நிறுவனம்:கிளி/ ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் ஸ்கந்தபுரம்
முகவரி ஸ்கந்தபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

கிளிநொச்சி மாவட்டத்தில் A-9 பாதையின் முறுகண்டி வன்னேரிக்குள பாதையில் அக்கராயன்குள குடியேற்றத்திட்டம் 18 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.இக்குடியேற்றத்திட்டமானது 1962 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் உள்ள சகல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட காணியற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் மேட்டுக்காணியும் மூன்று ஏக்கர் வயல் காணியும், ஒரு பகுதியினருக்கு இரண்டு ஏக்கர் மேட்டுக்காணியும் இரண்டு ஏக்கர் வயல் காணியும் வழங்கப்பட்டு மக்கள் இப்பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வரும் ஒரு பிரதேசமாகும். அதில் ஸ்கந்தபுரம் ,கண்ணகைபுரம் ஆகிய இரு கிராமங்களையும் உள்ளடக்கி 200 ஏக்கர் விஸ்தீரணமுடைய கரும்பு செய்கை பண்ணி சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்ற கரும்புத்தோட்டத்தை ஊடறுத்து கண்ணகைபுரம் படித்த வாலிபர் திட்டத்திற்குச் செல்லும் முதலாம் வாய்க்காலில் முதலாம் இலக்க காணிக்கு முன்பாக அமைந்துள்ளது இக்கரும்புத்தோட்டப்பிள்ளையார் ஆகும். இவ்விடமானது கரும்புத்தோட்டத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடியேற்றத்திட்டம் ஆகையால் கோவில்கள் இருக்கவில்லை. அப்போது இவ்வாலயம் அமைந்துள்ள இடம் காடாக இருந்ததினால் வீதி ஓரத்தின் அருகில் நின்ற பாலை மரத்தின் கீழ் முதலாம் இலக்கக் காணியின் சொந்தக்காரரான திரு. கணபதி தனுக்கோடி அவர்கள் இவ்விடத்தில் ஒரு கல்லை பிள்ளையாராக சிருஸ்டித்து விளக்கு வைத்து பொங்கல்,பூசைகள் செய்து வந்தார். இவருடன் இப்பகுதியில் குடியிருக்கும் விவசாயம் செய்யும் விவசாயிகளும் இப்பிள்ளையாரை வழிபட்டு வந்தனர்.

1964 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியில் கரும்பு உற்பத்திக்கு 200 ஏக்கர் அளவில் கொடுக்கப்பட்டது. இந் நிலத்தின் காட்டை அழிப்பதற்கு கரும்பாலை நிர்வாகம் புல்டோசர் எனப்படும் கனரக இயந்திரங்களைக்கொண்டு துப்புரவு செய்யப்பட்டு வரும் போது இவ்வியந்திரம் இவ்வாலயம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மித்து துப்புரவு செய்யும் போது அடிக்கடி சேற்று மண்ணில் புதைவதும் பழுதடைவதுமாக தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் இருந்தது. அதன் போது திரு. க.தனுக்கோடி அவர்களின் ஆலோசனைப்படி அக்கனரக வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பிள்ளையாருக்கு பொங்கல், பூசைகள் செய்தனர். அதன் பின் பண்படுத்தல் வேலைகள் எவ்வித இடையூறும் இன்றி துரிதமாக இடம்பெற்றது. இந்த நம்பிக்கையோடு இப்பிள்ளையார் ஆலயத்தின் வளர்ச்சி கரும்புத்தோட்ட நிர்வாகத்தினரின் ஊக்கத்துடனும் இவ்வூர் மக்களின் அயராத பங்களிப்புடனும் அதிகரித்தது. 1964 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சித்திரா பௌர்ணமி அன்று சித்திரபுத்திரனார் கதை படித்து சித்திரைக்கஞ்சி கொடுக்கும் விழா முதலில் திரு.வைத்தியநாதன் கந்தையா அவர்களின் முயற்சியால் கொடுக்கப்பட்டு இன்று வரை மக்களின் அயராத முயற்சியால் தொடர்ந்து இவ்விழா ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது.

