நிறுவனம்:ஆலடி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆலடி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி ஆலடி விநாயகர் ஆலயம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


இந்த ஆலயம் திருகோணமலை நகரத்தின் மத்தியில் மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. திருகோணமலையில் மிகப் பிரசித்தி பெற்ற ஶ்ரீபத்திரகாளி அம்பாளுடைய ஆலயத்திற்கருகே அதன் ஈசானதிசையில் அமைந்திருப்பது இவ்வாலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பாகும். ஆலடி விநாயகர் ஆலயத்திற்கு ஈசானதிசையில் ஈழத்தில் மிகப் பிரசித்திபெற்ற பழம்பெரும் ஷேத்திரமாகிய திருக்கோணேசர் ஆலயம் மலையுச்சியில் காட்சியளிக்கின்றது. ஆலடி விநாயகர் ஆலயத்தை வழிபடும் அடியவர்கள் அங்குநின்றபடியே திரும்பி நின்று கோணேசப்பெருமானைக் கைகூப்பி வணங்குவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாலயத்திற்கு வடக்குத்திசையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஐயனார்கேணி என்ற ஓர் இடம் இருக்கின்றது. தற்போது அந்த இடம் மக்கள் குடியிருப்பாக மாறி, வீதிக்கு மாத்திரம் ஐயனார்கேணி வீதி என்றபெயர் இருந்து வருகின்றது. சுமார் 100 வருடங்களுக்கு முன் பன்னகாமத்திலிருந்து (மாத்தளை) கூடாரவண்டிகளில் வியாபாரப் பொருட்களை ஏற்றி வந்து திருகோணமலையில் வியாபாரம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. வியாபாரத்திற்காக வரும் வியாபாரிகள் மாட்டுவண்டிகளோடு ஐயனார்கேணி என்ற இடத்தில் தங்கி முகாமிட்டு வந்தார்கள். அங்கு ஒரு கேணியும், கேணியடியில் பிள்ளையாரும் இருந்தது. உள்ளூர் வியாபாரிகளோடு, வெளியூர் வியாபாரிகளும் தாங்கள் முகாமிட்டுவரும் கேணியடிப் பிள்ளையாரைப் பக்தியோடு வழிபட்டுப் பூசை செய்துவந்தார்கள். காலப்போக்கில் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட அந்த இடம் மக்கள் குடியிருப்பாக மாற்றமடைந்தது. இதனால் சுமார் 80 வருடங்களுக்குமுன் இங்கிருந்த விநாயகரை எடுத்துவந்து ஸ்ரீபத்திரகாளி கோவிலுக்கு அருகேயிருந்த ஆலமரத்தடியில் குடிசைக்கோவில் ஒன்று கட்டி அதில் வைத்து வழிபட்டு வந்தார்கள்.

ஆலமரத்தடியில் வைத்து வழிபட்டு வந்ததால் ஆலடிவிநாயகர் என்று அழைத்து வந்தனர். அக்காலத்தில் திரு. சின்னையாக்குருக்கள் என்பவர் பூசை செய்துவந்தார். திரு. சின்னையாக்குருக்களுக்குப் பின் வேதாரணியத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வேதநாயகக் குருக்களின் மகன் திரு. வே. சுப்பையாக்குருக்கள் 1905 ஆம் ஆண்டில் மடாலயம் ஒன்று அமைத்து, அதில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார்.

காலத்திற்குக் காலம் இவ்வூர் தர்மவான்கள் ஆலயத்திற்கு மகாமண்டபம், தரிசனமண்டபங்களைக் கட்டிக்கொடுத்தார்கள். 1924 ஆம் ஆண்டில் எழுந்தருளி விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, அன்று தொடக்கம் அலங்கார உற்சவத்தை நடாத்தி வருகின்றார்கள். 1945 ஆம் ஆண்டு முதன் முதலாக சம்புரோட்சண கும்பாபிஷேகம் நிறைவேறியது. 1959 ஆம் ஆண்டு திருகோணமலை வாழ் சைவப் பெருங்குடி மக்களின் உதவியினால் முன்மண்டபமும், சிறிய கோபுரமும் அமைக்கப்பெற்று ஆலடிவிநாயகர் ஆலயம் அழகுப்பொலிவு பெற்றது. சிறுமடாலயமாயிருந்து வளர்ச்சியடைந்த இவ் வாலயத்திற்கு சைவப்பெருமக்களின் உதவியினால் 1970 ஆம் ஆண்டில் கற்பக்கிரகம் புனருத்தாரணம் செய்யப் பெற்று தூபியமைத்து கருவறையில் புதிய விநாயகத் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பெற்று, 28.01.1972இல் மகாகும்பாபிஷேகம் நிறைவேறியது. இப்பெரும்பணியை திரு. வே. கு. சுப்பையாக் குருக்களின் மகனாகிய திரு. சு. கு. முத்துக்குமாரசாமிக் குருக்கள் முன்னின்று நடாத்தி வைத்தார்கள். இவ்வாலயம் தற்போது கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தரிசனமண்டபம், கோபுரத்தை உள்ளடக்கிய வெளிமண்டபங்களைக் கொண்டது. கற்பக்கிரகம் அழகிய சுதைச்சிற்ப வேலைகளையுடைய ஸ்தூபியைக் கொண்டது.

அபயம், வரதம், அங்குசம், பரசம் தாங்கிய திருக்கரங்களையுடைய சதுர்ப்புஜ விநாயகப்பெருமான் ஆசனத்தில் இருந்த பாவனையில் கற்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மகாமண்டபம் இவ்வாலயத்தில் வசந்தமண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இம்மண்டபத்தினுள் பொதுமக்கள் போவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இம் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் பஞ்சலோகத்திலான விநாயகப்பெருமான், பஞ்சமுக விநாயகர், மகாவிஷ்ணு, சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகள் உள்ளனர்.

இந்த மூர்த்திகளுக்கு நித்தியதீபம் ஏற்றப்பட்டபடி இரண்டு பாவை விளக்குகள் வசந்தமண்டபத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாலயத்தின் வரலாற்றுக்குரியதும், ஐயனார் கேணியிலிருந்து கொண்டுவரப்பட்டதுமாகிய விநாயகப்பெருமானும், ஒரு சிவலிங்கமும் இம்மண்டபத்தினுள் வைத்துப் பூஜிக்கப்பட்டு வருகின்றது. தரிசனமண்டபத்தில் மூஷிகமும், பலி பீடமும் இருக்கின்றது. இம்மண்டபத்தின் சுவர்களில் கஜமுகன் போர், விநாயக சஷ்டிவிரதம், அனந்தன் சாபநீக்கம் பற்றிய புராணக் கதைகளை விளக்கும் அழகிய வர்ணச் சுவரோவியங்கள் முன்னர் தீட்டப்பட்டு இருந்துள்ளது. மகாமண்டப வாசலை பன்னிரண்டடி உயரமும், பத்தடி அகலமுங்கொண்ட பித்தளையாற் செய்யப்பட்ட அழகிய பெரிய திருவாசியொன்று அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. தரிசனமண்டபத்தின் வடகிழக்குத் திசையில் வைரவரும், நாகதம்பிரானும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாலயம் சுமார் முப்பத்தைந்தடி உயரமுடைய சிறிய கோபுரத்தைக் கொண்டது.

இவ்வாலயத்தில் திருவனந்தல், காலைச்சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை ஆகிய நான்குகாலப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாத சதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்ஹாரம், சர்வாலய தீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சித்திரா பூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.

கிழக்குமாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதல் பஞ்சமுக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஈசானத் திருமுகத்தை மத்தியில் மேல்நோக்கிய பாவனையில் வைத்து, தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் ஆகிய நான்கு திருமுகங்களையும் நான்கு திசைகளையும் நோக்கியிருக்கும் படியாக இந்தப் பஞ்சமுகவிநாயகர் அமைக்கப்பட்டுள்ளார். இத்திருவுருவத்திற்கு விநாயக விரதகாலம் இருபத்தொரு நாளும் பஞ்சமுகார்ச்சனை நடைபெற்று வருகின்றது. இத்திருவுருவம் 1980 ஆம் ஆண்டு ஆவணிமாதம் 21 ஆம் திகதி பிரதிஷ்டை செய்யப்பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது இவ்வாலய தர்மகர்த்தாவாக ஸ்ரீ சு. கு. முத்துக்குமாரசாமிக் குருக்களும், அவருடைய மைந்தர் ஸ்ரீ கு. சுந்தரலிங்க தேசிகரும் ஆலயத்தைச் சிறப்பாக நடாத்தி வருகின்றனர். திருகோணமலைப் பட்டினத்தில் விநாயகர் ஆலயங்கள் பல இருந்தபோதிலும் இவ்வாலயத்தில் எண்ணிய பொருளெல்லாம் எளிதில் முற்றுறச் செய்யும் சக்தியுடன் அடியார்களுக்கு வேண்டியதை ஈந்து விநாயகப் பெருமான் அருள்பாலித்து வருகின்றார்.