம். இங்கிருந்த சிலுவை புதுமைமிக்க என மனுவேல் சில்வேர்யே யூன் எழுதியுள்ளதாகக் குறிப்பு உண்டு. பல கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர் அல்லாதவர்களும் இங்கு வருகிறார்கள் சந்தியாகே என்ற மந்திரச் சொல்லை உச்சரித்தே இங்கு வருகின்ற பக்தர்கள் வேண்டுகின்றனர்.

1679 ஆம் ஆண்டளவில் தென்னை மரவடியில் மரிய செம்பாத்தை என்பவர் வன்னிச்சியாராக இருந்தார். யாழ்ப்பாணத்து ஒல்லாந்தர் கோட்டைக்குள் வீட்டு காவலில் பிணையாக இருக்கும் அவருடைய முறை வந்தபோது அவர் அவ்வாறு இருக்க மறுப்பு தெரிவித்திருந்தார் அது மட்டும் அல்லாது அவர் ஒல்லாந்தருக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஒல்லாந்தருக்கு தகவல் கிடைத்திருந்தது. தெல்லிப்பளையை சேர்ந்தவரும் சந்தியாகுமையோரை விசுவாசிப்பவருமான புதன் ஆராச்சி ( புதநாத ஆராச்சி ) என்பவர் ஒல்லாந்தருக்கும் மிகவும் விசுவாசியாக இருந்தார். புதன் ஆராச்சி ஒல்லாந்தருடைய கட்டளைக்கிணங்க மரிய செம்பாத்தையை கைது செய்து வருவதற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டார்.வழியில் இரவைக் கழிக்க கிளாலியில் சிறிய மடத்தில் புதன் ஆராச்சியும் அவரது குழுவினரும் தங்கி இருந்தனர். அக்குழுவினரில் ஒருவர் புதன் ஆராச்சியை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார் இதனை முதல் நாளே கனவின் மூலம் தெரிந்து கொண்ட புதன் ஆராச்சி தான் படுக்கும் இடத்தை மாற்றி இருந்தார். விடயம் தெரியாமல் அவரை ஈட்டியால் குத்தி கொலை செய்ய வந்தவரின் முயற்சி தோல்வி அடைந்து கைதானார்.

புதன் ஆராச்சி தான் தங்கி இருந்த இடத்தில் முன்னர் போர்த்துக்கேயரால் சந்தியோகுமாயோர் தேவாலயம் கட்டப்பட்டிருந்து ஒல்லாந்தரால் அழிக்கப்பட்டதையும் அறிந்திருந்தார். அவர் இந்தக் கொலை முயற்சியில் தப்பித்துக் கொண்ட காரணத்தினாலும், செல்லும் விடயம் வெற்றியாக முடிந்தால் கிளாலி சந்தியோகுமாயோர் தேவாலயத்தை தனது செலவில் புதுப்பித்து பெரிதாக்கி கட்டுவதாக நேர்த்தி வைத்துக் கொண்டு தனது தென்னை மரவடி பயணத்தை தொடர்ந்தார்.