1968ஆம் ஆண்டு இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்டுவதற்கு இவ்வூர் குடியேற்ற வாசிகளான 306 ஆம் இலக்க காணி உரிமையாளர் திரு. வைத்தியநாதன் கந்தையாவும் 307 ஆம் இலக்க காணி உரிமையாளர் திரு சின்னத்தம்பி பொன்னையா ஆகியோரின் முன்முயற்சியால் இவ்வூர் மக்களின் பங்களிப்புடன் முன் மூல மண்டபமும் முதல் மண்டபமும் பரிவாரமூர்த்திகளாக முருகன் ஆலயமும், வைரவர் ஆலயமும் அமைக்கப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் கரும்புத்தோட்ட முகாமையாளராய் இருந்த திரு.விஜயநாயகம் அவர்களும் திரு. சுப்பிரமணியம் எனும் வேலை மேற்பார்வையாளரும் இப்பகுதியின் முன்னோடியும், ஆசிரியருமான திரு. சோமசுந்தரம் அவர்களும் பிரபல விவசாயி ஆன திரு. நவரட்ணம் அவர்களும் ஊர்மக்களும் ஒன்றிணைந்து கருங்கல்லினால் ஆல மூல மூர்த்தி பிள்ளையார் சிலையை உருவாக்கி 1968 ஆம் ஆண்டு ஆவணி மாதம் சதய நட்சத்திரத்தில் மகா கும்பாபிசேகம் செய்து பூசித்து வழிபட்டு வந்தனர்.அக்காலப்பகுதியில் இவ்வூர் மக்கள் தங்கள் நெல் அறுவடை முடிந்தவுடன் வேழமுகத்தானுக்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய முதல் அறுவடையில் கிடைக்கும் நெல்லைக்கொண்டு பொங்கல் செய்வது வழமையாய் 127 ஆம் இலக்க காணியின் உரிமையாளர் திரு.முத்தர் பொன்னம்பலம் அவர்கள் (இவர் மூன்று தீட்சைகள் பெற்ற பூசகர்) எதுவித ஊதியமும் இன்றி தொடர்ந்து 25 வருடங்கள் பூசை செய்து வந்தவர். (தற்போது காலமாகிவிட்டார்) ஐந்து கரத்தானின் வழிபாடு இவ்வாறாக வளர்ச்சி அடைந்த போது இப்பகுதியில் சென்நெல்லும், செங்கரும்பும், ஆநிரைகளும் சிறந்த நிலைக்கு மாறி வந்தது.

இந் நம்பிக்கையோடு இவ் ஆலயத்திற்கு எழுந்தருளிப்பிள்ளையார் விக்கிரகத்தை திரு வை.கந்தையா குடும்பத்தினர் செய்து வைத்தார்கள். 1975ஆம் ஆண்டும் இவ்வாலயத்திற்கு மூன்றாவது மண்டபம் கரும்புத்தோட்ட முகாமையாளராய் இருந்த திரு. விஜயநாயகம் அவர்களால் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தின் திருப்பணி வேலைகளை தனிப்பட்ட முறையிலும் சில பொதுமக்களும் செய்துள்ளனர். இன்று இவ்வாலயத்தின் பூசகராக பாலகிருஷ்ணசர்மா பாலச்சந்திர சர்மா என்பவர் நற்பணிபுரிந்து வருகிறார். பிள்ளையாரின் உச்சகட்ட நம்பிக்கையோடு தொடர்ந்தும் இவ் ஆலயத்தில் உள்ள கணபதியை பற்றோடு இவ்வூர் மக்கள் வணங்கி வருகின்றார்கள். நிர்வாகம் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த வேளையில் நிதிகள் பற்றாக்குறையாக இருந்த போதும் இயன்ற அளவில் பரிபாலித்து வருகின்றனர்.