நிறுவனம்:கிளி/ சிவபாதகலையகம் அ. த. க. பாடசாலை
பெயர் | கிளி/சிவபாதகலையகம் அ.த.க.பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | பொன்னகர் |
முகவரி | பொன்னகர் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
“கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றார் தொழாரெனின்” என்ற வள்ளுவர் பெருந்தகையின் வாக்கிற்குஅமைவாகவும் அன்னைசத்திரம் ஆயிரம் அமைத்தல், ஆலயம் பதினாறாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,அன்னையாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழுத்தறிவித்தல், உலகிலே ஆற்றப்படும் தருமங்கள் அனைத்திலும் உயர்வானதாக கொள்ளப்படுவது ஏழைக்கு எழுத்தறிவித்தல் ஆகும். அவ்வகையிலே ஈழமணித்திருநாட்டில் வன்னிப்பெருநிலப்பரப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாற்றுத்தடங்களை பதித்துக்கொண்ட கரைச்சிப்பிரதேச செயலகப்பிரிவில் A-9 வீதிக்கு அருகாமையில் கிளிநொச்சி வலயத்தில் இருந்து 6Km தொலைவிலும் இரனைமடுச்சந்திமயில் இருந்து1.5 Km தெற்கு நோக்கியும் கிளிநொச்சி மத்தியவங்கிக்கு மேற்காகவும் கிழக்குப்பக்கமாகப் புகையிரதக்கடவையும் வடக்கே அறிவியல் நகர் வீதிக்குமிடையில் இப்பாடசாலை அமையப்பெற்றுள்ளது. இப்பாடசாலையின் வரலாறு தொடர்பாக நோக்குகின்றபோது இலங்கையின் தென் பகுதியில் ஏற்றபட்ட இனக்கலவரத்தின் காரணமாகப் பெருந்தொகையான மக்கள் அகதிகளாக்கப்பட்டு வடபகுதி நோக்கி அனுப்பிவைக்கப்பட்டனர் இவ்வாறு வருகை தந்த பெருந்தோட்டத்தொழிலாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னகர்,மலையாளபுரம், பாரதிபுரம், விவேகானந்தநகர்,தொண்டமான்நகர், அமைதிபுரம், ஊற்றுப்புலம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம் ஆகிய கிராமங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்துபுரம், செல்வபுரம், வசந்தநகர், திருமுறிகண்டி ஆகிய இடங்களிலும் அரசுக்குச்சொந்தமான காணிகள் துப்பரவு செய்யப்பட்டுக் குடியமர்த்தப்பட்டார்கள். இவ்வாறு குடியேறிய மக்களுக்கு அடிப்படையில் பல பிரச்சினைகள் இருந்தன அவர்களது குழந்தைகள் கல்வி கற்பதற்குப் பாடசாலை இல்லாமையே பெருங்குறையாக இருந்தது புதிய குடியிருப்புக்களில் வசித்த மக்களுக்கு அனுசரணையாக கியுடெக் நிறுவனம் செயற்பட்டு வந்தது இக்காலப்பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு ‘வெந்த புண்ணிலே வேல் பாய்வது போல’ மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த தகவல் அக்காலத்தில் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது. பத்திரிகைகள் வாயிலாக இதனைத்தெரிந்து கொண்ட 1982 பேராதனைப்பல்கலைக்கழக பொறியியல் பீடமாணவர்கள் ஒரு குழுவாக இப் பிரதேசத்திற்கு வருகை தந்து மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்கியிருந்தனர். அதன் போது தமது பிள்ளைகளை அயற் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளவில்லை எனவே தமது குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஓரு பாடசாலை அமைத்துத்தருமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். அவ்வகையில் கியூடெக் இணைப்பாளர் அருட்தந்தை பஜஸ் அவர்களும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களும் இணைந்து இப்பாடசாலையானது 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது 1983.04.15 அன்று இப்பாடசாலையானது ஓரு ஆரம்ப பாடசாலையாகத்தேற்றம் பெற்றது. இப்பாடசாலையானது தொடர்ந்து இயங்குவதற்கு ஒரு நிரந்தரமான கட்டடம் தேவை என்பதையுணர்ந்து திரு.