வன்னிச்சியராக இருந்த மரிய செம்பாத்தையின் இருப்பிடம் அறிந்து புதன் ஆராச்சி கொக்கிளாய் வளைகுடா தென்னமரவடிக்குச் சென்றார் அங்கு மரிய செம்பாத்தையுடன் மிகவும் நெருங்கிப் பழகி அவருடைய நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் உரியவராகி பரிசில்களும், புகழாரங்களையும் அளந்து பெற்றுக் கொண்டார். ஒல்லாந்த நிர்வாகத்தினரால் மரியசெம்பாத்தையிற்கு எந்தவித தண்டனையும் கிடைக்காமல் இருக்க தான் ஆவன செய்வதாக உறுதி அளித்து இதனை நிரூபிப்பதற்காக பல்லக்கிலேயே கெளரவமாக தென்னைமரவடியில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்துச் செல்வதாக நாகபாம்புக் குடங்களைத் தொட்டு பொய் சத்தியங்கள் செய்தார். இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய மரிய செம்பாத்தை புதன் ஆராச்சியுடன் புறப்பட்டார். அவர் நம்புவதற்காக புதன் ஆராச்சி யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டை வாசல் வரை மிகவும் மரியாதையாக பல்லக்கில் அழைத்துச் சென்றார். கோட்டை வாசலில் செம்பாத்தையை பல்லக்கிலிருந்து இறக்கி கைகளில் விலங்கிட்டு உள்ளே அழைத்துச் சென்று ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தார். மரிய செம்பாத்தையை விளக்கத்தின் பின்னர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்று வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தரின் விசுவாசத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரியவர் புதன் ஆராச்சி என்று யாழ்ப்பாண கௌமுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் புதன் ஆராச்சி தான் உயிர் தப்பிய போதும் தனது பயணம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்த நேர்த்திக்கடனுக்காக கிளாலியில் இருந்த சிறிய தேவாலயத்தை பெருப்பித்துத் தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அணிவித்துள்ளார்இதற்கு இன்றும் அவ்வாபரணங்கள் சான்றாக உள்ளன. இந்தக் காலகட்டத்தில் தூய ஜோசப் வாஸ் அடிகளார் மாறுவேடத்தில் கிளாலி பகுதியிலும் இந்த யாத்திரை ஸ்தலத்திலும் தங்கிச் சென்றுள்ளார் என ஆதாரங்கள் காணப்படுகின்றன.

எப்படியோ இக்கிளாலி சந்தியோகுமாயோர் யாத்திரை ஸ்தலம் பின்னர் ஒல்லாந்தரால் அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. 1740 ஆம் ஆண்டில் கத்தோலிக்கர்கள் திரும்பவும் சாத்வீகப் போராட்டத்தில் வெற்றி பெற்றதன் பின் சோரீஸ் என்ற கிறிஸ்தவரின் முயற்சியால் சிறு குடிசைக் கோவிலாக எழுப்பப்பட்டு பின் திருகோண மலையைச் சேர்ந்த பறங்கிப் பெண்மணியின் பண உதவியால் கட்டிடமாக எழும்பியது. இந்தக் கட்டடம் 19ஆம் நூற்றாண்டில் எழுந்த எல்லா கத்தோலிக்க ஆலயங்கள் போன்று முருகைக்கல்லும், செங்கல்லும், சுண்ணாம்பும் முதிரை மர உயர் தூண்களும் கொண்ட அழகிய சிறிய கட்டடமாக இருந்தது.

