நிறுவனம்:கிளி/ புனித பற்றிமா றோ.க.த.க.பாடசாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ புனித பற்றிமா றோ.க.த.க.பாடசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் உருத்திரபுரம்
முகவரி உருத்திரபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் தீவின் இணையில்லா புகழ் வட மாகாணத்தின் தன்னிகரில்லா வளர்ச்சியுடன் வீறுநடை போடும் கிளி/ புனித பற்றிமா றோ. க. த. க வித்தியாலயம் உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ளது. என்றும் பசுமையுடன் திகழும் வளம் பொருந்திய கிராமம் அது. இப் பாடசாலை 1952 ஆம் ஆண்டு பற்றிக் கமம் என்றழைக்கப்பட்ட காணியில் திரு. ச. அந்தோனிப்பிள்ளை ஆசிரியராகவும் 25 மாணவர்களுடனும் ஒரு ஓலைக்குடிசையில் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் இவ் வித்யாலயம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப கர்த்தா அக்காலத்தில் இப் பகுதியில் கத்தோலிக்க குருவாக திகழ்ந்த வணபிதா சூசைநாதர் ஆவார். கிளிநொச்சி, கண்டி பிரதான வீதியில் இருந்து மேற்கே நான்கு மைல் தொலைவில் இவ் வித்யாலயம் அமைந்துள்ளது.

1952 ஆம் ஆண்டில் இருந்து எமது வித்யாலயம் துரித வளர்ச்சியை அடைந்துள்ளது. பெரும்பான்மையான இந்து மக்களை கொண்ட எமது வித்யாலயம் கத்தோலிக்க முகாமையாளரால் திறமையான முறையில் மேற்பார்வை செய்யப்பட்டதால் கல்வியிலும்,ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியதைக் கண்ணுற்ற இந்து சமய மக்களும் தமது பிள்ளைகளை சேர்க்க ஆவல் கொண்டனர்.

1952 இல் வணபிதா சூசைநாதர் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக அதற்கான நிலையான கட்டடம் அமைக்கப்பட்டது. அருட் சகோதரி வலேரின் என்ற அதிபரையும் 92 பிள்ளைகளையும் 4 ஆசிரியர்களையும் கொண்டதாக வளர்ந்த இப் பாடசாலை கற்பதற்கும், கற்பிப்பதற்கும் நிரந்தர பதிவு பெற்ற பாடசாலையாக அரசினால் அங்கீகாரம் பெற்றது. கா.பொ.த சா/தரம் வரை வகுப்புக்களும் நடைபெற்றதுடன் அதிபர், ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல், திறந்த சேவை மனப்பான்மை என்பவற்றினால் பாடசாலையானது கல்வி,கலை, விளையாட்டு போன்றவற்றிலும் முன்னேறி வரலாயிற்று.

1952 ஆம் ஆண்டு தரம் 5 வரை நடைபெற்ற இவ் வித்யாலயாலயம் 1954 இல் இருந்து 1968 வரை நடைபெற்ற கா. பொ. த சா/தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இத்துரித வளர்ச்சிக் காலத்திலே 1962 ஆம் ஆண்டு இப்பாடசாலை அரசாங்கத்தின் தேசிய மயக்க கொள்கைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இப் பாடசாலையில் இருமருங்கிலும் கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயாலயம் (10ம் வாய்க்கால் ) கிளி /கிளிநொச்சி இந்துக் கல்லூரி (7ம் வாய்க்கால்) ஆகிய இரு பெரிய பாடசாலைகள் அமைந்துள்ளன.

இதனை கருத்திற் கொண்டு இவ் வித்தியாலயத்தை அரசு மூடிவிட எண்ணியது. சமய வளர்ச்சி கருதியும் அருட் சகோதரிகளின் சேவை கருதியும் பிள்ளைகளின் ஒழுக்கத்தை முன்னிட்டும் பாடசாலை மூடுவதை பெற்றோர் ஆட்சேபித்தனர்.

பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியின் அவசியத்தை முன்னிட்டு இதனை தரம் 5 வரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இவ்வனுமதி பாடசாலைகளின் தரத்தை அடிப்படைத் திட்டத்தின் பாற்பட்டது எனக் கூறப்பட்டது.

23.06.1961ல் அருட்சகோதரி அன்று அதிபராகப் பொறுப்பேற்று 1963ஆம் ஆண்டு வரை சேவையாற்றி இடமாற்றம் பெறச் சென்றார். இவரை அடுத்து திரு M. J செல்வநாயகம் என்பவர் அதிபராக கடமையேற்றுக் கொண்டார். இவரது சேவையைத் தொடர்ந்து அருட்சகோதரி மேரி பிளன்டீனா அவர்கள் 10.01.1970 இல் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அக் காலத்தில் பாடசாலை துரித வளர்ச்சி அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1968இன் பின் தரம் 5 வரையே நடைபெற்றது. எனினும் பாடசாலை சார்ந்த நிகழ்ச்சிகளில் தன் சாதனைகளைப் படைக்கத் தவறவில்லை. மீண்டும் க. பொ. த சா/தார வகுப்புகளை நடத்துவதற்கு அருட்சகோதரி பிளட்டீனா பெருமுயற்சி எடுத்து வந்தார். எனினும் இம் முயற்சிகள் கைகூடவில்லை.

20.05.1978 இல் அருட்சகோதரி ஆமன்டீன் அவர்கள் அதிபராக கடமை ஏற்றுக் கொண்டார். அவரது தீவிர முயற்சியின் பயனாக 19.10.1983 இல் தரம் 6 வகுப்பை நடாத்த அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து பாடசாலையில் துரித வளர்ச்சி ஏற்படலாயிற்று.வித்தியாலயத்தில் புதிய கிணறுகள் அமைக்கப்பட்டன. மாணவர் வரவு அதிகரித்தது.

இதனால் காலப்போக்கில் கா. பொ. த சா/தாரம் வரை வகுப்புகள் நடாத்த வாய்ப்பு ஏற்பட்டது. பரீட்சைப் பெறுபேறுகளும் முன்னேற்றகரமாக காணப்பட்டன.

அக் காலப்பகுதியில் கல்வி பணிப்பாளராக இருந்த திரு M. M. மன்சூர் அவர்களும் பாடசாலை வளர்ச்சியில் கரிசனை காட்டி வந்தனர். 23.04.1983 அன்று திரு M. M. மன்சூர் அவர்களாலே புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

1985 இல் அருட்சகோதரி ஆமண்டீன் அவர்கள் ஓய்வு பெற அருட்சகோதரி கொஸ்க அவர்கள் அதிபரானார். இவர் தனது கடமையை கண்ணெனப் போற்றியதால் தனது சேவைக் காலத்தில் கா. பொ. த சா/தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன. இவரைத் தொடர்ந்து அருட்சகோதரி மரிய கொற்றி அவர்கள் அதிபராக கடமையேற்றுக் கொண்டார்.

திறமையான நிர்வாக அனுபவம் கொண்ட இவரின் காலத்தில் பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் பெற்ற காலத்தில் பெரிய விழா மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டு வகுப்பறைப் பற்றாக்குறை நீக்கப்பட்டது. சிறுவர் நூல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.

இத்துடன் கல்வி, ஒழுக்கம் விளையாட்டுத்துறை, கலைத்துறை என்பவற்றில் மாணவர்கள் மாவட்டத்திற்கான பரிசுகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். மாணவர் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட இவர் 1993 முதன்முறையாக பரிசளிப்பு விழாவை நடத்தி ஆரம்பித்து வைத்தார்.

1995 இன் இறுதிக் காலப்பகுதியில் அதிபர் அருட்சகோதரி மரியகொற்றி ஜெயந்தி நகர், செல்வ நகர், கனகபுரம், சக்திபுரம் போன்ற இடங்களைச் சேர்ந்த வறிய மாணவர்களும் இங்கு கல்வி பயின்றனர்.

எமது பாடசாலையின் சிறப்பம்சமாக, இலட்சியமாகத் திகழ்வது வறிய மாணவர்களுக்கான அறிவூட்டலும், ஒழுக்க பயிற்சியும் எதிர்காலத்தில் அவர்களை நாட்டின் நற்பிரசைகளாக ஆக்குவதும் ஆகும்.