வே.சர்வேஸ்வரன் அவர்களும் அவரோடு இணைந்த குழுவினரதும் கடின உழைப்பில் பாடசாலைக்கான நிரந்தர கட்டடமானது அமையப்பெற்றது மேலும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஒருமேடை நாடகத்தினை அரங்கேற்றி அதன் மூலம் கிடைத்த வருமானத்தினையும் அதற்கு இணையான தொகையினை அருட்தந்தை பஜஸ் அவர்களும் வழங்கி 60 x 20 அடி நீளமான ஓரு நிரந்தர கட்டடம் கட்டப்பட்டதாக அறியமுடிகிறது அக் காலத்தில் சூழ்நிலை காரணமாகவும் அரசு பாடசாலையினை கையேற்றகாத காரணத்தினாலும் மாணவர்குளுக்கான கல்வியினை தொண்டர் ஆசிரியர்களே கற்பித்து வந்தார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக செல்வி.சாந்தா பெர்னாண்டோ, செல்வி றீற்றா சின்னத்தம்பி, செல்வி நந்தினி சுப்பிரமணியம், ஆகியோர் காணப்பட்டனர் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பாடசாலையினை தமிழர் விடுதலைக்கூட்டணயின் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ ஆனந்தசங்கரி அவர்கள்களால் திறந்து வைக்கப்பட்டதென அறியமுடிகிறது இவ்வாறு தோற்றம் பெற்ற பாடசாலையானது 1992. 02. 01 அன்று அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு தரம் 1தொடக்கம் தரம் 11வரையான வகுப்புக்களைக் கொண்டவகை11 பாடசாலையாக வளர்ச்சி கண்டது. அரசு பாடசாலையினைப் பொறுப்பேற்று பாடசாலையினை நடாத்தி வந்தார் அதனைத்தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களில் இயங்கி வந்த இப் பாடசாலையானது மீண்டும் தனது நிரந்தர இடத்தில் 01.02. 2010 காலப்பகுதியில் இயங்க ஆரம்பித்தது புயலுக்குபின்னரான அமைதியைப்போல யுத்தத்தின் பிடியில் இருந்தமக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்கைக்குள் நுழைந்து தமது குழந்தைகளை கல்விகற்பதற்காக இப் பாடசாலையில் அதிபராக திருமதி இராஜேஸ்வரி விஜயநாதன் அவர்கள் செயற்பட்டு வந்தார். மேலும் பல்வேறுபட்ட மன அழுத்தங்களையும் தாங்கி வந்த சிறுவர்களையும் வழிப்படுத்தி மேம்படுத்துவதில் இந்த அதிபரின் பங்கு அளப்பெரியது. இப்பாடசாலையின் வரலாற்றில் முதன் முதலாக தரம் 5 புலமைப்பரீசில் பரீட்சையில் செல்வி.மதுசா என்ற மாணவி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்டமை இவ் அதிபரின் காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதனைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தொடக்கம் திருமதி பரமேஸ்வரி சோதிலிங்கம் அவரகள் இப்பாடசாலையின் அதிபராக தனது கடமை கடமைகளைப்பொறுப்பேற்பேற்று கடமையாற்றி வருகின்றனர் இவரது சேவைக்காலமானது இப்பாடசாலை வரலாற்றில் பொற்காலமாகவே கொள்ள முடியும் பல்துறை ஆற்றலும் துணிவும் கொண்ட இவ் அதிபரின் செயற்பாட்டினால் சிவபாதகலையகம் பாடசாலை கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னிலைப்பாடசாலையாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றது அதனைத்தொடர்ந்து பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாக சக்திரீவியில் ஓரு செவ்வியினை வழங்கியதன் மூலம் உலகம் முழுவதுமே இப்பாடசாலையினை திரும்பிப்பார்த்தது. இதன் மூலமாக பாடசாலையுடன் விடுபட்டிருந்த தொடர்புகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது இதன் முலம் போராதனைப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொடர்புகள் மீள ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. மாணவராக இருந்து செயற்பட்ட திரு.