நிறுவனம்:கிளி/ வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி / வன்னேரிக்குளம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வன்னேரிக்குளம்
முகவரி வன்னேரிக்குளம், கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

1954 ஆம் ஆண்டில் இரண்டு ஏக்கர் மாவடி எனும் இடத்தில் திரு. எஸ். அருளம்பலம் இப்பாடசாலையைத் தொடக்கி வைத்தார். 1957 ஆம் ஆண்டு சோலையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் திரு.எஸ். செல்வநாயகம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டில் திரு. வி .கந்தையா அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். அப்போது தரம் 1- 9 வரை வகுப்புக்கள் நடாத்தப்பட்டது. நான்கு ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

தேவை கருதி 1960 ஆம் ஆண்டில் க.பொ.த (சா.த) வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். தொடர்ந்து கடமையாற்றிய அதிபர்கள் திரு .பொன்னையா , திரு எஸ். சிவகுரு ஆகியோரது ஆளுமை வழி நடத்தல்கள் பாடசாலை பௌதிக , பண்பாட்டு வளர்ச்சி பெற்ற காலம் எனலாம். இவர்களைத் தொடர்ந்து திரு .நீ. கதிர்காமநாதன் அவர்கள் அதிபராகச் செயற்பட்டார். இவரது காலத்தில் கல்வி , விளையாட்டு , கலை போன்றவற்றில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிபராக திரு. வை. ஆனந்தநடராசா மிளிர்ந்தார். இவரது காலத்திலேயே சேரன், சோழன், பாண்டியன் என்ற மூன்று இல்லங்கள் அமைத்து விளையாட்டுப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

1972 ஆம் ஆண்டில் மூன்று மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி செல்வி .ச. சரஸ்வதி, திரு. ஐ. சண்முகராஜா ஆகிய இருவரும் பல்கலைக்கழகம் சென்று நல்லாசானாக திகழ்கின்ற வரலாறும் இப்பாடசாலையினதே. தொடர்ந்து திரு .எஸ் கதிர்காமத்தம்பி அதிபராகக்கடமையாற்றி பாடசாலை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் 1982 ஆம் ஆண்டு வரை திரு.க.கனகரத்தினம் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்கள் பல சாதனைகளையும் தமதாக்கிக்கொண்டனர். அதன் பின் இக்கிராமத்தில் வசித்த செல்வி நீ. எலிசபெத் அவர்கள் அதிபராக பொறுப்பேற்று வழி நடத்தினார்.


தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரை திரு. செ. சோமலிங்கம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலத்திலேயே யாழ்/ வன்னேரிக்குளம் மகா வித்தியாலயமாக இருந்த பாடசாலையானது கிளி/ வன்னேரிக்குளம் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் திரு.சு.புண்ணியசீலன் வெர்கள் அதிபராக கடமையாற்றினார். இக்காலத்திலும் பௌதீக வளம் பெருகியது. மாணவர்கள் தொகையும் அதிகரிக்க கல்வியிலும், விளையாட்டிலும் சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 13 மாணவர்கள் தோற்றி 10 மாணவர்கள் க.பொ.த .உயர்தரம் சென்றனர். உடற்பயிற்சி, தமிழ்மொழித்திறன் போட்டிகளில் சாதனை நிலைநாட்டினர். இவைகள் வளர்ச்சிப்பாதையில் ஒரு உயர்ச்சியைக்காட்டி நிற்கின்றது எனலாம்.


1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையான காலத்தில் திரு. சு. ஆனந்தசிவம் அவர்கள் அதிபராக கடமையேற்றார். இவரது காலத்தில் முறை சார்ந்த கல்வியுடன் முறை சாராக்கல்வியும் வளர்ச்சி பெற்றது. 1993 ஆம் ஆண்டு மாவட்ட மட்ட 13ஆவது சாரணர் விழாவையொட்டி வருடாந்த பாசறை ஒன்று இப்பாடசாலையில் கொண்டாடப்பட்டது. உடற்பயிற்சிப் போட்டி, தாச்சிப்போட்டி அணிகள் வெற்றி பெற்றதுடன் தமிழ்த்தினப் போட்டிகளிலும் பல சாதனைகளை நிலைநாட்டி பாடசாலையின் வளர்ச்சிக்கு உரமூட்டப்பட்டது. அத்துடன் பாடசாலை வளாகத்தை பசுமையாக்கிய பெருமையும் இவரையே சாரும்.


தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை திரு. ஐ. குகானந்தராஜா அவர்கள் அதிபராகக் கடமையேற்றார். இவர் ஆரம்பக்கல்வி முதல் இடைநிலைக்கல்வி வரை இப்பாடசாலையில் கற்று பட்டதாரியாக இப்பாடசாலையில் அதிபரானதும் பெருமைக்குரிய விடயமாகும். 1200 மாணவர்களைக் கல்வி புகட்டிய பாடசாலை வளப்பற்றாக்குறையை எதிர் பொண்ட போதும் புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் தடவை சித்தி பெற்ற பெருமை இவரையே சாரும். தொடர்ந்து இவர் அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்றுச்செல்லவே திருமதி .ஜெ. தனபாலசிங்கம் அதிபர் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது காலத்திலும் தமிழ் மொழித்தினப் போட்டி , சமூக விஞ்ஞானப்போட்டி ஆகியவற்றில் மாணவர்கள் பல வெற்றிகளைப் பெற்றனர். மேலும் இவரது ஆளுமையினால் பாடசாலையின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.

அடுத்து 2004 ஆம் ஆண்டில் திரு. சு. தர்மரத்தினம் அவர்கள் அதிபராகக் கடமையேற்றார். இவரது காலத்தில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பெற்று வளம் பெருகியது. விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம், செயற்பாட்டறை, அழகியல் அறை என்பன கல்விக்கு இருந்த இடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்தது. அத்துடன் இவரது ஆளுமை முயற்சி சிறந்த சாதனைகளைப்பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. இக்காலத்தில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் பொன்விழாவினை சிறப்பாகக் கொண்டாடிய பெருமை இவருக்குரியதே.

2007 ஆம் ஆண்டில் சிறந்த ஆளுமையும் அறிவும் தன்னகத்தே கொண்ட அதிபராக திரு. ஆ. குமரகுருபரன் அவர்கள் அதிபராக கடமையேற்றார். 2008 ஆம் ஆண்டு பாடசாலை இடப்பெயர்வுக்குள் உட்பட்ட நிலையிலும் கல்வித்தரங்களில் இடத்தைப்பெற வழி சமைத்தார். ஆங்கில பாட ஆசிரியரி இல்லாத நிலையிலும் கற்பித்தலை மேற்கொண்டு அவர்களை சித்தி பெற வழி காட்டினார். அவர் இடமாற்றம் பெற்றுச்செல்ல பதில் கடமை புரியும் அதிபராக பொறுப்பேற் திருமதி. ச. ஜெலாஸ் அவர்கள் நிறைவான நிர்வாகத்தன்மை ஆளுமையுடன் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து கல்வித்தர உயர்வுக்கு வழி காட்டியுள்ளார்.

2012 ஆம் ஆண்டில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு. த. பிரபாகரன் அவர்கள் இளமைத்துடிப்பும் செயற்திறனும் மிக்க அதிபராக செயற்படுகின்றார். மாணவர்களினதும், பாடசாலையினதும் தேவையறிந்து அதனை நிறைவேற்றுவதுடன் பாடசாலையின் பெறுபேறு உயர்விற்கான வழிகளை கல்விச்சமூகத்தினருடனும், பெற்றோருடனும் இணைந்து திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றார். இதனடிப்படையில் 2013 ஆம் ஆண்ட தொடக்கம் இப்பாடசாலையில் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்ட பெருமை இவரையே சாரும்.

மேலும் இப்பாடசாலையில் சீரிய சமூக மயமாக்கல் செயற்பாட்டின் மூலம் கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் போன்ற பலரையும் உள்வாங்கி பாடசாலையை மகிழ்ச்சிகரமான சூழலாக மாற்றியதுடன் கற்றலுக்குரிய இடமாக நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு நிகராக பௌதீக வளங்களைப்பெற்று பயன்படுத்தி கல்வியில் அதி கூடிய பெறு பேறுகளை பெற்றுக்கொள்ள வழி காட்டி வருகின்றார். இதற்குச் சான்றாக 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப்பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 5 ஆவது நிலையிலும், விஞ்ஞான பாடத்தில் முதலாவது நிலையிலும் காணப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் க. பொ. த. சாதாரண தரப்பரீட்சையில் கணித பாடத்தில் 100 வித சித்திகளைப் பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். அத்துடன் இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் இப்பாடசாலை மாணவர்கள் பல சாதனைகளை நிகழ்த்த காரணமாகத் திகழ்கின்றார். அதிபருடைய சிறந்த செயற்பாடுகள் காரணமாக நல் அதிபராக “பிரதீபா பிரபா” விருது பெற்றிருப்பது பெருமையை வெளிப்படுத்துகிறது. ஆமலும் வைர விழாவினை காணும் பெருமையினையும் இவர் பெற்றுள்ளார்.