இக் கிராம மக்களின் தொழிலாக விளங்குபவை விவசாயம், கட்டட வேலை, கூலி தொழில் போன்றனவே. மிகக் குறைந்தளவு, பெற்றோரே அரச ஊழியர்களாக உள்ளனர்.

ஆகவே இங்கு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போன்றோரின் பாடசாலை அபிவிருத்திக்கான நிதி உதவி என்பது மிகக் குறைவாகவே காணப்பட்டது.

இதனால் பாடசாலைக்கு தேவையான அபிவிருத்திப் பணிகளைச் செய்வதில் பெரும் இடர்பாடுகளைச் சந்திக்க நேர்கின்றது.

பாடசாலையில் காணப்பட்ட வசதி வாய்ப்புகளைக் கொண்டே மாணவர்களின் கல்வி, கலை கலாச்சாரம், ஒழுக்கம், ஏனைய துறைகள் போன்றவற்றில் அவர்களது முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டியுள்ளது. ஆயினும் மனம் தளராது இன்று நம்பிக்கையுடன் வறிய மாணவர்களுக்காக முழுமையாக செயற்படுவதில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அதன் மூலம் மாணவர்களுக்களது கல்வியிலும், ஒழுக்கத்திலும் ஓரளவு மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

அதிபராகப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தினுள் நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய யுத்தம் காரணமாக 2008 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் மன்னார் மடு, முழங்காவில், நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து பெருந்தொகையான மாணவர்கள் தற்காலிகமாக எமது பாடசாலைக்கு வந்து சேர்ந்தார்கள்.

அவ்வேளையில் எமது பாடசாலையில் இடநெருக்கடி, தளபாடப் பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை போன்றவற்றைச் சந்திக்க வேண்டி நேரிட்டது. இவை அனைத்திற்கும் மகிழ்வோடு முகங்கொடுத்து,

பாடசாலை செல்வனே நடைபெற்றுக் கொண்டிருந்த போது எமது பகுதியில் மிகப்பெரும் யுத்த அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி எமது பாடசாலை ஆவணங்கள் சிலவற்றை 17.09.2008 அன்று அன்றைய கல்விப் பணிப்பாளராக இருந்த திரு. த. குருகுலராஜா அவர்களது அனுமதியுடன் தருமபுரம் இல-01 அ.த.க பாடசாலையின் ஒரு பகுதிக்கு மாற்றினோம்.

அச்சுறுத்தல்கள் மிகுந்த அந்த சூழ்நிலையில் தருமபுரம் பகுதி பற்றி எந்த முன்னறிமுகமும் இல்லாத நிலையில் அப்பாடசாலையின் அதிபர் திரு.சுபாஸ்கரன் அவர்களை அணுகிய போது மிகவும் முக மலர்ச்சியுடன் எவ்வித மறுப்பும் இன்றி இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். அங்கு நாங்கள் ஆவணங்களை பாதுகாப்புக்கருதி நகர்த்திய பின்பும் தொடர்ந்து மீதியாக இருந்த ஆசிரியர்கள், மாணவர்களுடன் இயங்கி வந்த வேளேயில் 05.10.2008 அன்று நடந்த மிகப்பெரிய வான் தாக்குதல், செல் தாக்குதலால் 06.10.2008 அன்றுடன் பாடசாலை மூடப்பட்டு தருமபுரம் இல-01 அ. த. க தலையில் பாடசாலையின் ஒரு பகுதியில் இயங்க ஆரம்பித்தது.

மிகவும் கடினமான உழைப்பின் பயனாக 13.10.2008 ற்குப் பின்னர் எமது பாடசாலை தருமபுரம் பாடசாலை வளாகத்தில் தற்காலிக கொட்டில்களில் தனித்து இயங்க ஆரம்பித்தது. அவ்வேளையில் அதிபர் திரு. சுபாஸ்கரன் அவர்களும் அவரது ஆசிரியர்களும் சின்னஞ்சிறு மாணவர்களும் மிக நெருக்கமாகப் பழகினார்கள். ஓரே பாடசாலைக் குடும்பம் போன்று எம்மையும் இணைத்து செயற்பட்டமை அன்றைய காலகட்டத்தில் அவர்கள் காட்டிய மிகப்பெரும் அன்பான ஆதரவு உதவியாகவே நான் கருதுகின்றேன்.

"உடுக்கை இழந்தவன் கைபோலங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"

என்ற குறட்பாவை இவர்களது செயற்பாட்டால் முழுமை பெறச் செய்தார்கள். இவ் இக்கட்டான காலப்பகுதியில் கூட எமது மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளிலோ, க. பொ. த (சா/த) பரீட்சைகளிலோ தொய்வு ஏற்படாது. ஏனைய பிரபல பாடசாலைகளுக்கு இணையாக செயற்பட்டு நின்றனர். தருமபுரம் பகுதியிலும் யுத்த அனர்த்தங்கள் தொடர்ந்ததால் பிள்ளைகளின் வரவு மிகவும் குறைவடைந்த நிலையில் 09.01.2009 அன்று தருமபுரத்திலிருந்து புன்னைநீராவிப் பாடசாலைக்கு எமது பாடசாலையை நகர்த்தி அங்கு எமது கல்விப் பணியை தொடர்ந்தோம்.

இக் காலப் பகுதியில் இடர்கள் அனைத்திலும் எமக்குப் பக்கபலமாயிருந்து வழிகாட்டி உடன் நடந்தவர் அன்றைய கல்விப் பணிப்பாளர் திரு. த.குலராசா அவர்களே புன்னை நீராவிப் பகுதியிலும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டபோது 14.01.2009 அன்று முல்லைத்தீவு உடையார் கட்டுப் பாடசாலைக்கு நகர்ந்தோம்.

அங்கு எமது வேதனத்தைப் பெறும் பொருட்டு ஆசிரியர்கள் மட்டுமே ஒன்று கூடினோம். அங்கு எம்மால் நிரந்தரமாகத் தங்கி வாழ முடியாத நிலையில் இரணைப்பாலை, வலைஞர் மடம் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று ஈற்றிலே ஏதிலிகளாக வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பட்டு அங்கு பல இடர்கள் மத்தியில் வாழ்வைத் தொடர்ந்தோம். இவ்வாறு இடம்பெயர்ந்து செல்லுகையில் இரணைப்பாலை பகுதியில் எமது பாடசாலையின் பெறுமதி மிக்க சொத்தான மிக ஆர்வமும்,அன்பும் மிக்க ஆசிரியர் திரு. தோமஸ் வீனஸ் பெஞ்சமின் அவர்களை யுத்த அரக்கனாம் வான் தாக்குதலிற்கு இரையாகப் பறி கொடுத்தோம்.

யுத்தம் நிறைவு பெற்று மீள்குடியேற்றம் அறிவிக்கப்பட்டதனால் 24.12.2009 அழிவுகளின் மத்தியில் எமது பாடசாலை எமது கிராமத்தை மீண்டும் வந்தடைந்தோம்.

04.01.2010 அன்று தற்போது ஓய்வு பெற்றுள்ள வலயக் கல்வி பணிப்பாளர் திரு. த. குலராசா அவர்களது ஆலோசனை வழிகாட்டலோடு 11 ஆசிரியர்கள் 82 மாணவர்களின் வருகையுடனும் ஆவணங்கள், தளபாடங்கள் எதுவுமற்ற ஒரு வெற்றுப் பாடசாலையில் எமது பணியை மீண்டும் ஆரம்பித்தோம். எம்மோடு உடன் பயணித்த அன்புக்குரிய ஆசிரியர் திரு. தோ. வீனஸ் பென்சமின், பெற்ற பிள்ளைகள் போல் அன்பு செலுத்திய சில மாணவச் செல்வங்கள் ஆகியோரை இவ்வுலக வாழ்விலிருந்து நிரந்தரமாகப் பிரிந்த வேதனையும், மற்றும் தமது துணைவரை இழந்த ஆசிரியைகளின் சோகங்களுடனும், தாய் தந்தையை, உடன்பிறப்புகளை, உறவுகளை இழந்த மாணவச் செல்வங்களின் வேதனையுடனும் பெரும் மன இறுக்கத்துடனும் பாடசாலையை ஆரம்பித்தோம்.

இப் பாடசாலையின் கூரைகள் எரியூட்டப்பட்ட நிலை எம் மனங்களை வாட்ட இறைவன் துணையோடு தூய பாற்றிமா அன்னையின் பரிந்து பேசுதலோடு மனதில் தென்பை வரவழைத்துக் கொண்டு வறிய மாணவர்களுக்கான பணியை மீண்டும் ஆரம்பித்தோம்.

ஆரம்பித்த முதல் வாரத்தில் எமது அலுவலகப் பணிகளை ஆற்ற எதுவும் அற்ற நிலையில் இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயத்தின் அதிபர் அவர்களின் அர்ப்பணிப்புக்களின் உதவிகளுடன் நாம் பாடசாலைப் பணியை தொடங்கினோம். அவ்வேளை முதற்கட்டமாக திருத்தம் செய்த பாடசாலைகள் நான்கினுள் எமது பாடசாலையும் ஒன்றாயிருந்தது.

பாடசாலை கல்வி நிலையும் வெளிப்புற வேலைகளும்

1954 ம் ஆண்டிலிருந்து க. பொ. த (சா. தரம் ) வரை ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் அக் காலத்திலிருந்து இன்று வரை பல மாணவர்கள் க. பொ. த. உயர்தரம் படிப்பதற்கான தகமையுள்ள பெறுப்பேற்றைப் பெற்று வேறு பாடசாலைக்குச் சென்றனர். எமது பாடசாலையின் அயலில் இரண்டு பெரிய பாடசாலைகள் க. பொ. த ( உயர்தரம் ) வரை உள்ளதால் எமது பாடசாலைக்கு க. பொ. த ( உயர்தரம் )வரை கற்கையை நீடிக்கும் வசதியை நிர்வாகம் எமக்கு அனுமதிக்கவில்லை. இதே போன்று தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் எமது பாடசாலையில் இப் பகுதியில் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

அண்மைக் காலங்களில் எமது பாடசாலை தரம் - 5 இல் பெற்ற பெறுபேற்றினை அட்டவணைப்படுத்தித் தருகின்றேன்.

ஆண்டு சித்தியடைந்தோர்தொகை 2008 01 2009 07 2010 02 2011 04 2012 05

2009ம் ஆண்டு மிகப் பாரிய யுத்தம் இடம்பெற்று காலூன்ற இடமற்ற நிலையிலும் எமது பாடசாலை மாணவர்கள் 07 பேர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர்.2010ம் ஆண்டு நலன்புரி முகாம்களிலிருந்து ஏதிலிகளாக தறப்பாள் வெப்பத்தால் மூளை வெந்த நிலையில் கூட 2 மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெற்றிருந்தனர்.2011ம் வருடம் பரீட்சைக்குத் தோற்றிய 24 மாணவர்களில் 4 மாணவர்கள் சித்தியெத்தியதுடன் செல்வன் சத்தியசீலன் டர்ஷன் என்ற மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டார். என்பதோடு தோற்றிய ஏனைய 20 மாணவர்களும் 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றார் என்பதையும் இவ் வேளையில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.2012ம் ஆண்டு பரீட்ச்சைக்குத் தோற்றிய 26 மாணவர்களில் 5 மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்தியதுடன் இருவர் ஒரு புள்ளியினால் பரீட்சையில் வெட்டுப் புள்ளியைப் பெறத் தவறினர். இவர்களை விட ஏனைய 19 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றனர். இவை அனைத்துமே உருத்திரபுரப் பகுதியில் உள்ள சிறிய பாடசாலையின் உன்னதமான பெறுபேறுகள் எனக் குறிப்பிட விரும்புகின்றேன். இது போன்ற கா. பொ.த (சா. த ) பரீட்சையிலும் ஆண்டு சித்திபெற்றோர்தொகை

2006 10 2007 16 2008 05 2009 03 2010 13 2011 10 2012 13

சித்தி பெற்று க. பொ. த. உயர்தரம் படிப்பதற்காக வேறு பாடசாலைகளுக்குச் சென்றனர். சில காலம் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வுகூட வளப்பற்றாக்குறை போன்ற காரணங்கள் இருந்த போதிலும் மேற்படி தரவுகள் எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியின் உயர்ச்சியையே காட்டி நிற்கின்றன.