வே சர்வேஸ்வரன் அவர்கள் தற்போது லண்டனில் தொழிலதிபராகவும் பொறியியலாளராகவும் பணிபுரிந்துவருகின்றார். இவரும் இவருடன் இணைந்தவகையில் இவரது துணைவியான திருமதி ஆனந்தி சர்வேஸ்வரன் அவர்களும் அவர்களது சினேகிதர்களும் எமது பாடசாலையை மீளவும் கட்டியெழுப்புவதற்கு முன்வந்தார்கள். அவ்வகையில் பாடசாலையின் பௌதீகவளத் தேவைப்பாடுகளின் பலவும் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மட்டத்தில் நாடகத்தில் முதலிடம் பெற்றமையினைப்பாராட்டி எமக்கு 100×20 அடி மேடையுடன் கூடியபிரதான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது அவ்வாறே மலசலகூடங்கள் நீர்த்தாங்கிகள் மாணவர்களுக்கான தளபாடங்கள் திறன் பலகைகள் (Smart board) மடிக்கணனிகள், விளையாட்டு உபகரணங்கள், பல்லூடஎறியி (Multi media) என எமது இன்றைய வளர்ச்சிக்கு பெரிதும் அனுசரணையாக செயற்பட்டு வருகின்றார்கள. 2018 ஆம் ஆண்டு எமக்கு கிடைக்கப்பெற்ற சீர்நிலை வகுப்பறை முன்றில் ஒரு வகுப்பறை ஆரம்ப பிரிவு தரம்5 புலமைப்பரீட்சைக்கு தோற்றினார்கள். இவர்களில் மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 95 சித்திவீதம் எமக்குக் கிடைக்கப்பெற்றது. அதே போன்று க.பொ.த.சாதரணதரம் 2021 சித்தி வீதமானது 65 ஆக அமைந்திருந்தது. இந்த வளர்ச்சி எல்லாவற்றிற்றிற்கும் பாடசாலைச்சமூகத்தின் செயற்பாடுகளுக்கு அப்பால் திரு.வே. சர்வேஸ்வரன் அவர்களினதும் அவரது குழுவினரதும் ஆதரவு எமக்குப் பேருதவியாக அமைந்திருக்கின்றது. முன்னையகாலங்களுடன் ஒப்பிடும் போது பாடசாலையானது தற்போது அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துவருகின்றது. இந்தவகையில் 2019ஆம் ஆண்டு எமது பாடசாலையில் KOICA செயற்றிட்டத்தினூடாக விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது. அத்துடன் அனைத்து வகுப்பறைகளும் திருத்தம் செய்யப்பட்டது இச்செயற்றிட்டத்தினூடாக எமது பாடசாலை புதுப்பொலிவுடன் மிளிர்கின்றது. 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சிங்கள வன்செயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கலையகம் என்ற நாமத்தோடு தோற்றம் பெற்ற சிவபாதகலையகம் என்கின்ற இந்தப் பாடசாலையானது இவ் வருடத்தில் தனது 40 வருடங்களை நிறைவு செய்து மாணிக்கவிழாவினைக் கொண்டாடுகின்றது. இந்த 40 வருடகாலத்தில் பல்வேறுபட்ட விதத்தில் வளர்ச்சியடைந்த இப்பாடசாலையில் கற்றமாணவர்கள் இன்று பல இடங்களில் தொழில்புரிவதுடன் பலர் பல்கலைக்கழகங்களிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் கல்வியினைத்தொடர்ந்து வருகின்றார்கள் இந்தக்கிராமத்தின் வளர்ச்சியே இப் பாடசாலையின் வளர்ச்சியாகவும் கொள்ளமுடிகின்றது உயர்கல்விப் பீடங்களையும் உயர் தொழிற் பேட்டைகளையும் தனது அயற்பிரதேசங்களில் கொண்டுள்ள இப் பாடசாலையானது எதிர்காலத்தில் உயர்தர வகுப்புகளையும் கொண்ட பாடசாலையாக அமைய வேண்டுமென்பதே பெற்றோரின் ஆவலாக உள்ளது மேலும் இவ் விழாவிற்கும் இம் மலரின் வெளியீட்டிற்கும் ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்கிய திரு.வே.சர்வேஸ்வரன் அவர்களிற்கு பாடசாலை சமூகம் சார்பில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இப்பாடசாலையின் அகவை 40 ற்கும் திரு.வே சர்வேஸ்வரன் அவர்களின் அகவை 60க்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளது.