நிறுவனம்:ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் ஆலங்கேணி, மூதூர்
முகவரி ஆலங்கேணி, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருகோணமலைப் நகரத்திலிருந்து பதினாறு கிலோ மீற்றர் தூரத்தில் ஆலங்கேணி என்ற கிராமம் இருக்கின்றது. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோவிலிலிருந்து எட்டுக் கிலோமீற்றர் தூரத்தில் ஆலங்கேணி விநாயகர் கோவில் இருக்கின்றது. மகாவலி கங்கையின் ஒரு கிளையாகிய குருக்கள் கங்கை இவ்வாலயத்திற்குச் சற்றுத் தூரத்தில் ஓடிச்சென்று கங்கைத்துறை என்னுமிடத்தில் கடலில் சங்கமமாகின்றது.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆடி அமாவாசைத் தீர்த்தத்திற்கு எழுந்தருளிவரும் போது ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் ஆலயத்தில் தங்கி இளைப்பாறிச் சென்று கங்கைத்துறை யில் தீர்த்தமாடுவார். இந்த வழமை பண்டைக்காலந் தொடக்கம் நடைபெற்று வருகின்றது. கங்கைத்துறையில் நடைபெறும் ஆடி அமாவாசைத் தீர்த்தத்திற்குப் பல கிராமங்களிலிருந்தும் முதல் நாளிரவே மக்கள் திரளாக வந்து கூடுவார்கள். கடற்கரையோரமாகவுள்ள பரந்த மணற்பரப்பில் மக்கள் விடுதியிட்டுத் தங்கியிருப்பார்கள். அங்கு சிறிய கோவிலொன்றிருக்கின்றது. அக்கோவிலில் அன்றிரவு திருக்கரைசைப்புராணப் படிப்பு நடைபெறும். கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் சமய,கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதிகாலையில் கங்கைச் சங்கமத்தில் சுவாமி தீர்த்தமாடி ஆலங்கேணியினூடாகத் தம்பலகாமத்தைச் சென்றடைவார்.

இருநூறு வருடங்களுக்குமுன் யாழ்ப்பாணம் காரைநகரிலிருந்து இங்கு வந்த திரு. கணபதிப்பிள்ளை என்பவர் இந்த இடத்திலுள்ள காடுகளைத் திருத்தித் தனது வம்சத்திலுள்ள சில குடிகளையும் அழைத்து வந்து குடியமர்த்தினார். அரசாங்கத்திடமிருந்து கிரயமாகப் பெற்ற இந்தக் காணியில் ஒரு பெரிய ஆலமரமிருந்தது, அதற்கருகில் ஒரு கேணியும் இருந்தது. ஆலமரமும் கேணியும் இருந்தபடியால் அந்த இடத்திற்கு ஆலங்கேணி என்று பெயரிட்டார். திரு. கணபதிப்பிள்ளையுடைய தகப்பனார் பெயர் விநாயகர். ஆதலால் ஆலமரத்தடியில் தான் அமைத்த கோவிலுக்கு அருள்மிகு விநாயகர் ஆலயம் எனப் பெயரிட்டார். ஆதியில் ஒரு கொட்டில் கோவில்தான் இருந்தது. காடு திருத்தும்போது ஆலமரத்தடியிற்கிடைத்த தான்தோன்றி லிங்கமொன்றையே கொட்டில் கோவிலில் வைத்து வழிபட்டுவந்தார். அந்த லிங்கமே இன்றும் ஆலயக் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. காலத்திற்குக் காலம் கொட்டில் கோவிலுக்கு ஓலை மண்டபங்களமைத்துப் பெரிதாக்கி கணபதிப் பிள்ளையாருடைய சந்ததியினரே பூசைகளையும் செய்து வந்தார்கள். அவருடைய சந்ததியினராகிய திரு. காசிநாதர், சுப்பர், தம்பையர், செல்லையா, அம்பலவாணர் என்பவர்கள் தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக ஆலயத்தைப் பராமரித்துப் பூசைகளையும் செய்து வந்தார்கள்.

திரு. தம்பையர் காலத்தில் இவ்வாலயம் கற்கோவிலாகக் கட்டப்பட்டது. நாற்பது வருடங்களுக்குமுன் கற்பக் கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபங்களைக் கொண்ட மடாலயமாகக் கட்டப்பட்டு தான்தோன்றியாகிய பழைய லிங்கத்தையே கருவறையில் பிரதிஷ்டை செய்தார்கள். ஆனால் அருள்மிகு விநாயகர் ஆலயம் என்றே பெயர் வழங்கிவருகின்றது. பிள்ளையாருக்குரிய பூசைமுறைகளே இங்கு நடைமுறையில் இருந்துவருகின்றன.

1980ஆம் ஆண்டு தொடக்கம் இந்த ஆலயத்தை இந்து இளைஞர் மன்றத்தினர் பொறுப்பேற்று நடத்திவருகின்றார்கள். இவர்கள் பிராமணக் குருக்களைப் பூசைக்கு நியமித்திருக்கின்றார்கள். பிராமணக் குருக்கள் பூசைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபின் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தான்தோன்றி லிங்கத்தை அகற்றிவிட்டு பிள்ளையாரை ஸ்தாபிக்கவேண்டுமென்று ஆலோசனை கூறினாராம். அதனால் அவருக்குப் பல குடும்பக் கஷ்டங்கள் ஏற்பட்டதாம். இதனை உணர்ந்த குருக்கள் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டாராம்.

அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி விநாயக விக்கிரகம் வைக்கப்பட்டிருக்கின்றது. வீதியில் ஆலமரத்தடியில் நாகதம்பிரானும், ஈசான திக்கில் வில்வமரத்தடியில் வைரவரும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. மார்கழித் திருவாதிரையைத் தீர்த்த தினமாகக் கொண்டு அதற்குமுன்னுள்ள பத்து நாட்களும் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. நித்திய பூசை மூன்று காலங்கள் நடைபெறுகின்றன. ஆவணிச் சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, தைப்பொங்கல், சித்திரா பூரணை என்பன விசேட பூசை விழாக்களாக நடைபெற்று வருகின்றன.