நிறுவனம்:அருள்மிகு ஶ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருள்மிகு ஶ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி முத்துக்குமாரசுவாமி கோவில், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


இந்த ஆலயம் திருகோணமலையில், திருஞானசம்பந்தர் வீதியில் இருக்கின்றது. திருக்கோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ளது. இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பிரசித்திபெற்ற ஸ்ரீபத்திரகாளியம்பாள் ஆலயமும், வடக்கே விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவிலும் அமைந்து சைவத் தமிழ்மக்கள் நெருக்கமாய் வாழும் இடத்தில் இருந்தபோதிலும், இவ்வாலயத்திற்குச் சமீபமாக இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றும் காணப்படுகின்றது. பள்ளிவாசலையண்டி நெருக்கமாய் வாழும் இஸ்லாமிய மக்களும் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பற்றும், பக்தியுமுடையவர்களாய் வாழ்கின்றார்கள்.

முத்துக்குமாரசுவாமி என்பது முருகனுடைய திருநாமங்களிலொன்று. இத்தலம் முருகவழிபாட்டுத் தலமாகவே இருந்துவருகின்றது. நித்திய, நைமித்திய கருமங்கள் யாவும் ஸ்ரீ சண்முகப்பெருமானுக்கு உரியவையாகவே நடைபெற்று வருகின்றது. ஆனால் கருவறையில் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது.

தற்போதுள்ள ஆலயத்தைச் கட்டுவதற்கு முன் சுமார் 1800ஆம் ஆண்டளவில் அந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்து வந்திருக்கின்றது. சடையர் என்னும் பண்டார சாது ஒருவர் அவ்விடத்தில் ஒரு சிறு குடிசை கட்டி வேல் ஒன்றை வைத்து வழிபாடு செய்து வந்தார். அவருக்குப் பின் திரு. செல்லையாபிள்ளை என்பவர் அக்குடிசைக் கோவிலைச் சற்றுப் பெரிதாகக் கட்டி அந்த வேலை வைத்து வழிபாடு செய்துவந்தார். அக்காலத்தில் வாழ்ந்த திரு. மு. சண்முகம்பிள்ளை என்பவர் சிறந்த முருகபக்தன். செல்லையா பிள்ளையின் மறைவுக்குப்பின், இந்தியாவிலிருந்து வந்த ஒரு சந்நியாசி காசியிலிருந்து கொண்டுவந்த சிவலிங்கமொன்றைத் திரு. மு. சண்முகம்பிள்ளையிடம் கொடுத்து "நீ வழிபட்டு வரும் ஆலயத்தில் இந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்" என்று வேண்டிக் கொண்டார். வேண்டுகோளை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்ட சண்முகம்பிள்ளையவர்களுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. நானே முருகவழிபாடு செய்பவன், சந்நியாசியோ லிங்கத்தை தந்து பிரதிஷ்டை செய்யும்படி சொல்கின்றார். இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். இறைவன் அவருடைய கனவில் தோன்றி, இந்த லிங்கத்தை ஏற்றுக்கொண்ட உனக்கு இஷ்டசித்திகளெல்லாம் கிடைக்க இருக்கின்றது. லிங்கத்தை ஸ்தாபிப்பதற்குரிய மூலஸ்தானம் இதுதானென்றும், மற்றும் பரிவாரமூர்த்திகள் அமையவேண்டிய இடங்களையும், தீர்த்தக் கேணி அமைக்கவேண்டிய இடம் முதலானவற்றையும் இறைவன் அவருக்குக் காட்டிக்கொடுத்தாராம்.

அடுத்த நாள் காலையில் அவ்விடத்திற்குப் போய்ப் பார்த்த போது கனவில் கண்ட அடையாளங்கள் பிரத்தியட்சமாகவும் சரியாகவுமிருந்தன. இறைவனுடைய பெருங்கருணையை நினைத்து பரவசமடைந்த சண்முகப்பிள்ளையவர்கள், கனவில் தனக்கு இறைவன் காட்டிய பிரகாரம் ஆலயத் திருப்பணி வேலைகளைத் தொடங்கினார். திருப்பணி வேலைகள் பூர்த்தியாகிக் கொண்டிருக்கும் போது தீர்த்தக் கிணற்றையும் வெட்டு வித்தார். திருப்பணிவேலைகள் ஓரளவு பூரணமடைந்திருந்ததாலும், மூர்த்திகளுக்கும், மற்றுள்ள தேவைகளுக்கும் பணமில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் இறைவன் கனவில் தோன்றித் தீர்த்தக் கிணற்றை இன்னும் ஆழமாகத் வெட்டும்படி கூறினாராம். மேலும் கிணற்றை ஆழமாக அகழ்ந்தபோது ஆழத்தில் திரவியங்கள் கிடைக்கப் பெற்றன .

அதனையெடுத்து மூர்த்திகளும், மூர்த்திகளுக்குரிய சர்வாபரணங்களும் செய்வித்து காசியிலிருந்து சந்நியாசியாரால் கொண்டுவரப்பட்ட லிங்கத்தை ஸ்தாபித்து, அதனுடன் வேலையும் பிரதிஷ்டைசெய்து 1889 ஆம் ஆண்டு ஆனி மாதம் பத்தாந் திகதி மகாகும்பாபிஷேகத்தைச் செய்வித்தார். சண்முகம் பிள்ளையவர்களுடைய காலத்திற்குப்பின், அவருடைய மருகர் திரு. அம்பலவாணரும், அவருக்குப்பின் அவகுடைய மருகர் திரு. நவரெட்ணம் அவர்களும் முத்துக்குமாரசுவாமி கோவிலைப் பராமரித்து வந்தார்கள். முன்னைய இருவருக்கும் ஆண் சந்ததி இல்லாததால் மருமக்கள் ஆலயத்தைப் பராமரித்தனர். திரு. நவரத்தினத்திற்கு இறைவன் ஆண் சந்ததியை அனுக்கிரகித்தார். அதனால் திரு. நவரத்தினத்திற்குப்பின் அவருடைய மூத்த மகன் திரு. ந. இராஜவரோதயம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்கள் ஆலயப்பராபரிப்புக்கு உரியவரானார். இராஜவரோதயம் சிறுவனாயிருந்ததால், அவர் பொறுப்பேற்கும் வரையும் அவருடைய மாமனார் திரு. லிங்கரெட்டினம் என்பவர் ஆலயத்தைப் பராபரித்து வந்தார். இவருடைய காலத்தில் 1932 ஆம்ஆண்டு (06.04.1932) இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திரு. ந. இராஜவரோதயம் அவர்களைப் பலரும் அறிவார்கள். மக்களுக்கும், மகேஸ்வரனுக்கும் தொண்டனாய் வாழ்ந்தவர். இரத்தின இராஜவரோதயம் என்பது அவருடைய முழுப்பெயர். அவர் தன் பெயரைச் சுருக்கி என். ஆர். ராஜவரோதயம் என்று எழுதி வந்தார். இவர் பாராளுமன்ற உறுப்பினராயிருக்குங் காலத்தில் முத்துக்குமாரசுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். 1950 ஆம் ஆண்டு திருக்கோணேசப் பெருமானுடைய பெருங்கருணையினால் நிலத்திலிருந்து வெளிப்பட்ட கோணேசர்கோவில் திருவுருவங்களுக்கு ஆலயமெடுக்க வேண்டுமென்று உறுதிபூண்டார். இந்த நோக்கத்திற்காக, திருகோணமலைச் சைவப் பெருமக்களுக்கு வழிகாட்டியாயிருந்த இராஜவரோதயம் கோணேசப் பெருமானுக்கு ஆலயமெடுத்தபின் முத்துக்குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் செய்யவேண்டுமென்று சங்கற்பம் செய்து பின்போட்டுவிட்டார்.

கோணேசப்பெருமானுக்குக் கோவிலெடுத்துக் கும்பாபிஷேகம் செய்வித்த இராஜவரோதயமவர்கள் மாபெரும் திருப்பணியைச் செய்து நிறைவேற்றிய திருப்தியோடு இறைவன் திருவருளுக்குப் பாத்திரராகி இயற்கை எய்திவிட்டார். அவருக்குப்பின் அவருடைய மகன் திரு. இ. ஸ்ரீதரன் ஆலயப் பராபரிப்புக்குரியவரானார். இவர் இளைஞனாயிருப்பதால், திரு. இராஜவரோதயமவர்களுடைய சகோதரி புவனேஸ்வரியின் கணவர் திரு. சி. சிவானந்தம் அவர்கள் ஆலயப் பொறுப்பையேற்று முகாமையாளராயிருந்து நடத்தி வந்தார். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலக மகாயுத்தத்தில் எல்லாக் கோயில்களும் பூட்டப்பட்டிருந்தது. இந்த ஆலயத்தில் மாத்திரம் தொடர்ந்து பூசைகள் நடைபெற்று வந்தன.

கருவறையில் லிங்கத்துடன் வெள்ளி மயிலும், தங்க வேலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில் பிள்ளையார், வள்ளி, தெய்வயானை சமேத ஶ்ரீ முத்துக்குமார சுவாமியும், தண்டாயுதபாணியும் எழுந்தருளி விக்கிரகங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த மண்டபத்தில் கிழக்குமுகமாக பிள்ளையார் சிலாவிக்கிரகமும், சண்டேஸ்வரருமுண்டு. ஸ்தம்ப மண்டபத்தில் மயூரம், பலிபீடம் என்பனவும், வசந்த மண்டபத்தையடுத்துள்ள யாகசாலைக்கருகில் பைரவருக்குத் தனியாலயம் உண்டு. வெளிப்பிரகாரத்தில் நாகதம்பிரானுக்குத் தனியாலயமுண்டு.

ஆலயத்தில் நித்தியப்படி மூன்றுகாலப் பூசை நடை பெற்றுவருகின்றது. வைகாசி விசாகத்தைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாட்களுக்கு மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இரதோற்சவத்தையடுத்து ஆலயத் தீர்த்தக் கேணியில் சுவாமி தீர்த்தமாடுவார். கந்தசஷ்டி ஆறு நாளும் உள்ளூர், வெளியூர் அடியார்கள் ஆலயத்திலிருந்தே விரதமனுட்டிப்பார்கள். மாதந்தோறும் கார்த்திகை விழாவும் திருக்கார்த்திகைக்கு விசேஷ விழாவும் நடைபெறுகின்றது. திருவெம்பாவை, தைப்பூசம், சிவராத்திரி என்பன விசேடமாக அனுட்டிக்கப்பட்டு வருகின்றன.

ஆனி உத்தரத்தில் ஆரம்பித்து ஆவணி மாதம் வரையும் கந்தபுராணப் படிப்பும், கந்தசஷ்டி நாட்களில் மயூரகிரிப் புராணப் படிப்பும் நடைபெற்றுவருகின்றது. இவ்வாலயத்திற்குச் சிறப்பான ஊஞ்சல் பாட்டு உண்டு.

தற்போது கும்பாபிஷேகம் செய்யும் நோக்கத்தோடு திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நவக்கிரக கோவிலும் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.