நிறுவனம்:ஆத்ம யோக ஞான சபா காயத்திரி ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆத்ம யோக ஞான சபா காயத்திரி ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் கன்னியா
முகவரி ஆத்ம யோக ஞான சபா காயத்திரி ஆலயம், கன்னியா, திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலையின் புகழ் பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் வனாந்தர இயற்கை அழகுடன் காணப்படும் ஆலயமே இதுவாகும். கன்னியா பிரதேசத்தில் ஆத்ம யோக ஞானசபா காயத்திரி ஆலயம் என்ற பெயரில் இந்த ஆலயம் இயங்கி வருகின்றது. காயத்திரி பீட ஆத்ம யோக ஞான சபாவின் ஸ்தாபகர் காயத்திரி சித்தரி பிரம்ம ரிஷி முருகேசு சுவாமிகள் ஆவார். 1997ம் ஆண்டு திருகோணமலை வாழ் காயத்திரி பக்தர்கள் நுவரெலியா காயத்திரி பீட தலைமையகம் சென்ற போது திருக்கோணமலையிலும் காயத்திரி பீட கிளை நிறுவப்பட்டு, அங்கு வாழ் மக்கள் இந்து மக்கள் காயத்திரி மந்திரத்தினுடைய மகிமையை உணர்ந்து காயத்திரி மாதா வழிபாட்டினைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு அவர்களின் குறை நீக்கப் பெற்று அமைதி வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக ஆசீர்வாதம் அளித்திருந்தார்கள்.

இவ் ஆலயம் அமையப் பெறும் காணியினைப் பெறுவதற்காக திருமலை வாழ் காயத்திரி பக்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் எதுவும் சரிவரவில்லை. இறுதியாக திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளராக இருந்த திரு. அருமைநாயகம் ஐயா அவர்களின் வழிகாட்டலில் திருமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகராஜாவுடைய குடும்பத்தினர் 5 ஏக்கர் காணியினை காயத்திரி பீத்திற்கு அன்பளிப்பு செய்தார்கள்.

2001ம் ஆண்டு முறைப்படி இக்காணி கிடைக்கப் பெற்றதும், ஆலய நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 2010ம் ஆண்டு ஆடி மாதம் கும்பாபிஷேகம் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ சோ. ரவிச்சந்திரக் குருக்களால் நடாத்தப்பட்டது. இவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் காயத்திரி மாதவினுடைய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்பிய போது காயத்திரி சித்தர் முருகோசு சுவாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதன் பின்னர் திருக்கோணமலை ஒரு சிவபூமியாக இருப்பதனால் இந்தியால் "தராபாத்" என்ற இடத்தில் இருந்த சுவாமி சிவபாலயோகி மராஜ் அவர்களின் ஆழ்ந்த தியானத்தின் போது நர்மதா நதியில் உருவான இலிங்க பெருமானை காயத்திரி சித்தர் முருகேசு சுவாமி அவர்களுக்கு சிவபாலயோகி சுவாமி வைக்க அந்த லிங்கப் பெருமான் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

2010ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு முன்னர் எண்ணெய்க் காப்பின் போது அந்த லிங்கத்தின் சிறப்பை அனைவரும் உணர்ந்து கொண்டனர். உடனடியாக காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிஜியின் சீடரான தென்னாபிரிக்க நாட்டினைச் சேர்ந்த சக்காராணாந்தர் சுவாமிஜி அவர்கள் இந்த லிங்கத்திற்கு "காயத்திரி சித்தர் லிங்கம்" எனப் பெயரிட்டார். இவ் ஆலயத்தில் காயத்திரி தேவி, முருகன், சிவதுர்க்கா, மகாவிஷ்னு, ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களும் காயத்திரி சித்தர், முருகேசு சுவாமிகள், அகத்திய மாமுனி, விஸ்வாமித்திரர், மாமகரிஷி, கண்ணீரியா யோகி, மாமகரிஷி (காயத்திரி சித்தர், முருகேசு மாமகா சித்தர்களின் குரு) கோரக்கர் சித்தர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்காக உள்ளன. இவ் ஆலயத் திருப்பணிகளை பூரணப்படுத்துவதற்கு காயத்திரி பக்தர்கள் மாத்திரமின்றி திருமலை வாழ் இந்து மற்றும் ஏனைய மதத்தவர்களும் தாமாக முன்வந்து பணிகளை மேற்கொண்டு உதவி செய்தார்கள்.

இவ்வாலயத்தை சூழ அழகிய வயல் நிலங்கள், தோட்டங்கள் அழகாக காணப்படுகின்றன. இவ் ஆலயத்தில் தினமும் காலை 7.45 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பூசைகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை தோறும் மாலை 4.30 மணிக்கு குருபூஜையும், காயத்திரி பூஜையும் நடைபெறுவதுடன் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் காலை அபிஷேகத்துடன் அபிஷேக பூஜையும், நித்திய பூஜையும், குரு பூஜையும் நடைபெறும். அத்துடன் காயந்திரி பூஜையும் காயத்திரி யாகமும் நடைபெற்று அன்னதான நிகழ்வும் நடைபெறுகின்றது.

இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் இவ் ஆலயத்தை சக்தி பீடம் என அழைப்பார்கள். இந்தியாவில் இருக்கும் பக்தர்களும் வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர். இப்பிரதேசத்தில் வாழும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவ்வாலயம் பல உதவிகள் செய்து வருகின்றமை சிறப்பான அறப்பணியாகும்.