இதற்கு தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு. க. முருகவேல் அவர்கள் எமக்கு வேண்டிய ஆளணியினரை வழங்கி இவ் வறிய மாணவர் கல்வியில் உயர வழி அமைத்து தந்தமை மிக உதவியாக அமைந்தது.

இவற்றை விட எமது பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வலய, மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்று பல சான்றிதழ்களையும் வென்றுள்ளனர்.

சமூக விஞ்ஞானப் போட்டிகள், பாவோதல் போட்டிகள், பேச்சுப் போட்டிகள்,சித்திரப் போட்டிகளில் எல்லாம் பங்குபற்றி வெற்றி பெற்று சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். எமது பாடசாலை ஒரு கத்தோலிக்க பாடசாலையாக இருந்த போதிலும் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் பெருந்தொகையினர் இந்துப் பிள்ளைகளாகவே உள்ளனர். மாணவர்களிடையே சமயப் பாகுபாடின்றி நவராத்திரி விழா, ஒளி விழா,பொங்கல் விழா போன்ற சமய நிகழ்வுகளையெல்லாம் இரு சமய மாணவர்களும் இணைந்து ஒற்றுமையுடன் கொண்டாடி வருகின்றனர். வருடந்தோறும் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் திறம்பட நடப்பதோடு, தமிழ் மன்றம், கணித விஞ்ஞான மன்றம், அழகியல் மன்றம், இந்து மாமன்றம், ஆங்கில மன்றம், சமூக விஞ்ஞான மன்றம் என்பனவும் குறித்த கால கிரமப்படி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவை எல்லாவற்றிலும் மேலாக எமது பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம் போன்றவற்றில் பெருமளவு கவனம் செலுத்தி பாடசாலை நேரத்திலும் அதற்கு மேலாக வெளியிலும் அவர்கள் மீது கண்காணிப்புச் செலுத்தி எதிர்கால சமூக நற்பிரஜைகளாக ஆக்குவதற்கு எம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம்.

முடிவுரை

மிக எளிமையான வாழ்வு வாழும் மக்களைக் கொண்ட இக் கிராமத்தில் வசதி வாய்ப்புகள் மிகவும் குறைந்த நிலையிலும் நல்லுள்ளம் கொண்ட சில தனியாரின்,சில நிறுவனங்களின், எமது கல்வித் திணைக்களத்தின், வெளி நாடுகளில் வாழும் சில நல்லுள்ளங்களின் உதவிகளால் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்பட்ட இப் பாடசாலையில் சில திருத்த வேலைகள், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அவையாவன - பழைய இரண்டு வகுப்பறைக் கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு வாசல்கள் மேற்பார்வை இலகுபடுத்தல், பாதுகாப்பின் பொருட்டு மாற்றியமைக்கப்பட்டன. நுழைவாயில் பகுதி வளாகத்திற்கு மாற்றப்பட்டு புதிய பாலம் அமைத்து புதிய கேற் போடப்பட்டது. பாடசாலைக்கான பாதுகாப்பு வேலைகள் அமைக்கப்பட்டன. 40'*20' சமையல் அறைக்கான வேலைகள் 70% நிறைவு செய்யப்பட்டது. மலசலகூடம், வகுப்பறை போன்றன திருத்தியமைக்கப்பட்டன. மலசலகூடத்திற்கு நீர்த்தொட்டி அமைக்கப்பட்டது. வகுப்பறை ஒன்று கணினி அறையாக மாற்றப்பட்டு 14 கணணிகள் வரை மாணவர்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. முன் பகுதி 160' மதில் அமைக்கப்பட்டது. பெயர்ப் பலகை நிறுவப்பட்டது. அறுபதாவது ஆண்டு நினைவாக பெயர் வளைவு ஸ்தாபிக்கப்பட்டது. பாடசாலை காண மின்சாரம் பெறப்பட்டது. பாடசாலைக்கென பான் ட் வாத்திய இசைக்கருவி பெறப்பட்டு உபயோகத்தில் உள்ளது. குழாய் நீர் வசதி பெறப்பட்டது.