ஒல்லாந்தர் கலாபனையின் போது ஒழித்து வைக்கப்பட்டிருந்த பண்டைய கிளாலித் தேவாலயத்தில் குதிரையில் சவாரி செய்யும் சந்தியோகு மாயோரின் திருச்சொரூபம், உயர் பாதணி, தங்கத்திலான முக்கோண வடிவ போர்த்துக்கேய எழுத்துக்கள் பதிக்கப்பட்ட தலைக்கவசம் என்பன தேவாலயம் நிர்வாகிப்பவர்களால் வயலில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிக் கொண்டு வரப்பட்டன. இங்கு சந்திரசேகர முதலியார் காலம் 1834 ஆம் ஆண்டு முதல் திருவிழாவின்போது ஒரு பெரிய எடை குறைந்த தேர் மணற்பகுதிகளில் உருளக்கூடிய சில்லுகளுடன் யாத்திரை ஸ்தலத்தையே அழகு படுத்தியது இப்பெரிய தேருடன் ஆறு சிறிய கூடுகள் சேர்ந்து ரத பவனி கண்கொள்ளாக் காட்சியாக 24ஆம் தேதி ஆடி இரவு இருக்கும். இந்நாட்களில் கூத்துகள், நாடகங்கள், சந்தியோகு அம்மானை, கவிகள் மற்றும் பாடல்கள் சிறப்பம்சமாகும் கிளாலி சந்தியோகு யாத்திரியர்களுக்குரிய ஒரு பிரதான பிரதேசமாக உருப்பெற்று புகழ்பெற்ற வேலையான திருமணப் பதிவாளரின் மனைவியான திருமதி இன்னேசம் வஸ்தியாம்பிள்ளை அவர்கள் இந்த கிளாலிச் சமூகத்திற்கே பொறுப்பாகவும் திருவிழாக் கால ஒழுங்குபடுத்தல்களுக்கு நிழலாகவும் இருந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து வஸ்தியாம்பிள்ளை வரப்பிரகாசம் ஆரோக்கியம் தம்பதியினர், பின்னர் இவர்களின் மருமகன் பேதுருப்பிள்ளை செஸ்தியாம்பிள்ளை இப்பணியை செய்துள்ளார்கள். திருவிழாவே சந்தியோகுமாயோர் யாத்திரை ஸ்தல சிறப்புமிக்க விடயமாக விளங்கியமைக்கு முதல் ஏழு நாட்களும் மாலையில் சந்தியோகுமாயோர் கூடு யாத்திரைஸ்தலத்தை வலம் வந்ததும், எட்டாம் நாள் 23 ஆம் திகதி ஆடி மாலையில் அருட்தந்தை ஒருவருடன் கிளாலியில் உள்ள தேவாலயங்களில் முறையே புனித செபஸ்தியார், புனித அந்தோனியார், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித மரியாள், புனித தோமையார், புனிதமிக்கேல் அதிதூதர், ஆகியோரின் திருச்சொரூபங்கள் அவரவர் கூடுகளில் பவனியாக யாத்திரை ஸ்தலம் வரை வருவார்கள். இவர்களை வயலின் தொடக்கத்தில் வைத்து குடை, கொடி, ஆலவட்டம் மற்றும் மேளதாளத்துடன் சந்தியோகுமையோர் யாத்திரை ஸ்தலம் வரவேற்று சந்தியோகுமையோர் கூட்டுடன் சேர்ந்து தீ பந்தங்களின் ஒளியில் கடற்கரை மற்றும் வயல்வெளியை உள்ளடக்கி பவனிப்பாடல்களு டன் பவனி முடிவில் மாதாவை வணங்கி தத்தமது தேவாலயங்களுக்குத் திரும்புவதும் 24ஆம் தேதி ஆடி மாலை தேர் பவனி இடம் பெறுவதும் ஆகும். இந்த ஏழு கூடுகளின் பவனியானது 1964 ஆம் ஆண்டில் ஆயர் இல்லத்தினால் சில காரணங்கள் காட்டி நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் ஒன்பதாம் நாள் காலை தேர்ப்பவனி நடந்து கொண்டே இருந்தது காலப்போக்கில் இப்பவணியை 1986 ஆம் ஆண்டு முதல் 25 திகதி காலை தேர்ப்பவனியாக மாற்றியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு யுத்தகாலப் பகுதியில் குறிப்பாக 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இவ் யாத்திரை ஸ்தலமானது கடற்படை ராணுவத் தளமாக இருந்தது. அதற்கு முந்திய காலப் பகுதியான 1993 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் தேதி யாத்திரை ஸ்தலத்தில் கோபுர பகுதி விமான தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்க விடயமே. எனினும் பத்தாம் தேதி சித்திரை 2011 ஆம் ஆண்டு அருட்பணி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை முன்னிலையில் புதிய திருச்சுரூபம் வைக்கப்பட்டு மீண்டும் வழமை போன்று திருவிழா ஆரம்பிக்கப்பட்டாலும் அங்கு தேர் முற்றாக அழிக்கப்பட்டிருந்தமையால் தனியே 25 ஆம் தேதி ஆடி கூடு மட்டுமே சுற்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட 12 இயேசு சபைக் கோவில்களில் பிரபல்யம் மிக்க யாத்திரை ஸ்தலம் கிளாலி சந்தியோகுமாயோர் யாத்திரை ஸ்தலமாகும். புனிதரின் சுடர் சமாதி வைக்கப்பட்டிருக்கும் ஸ்பானிய தேசத்தின் கொம்பொஸ்ரெல்லா பேராலயம் போன்ற சிறப்பு பெறாவிடினும் யாழ்ப்பாண ராஜ்ய கத்தோலிக்கத்தின் தளர்விடும் கத்தோலிக்கத்திற்கு கிளாலி புனித சந்தியோகுமாயோர் மங்கா ஒழிக்கீற்றாக நின்று நிலைத்து இன்றும் பிரகாசித்து தொடருகின்றது.