நிறுவனம்:அம்/ பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் பாண்டிருப்பு
முகவரி பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயிலானது கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பழமை வாய்ந்த ஆலயமாகும். இது பெரும்பாலும் கி.பி 1540 ஆண்டினை மையப்படுத்தி இவ்வாலயம் 1584 இல் கட்டப்பட்டது எனலாம். 14 ஆம் நூற்றாண்டில் மட்டக்களப்பு பிரதேசம் கண்டி அரசின் மேலாதிக்கத்தினுள் வந்தது. கண்டி அரசன் “திஸாவ” எனப்பட்ட நான்கு திக்கதிபர்களை மட்டக்களப்பு பிரதேசத்தை நிர்வாகிக்க நியமித்தான்.

இவர்களில் முதன்மையானவராக கலிங்கனான மாருத சேனன் விளங்கினான். இவனுடைய புதல்வனான எதிர்மன்னசிங்கன் பழுகாமத்திலிருந்து ஆட்சி செய்தான். இந்தியாவில் உள்ள கொங்கு நாட்டிலிருந்து விஸ்ணு கோத்திரத்தை சேர்ந்த தாதன் என்னும் வைசியன் அவனுடைய சகோதரன் கவுதத்னோடு கிழக்கிலங்கையில் உள்ள நாகர் என்னும் திருக்கோவிலில் வந்து இறங்கினான். அவன் திருக்கோவில் மக்களுக்கு தாதன் மகாபாரதக் கதையை போதித்தான்.

இதனை அறிந்த எதிர்மன்னசிங்கன் தாதனை கண்டு மகாபாரத நிகழ்வுகளை முறைப்படி அறிந்தான். அந்நிகழ்வுகளை நிகழ்த்துவதற்கு சமுத்திரக் கரையை அண்டிய மரங்கள் அடர்ந்த சோலை அதற்கடுத்ததாக காடும் இருக்கின்ற சூழல் உகந்தது என தாதன் வேண்டினான். அனைவரும் கடலோரமாய் பயணித்து பாண்டிருப்பை கண்டனர். அந்த இடத்தில் பாண்டவருடைய உடல் உறுப்பை ஆறு பேருக்கு உண்டாக்கி அதனை நம்பும்படி தீ வளர்த்து அதிலிறங்கி மீண்டு காட்டினான்.

எதிர்மன்னசிங்க மன்னனும் மகிழ்ந்து அவ்விடத்தில் ஆலயம் உருவாக்கி “பாண்டுறுப்பு” எனும் நாமம் சூட்டினான். பாண்டுறுப்பு எனும் நாமம் நாளடைவில் திரிந்து இப்போது “பாண்டிருப்பு” என அழைக்கப்படுகிறது. தாதனால் அமைக்கப்பட்ட இவ்வாலயம் தாதன் கோயிலென்றும், திரௌபதை கோவில் கொண்டதால் திரௌபதை அம்மன் ஆலயம் என்றும், தீயினால் ஆகிய பெருவேள்வி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுவதால் தீப்பள்ளயக் கோயில் எனவும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

ஆலயத்தின் தலவிருட்சம் கொக்கட்டி மரமாகும். கண்டி அரசனான விமலதர்மசூரியன் சம்மாந்துறை பட்டினத்துக்கு விஜயம் செய்து இவ்வாலயத்தை தரிசித்தான். அரசன் இக்கோயிலுக்கு தேவையான நிலமும், மேட்டுவட்டை, கரவாகு வட்டங்களில், காணிநிலமும், ஒளிமிக்க சக்கரமும், படையும், யானைத் தந்தமும், தங்கக்களஞ்சியமும், ஆலயத் திருப்பணிக்காக வழங்கினான். இவ் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புள்ள ஆவணங்களாக தாதன் கல்வெட்டும், பட்டயங்களும், பத்திரிகைகளும் உள்ளன.

தாதன் உலோகத்தினால் அம்பாள் சிலை, கிருஷ்ணர் சிலை, மரத்திலான பாண்டவர், குந்திதேவி சிலை, பண்டார் செப்பு, தீபக்கால், மணி, சல்லாரி, தாரை, தம்பட்டம் போன்றவற்றை கோயிலுக்கு வழங்கி மறைந்தான் என வரலாறும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இவ்வாலயம் தற்காலிக பந்தலாய் அமைந்திருந்தது பின்னர் உறுதியான கற் கட்டிடமாயிற்று. இன்று பிரதான கோயில் கிழக்கு வாசலையுடைய கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், சுற்றிவர அகன்ற நெடியுயர்ந்த மண்டபமும் உடையதாக அமைந்துள்ளது.

வெளி மண்டபத்தை அண்டி பரிவார தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. அர்த்தமண்டபம் முடியும் இடத்தில் கற்பக்கிரகத்திற்கு நேரே மேற்கு வாசல் உடைய வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது கோயிலுக்கு வலப்புறம் காடேரி மேடையும் இடபுறம் வைரவர் கோயிலும் காணப்படுன்கிறன. காடேரி மேடைக்கு தென்கிழக்கு மூலையில் தவநிலை கோபுரம் உயர்ந்து நிற்க அதே தவநிலை கோபுரத்துக்கு சற்று இடைவெளிவிட்டு வடக்கு பார்த்த வண்ணம் பிரதான ஆலயத்தின் வலது பக்கம் கமலக்கண்ணி கோயிலுக்கு அதனருகே கபடா வீடும், தீர்த்தக் கிணறும் கட்டப்பட்டிருக்கின்றன.