எமது நன்றிகள்

"அனைத்துப் புகழும் நன்றியும் முதற்கண் இறைவனுக்கே" இவையாவற்றிக்கும் ஊன்று கோலாக இருந்து உதவி புரிந்த ஒவ்வொரு நல்லுள்ளங்களையும் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

1. இப் பாடசாலைக்கான காணியை வழங்கிய அன்றைய ஆயர் மேதகு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை, இன்று அதற்கான கடிதத்தை வழங்கி உதவிய மேதகு தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை அவர்களையும்

2. இப் பாடசாலை வரலாற்றுக்கு அடித்தளமிட்ட அமரர் வண. சூசை நாதர் (அ. ம. தி ) அடிகளார்

3. இப் பாடசாலையை இதுவரை கட்டிக் காத்து வளர்த்த முன்னைய அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்,வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு சார்ந்தோர்.

இப் பாடசாலைக் கட்டிடங்களுக்கான உதவி வழங்கிய அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் என்னோடு இப்பாடசாலை வாழ்வில் உடன் பயணிக்கும் உதவிய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், நண்பர்கள், புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் மீள் குடியேற்ற முற்பகுதியில் எமக்கு பல உதவிகள் புரிந்த அன்றைய உதவி அரச அதிபர் பாடசாலையை மீள ஆரம்பித்து நடாத்த முதலாவது உதவியை எமக்குச் செய்த இளவாலை கன்னியர் மட பாடசாலையின் அன்றைய அதிபர் மின்சாரம் பெற, கணனி அறை திருத்த, பாண்ட் இசை கருவி பெற உதவிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.முருகேசு சந்திரகுமார் அவர்கள் பாலம் அமைக்க உதவிய நீர்ப்பாசனத் திணைக்களம் வேலியமைக்க உதவிய உதவும் உறவுகள், பெற்றோர் சுற்று மதில் அமைக்க உதவிய திருமதி அன்னலட்சுமி குடும்பத்தினர்

பெயர் வளைவு அமைத்து உதவிய அமரர் ஆசிரியர் திரு. வீனஸ் பெஞ்சமின் அவர்களது உறவுகள்

பணமாக உதவி புரிந்த அன்பு உறவுகள் திரு. ஜோர்ச், ஏனைய புலம்பெயர் உறவுகள்

இந்நூல் வழி வர உதவிய திரு. டியூக்

மேலதிக வகுப்பிற்கான கொட்டகை அமைத்துதவிய

செல்வி ஸ்ரெலா, அருட்தந்தை பிரவீன்

மேலதிக கற்பித்தலுக்காக வேதனம் வழங்கி உதவிய புலம்பெயர் உறவு திரு.அரவிந்தன், வைத்தியர் நரேஸ்குமார்

வறிய மாணவர்களுக்கு தனித்தனியாக உதவி புரியும் கருணைப்பாலம், மனித முன்னேற்ற நடுநிலையம், அன்னையில்லம், ஏடு, விடுதலை, கனடா அபிவிருத்திக் கழகம்

இவ் விழா சிறப்புற நீண்ட நாட்களாக உடனுழைத்த திரு.மா.பேரம்பலம், திரு.மோகனராஜ், திரு.பிரபாகரன், திரு. சிம்சன் போல், திரு. பாக்கியராஜா ஏனைய அனைத்து வழிகளிலும் எம்மோடு உடனுழைத்த அன்புள்ளங்கள் நன்றி கூறத் தவறியவர்களுக்கும் எமது இதய நன்றிகள்

"இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக"

அருட் சகோதரி அன்ரனீற்றா மாற்கு அதிபர்.