கோயிலின் இடது புறத்தில் பாரதபாடன மண்டபமும், பட்டாணி மேடையும் தெற்கு நோக்கிக் காணப்படுகின்றது. வெளிவீதியில் வீரபத்திரர் கோயிலின் பின்புறம் எழுந்தருளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர் கிழக்கு மேற்காக 18 அடி நீளமும் 3.5 அடி அகலமும் ஆழமும் உடைய தீக்குழி வெட்டப்பட்டிருக்கிறது. இலங்கையில் உள்ள கோயில்களில் வெட்டப்படும் தீக்குழிகளில் இது பெரியதாகும். ஒவ்வொரு வருடமும் தீக்குழி அம்மன் குழி என்றும் சுவாமிக்குழி என்றும் அரை அடி விலக்கி வெட்டப்படும். தீக்குளியினுள் தாதனின் யந்திரத்தகடுகள் அவனால் கொண்டு வந்து இடப்பட்ட குருசேத்திரமண் என்பன மனிதக் கண்களுக்குப் புலப்படாமல் சலஸ்தாபனம் அடைந்துள்ளன. வெளிவீதியில் கற்கடைகள், கிணறுகள், பூசாரியார் இல்லம் பஞ்சபாண்டவர் அன்னதான மண்டபம் என்பன கட்டப்பட்டுள்ளன. இங்கு ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்கள் படர்ந்து நிழல் பரப்பி காணப்படுகின்றன. ஆங்காங்கே நேர்த்திகடனுக்காக அளிக்கப்பட்ட தென்னை மரங்கள் நடப்பட்டுள்ளன. உள் வீதியைச் சுற்றி மதில் சுவர் உண்டு.

மேற்கு வாசலில் கோயில் பின்புறம் அலங்கார வளைவும் உண்டு. பிரதான வாசலின் வலது புறமும் பாண்டவர் கொலுவும் இடது புறமும் காளிக் கொலுவும் எதிர் எதிர் பார்த்தபடி நிற்பர். அர்த்த மண்டபத்தில் கொடித்தம்பம் கல்யாணக்கால் இடும் இடமும் உண்டு. கொடிக்கம்பத்தின் முன்னால் கல்யாணக்கால் வைப்பர். வனவாசத்தின்போது வாள்மாற்றும் இடத்தை வாள்மாற்றும் சந்தி என்பர். பிரதான வீதியை “T” வடிவிலான சந்தியில் இருந்து கிழக்கே 200 மீற்றர் தொலைவில் வீதி முடியும் இடத்தில் வடக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ள இரு பிள்ளையார் கோயிலுக்கு மத்தியில் அலங்கார வளைவு உள்ளது. இவ்விடத்தில் வாள் மாற்றும் சந்தி காணப்படுகின்றது. ஆலயச்சடங்குகளாக சுவாமி எழுந்தருளல், கல்யாணக்கால், வனவாசம், தவநிலை, அரவணைக் களப்பலி கொடுத்தல், அரவணைக் களப்பலியாக இடப்பின் துயிரினால் திரௌபதி ஒப்பாரி வைத்து அழுதல், தீப்பள்ளயம், நேர்த்திக்கடன், எட்டாம்சடங்கு போன்றனவாகும்.

புரட்டாதி மாதம் சுக்கிலபட்சத்து அமாவாசைத் திதியில் வரும் செவ்வாய்க்கிழமை திரௌபதை அம்மன் கோயிலில் வருடாந்த உற்சவத்திற்கு கொடி ஏற்றப்படும். ஒவ்வொரு குடியினரும் 18 நாட்களும் பிரித்து சடங்குகளை நடாத்துகின்றனர் இதன் படி 11 குடிகள் 4 சாகியங்களும் சடங்கினை செய்கின்றனர். அதற்கென முகாமைக்காரர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாலயத்தில் மிக முக்கியத்தவம் வாய்ந்த சடங்குகளாக வனவாசம், தவனிலை, தீப்பள்ளயம் என்பனவாகும். முழுக்க முழுக்க மகாபாரத நிகழ்வினை வெளிப்படுத்துவதாக உள்ளது. பள்ளயம் என்றால் பெருவேள்வி எனப் பொருள்படும். இத்திருவிழாவின் இறுதி நாளன்று திரௌபதை அம்மனுக்கு அளிக்கும் பெருந்தீ வேள்வியே தீப்பள்ளயம் என்ற இப்பெயர் வர காரணமாயிற்று.

இத் தீ வேள்வி முறையினால் இக்கோயிலின் கீர்த்தி பரவலாயிற்று. அதைவிட ஆதியில் இலங்கையில் திரௌபதை அம்மனுக்கென ஆலயம் முதன்முதலில் அமைந்தது பாண்டிருப்பிலேயே ஆகும். இதனை பட்டயங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். அதன் பின்னரே இலங்கையில் பல பாகங்களிலும் திரௌபதை அம்மனுக்கு ஆலயம் அமைத்தனர் என்று அறிய முடிகின்றது.