நிறுவனம்:அம்/ தென்பத்திரகாளி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தென்பத்திரகாளி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் நற்பிட்டிமுனை- சேனைக்குடியிருப்பு
முகவரி தென்பத்திரகாளி அம்மன் கோயில், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


தென்பத்திரகாளி அம்மன் கோயிலானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பில் அமைந்துள்ள வரலாற்றுக் காலத்துக் கோயில் ஆகும். மட்டக்களப்பின் தென்கோடியில் கல்முனைக்கு மேற்காக வாவியும் வயலும் ஒருங்கே தழுவிடும் சொறிக்கல்முனைக் கிராமம் இருக்கிறது. இப் பதியிலே ஆதிமாகாளியாக ஆட்சியும் மாட்சியும் கொண்டு அம்பாள் அருள் பாலித்துவந்தாள்.

சொறிக்கல்முனை ஆதிமாகாளி ஆலயம் எப்போது நிறுவப்பட்டது என்பது பற்றி சரியான ஆதாரக் குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆயினும் இவ்வாலயம் 16 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தியது என்பதை மற்றைய வரலாற்றுக் காரணிகளுடன் ஒப்பிட்டு ஊகிக்க முடியும். மன்னன் இராசசிங்கனின் மறைவிற்குப் பின்னர் மட்டக்களப்பின் மீது கண்டி இராச்சியத்தின் ஆளுகை சற்று நலிவுற்றே இருந்தது. பயிர் விளைச்சல் குன்றி பஞ்சமுண்டாயிற்று. இவ் வேளையில் ஒல்லாந்தர் தமது நாட்டிலிருந்து தானியங்களைத் தருவித்துக் கொடுத்துத் தாபரித்தனர்.

இவ்வாறாக ஏற்பட்ட இறுக்கம் கி. பி 1718 இல் மட்டக்களப்பில் ஒல்லாந்தர் ஆட்சியை நிலை கொள்ளச் செய்தது. 1728 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்புக்கான முதலியாக ஒல்லாந்து அரசு ‘பஸ்கோல்’ முதலி என்பவரை நியமித்தது. பஸ்கோல் முதலியின் இனவாதச் செயற்பாடுகளால் சொறிக்கல்முனை ஆதிமாகாளி ஆலயம் 1749 இல் உடைக்கப்பட்டு பல ஆண்டுகளாக மண்மூடிக் கிடந்தது.

இந்தியாவின் காஷ்மீரிலிருந்து குதிரைப்படைத் தளபதியான கேசாபூரி சுவாமிகள் எனப்படும் பால்குடிபாவா கதிர்காமத்தில் வந்து தங்கியிருந்தார்.அவ்வேளையில் முருகப் பெருமான் அவர் கனவில் தோன்றி ‘சொறிக் கல்முனையில் அழிவுற்றுக் கிடக்கும் மாகாளி அம்மன் ஆலயத்தை அவ்விடத்தில் இருந்து தென்கிழக்கு நோக்கிய திசையில் சனசந்தடி இல்லாத நீர் நிலையும் புதர்களும் விருட்சங்களும் சூழ்ந்த இடத்தில் கொண்டு அமர்த்துவாயாக’ என ஆணையிட்டார் என தொன்மக் கதைகள் கூறுகின்றன. முருக தரிசனம் பெற்ற பால்குடிபாவா ஐம்பொன்னாலான அடையலையும் முக்கோண வடிவிலான மாணிக்கக் கல்லையும் எடுத்துக் கொண்டு முருகப் பெருமான் அடையாளம் காட்டிய இடம் நோக்கி வந்தார். வயது முதிர்ந்த பாட்டி ஒருத்தி அடையாளமாயிருந்து காட்சி கொடுத்து மறைந்தருளினார் என்பவை இக்கோயில் பற்றிய ஐதீகக் கதைகளாக இன்றும் வழங்கப்படுகின்றன.

இவ்விடமே அம்பாளுக்குரிய இடம் என்பதை உணர்ந்த பால்குடிபாவா ஆலயப் பராமரிப்பாளரும் பூசகரும் வேண்டுமே என முருகப் பெருமானை மன்றாடினார். அவ்வேளையில் அங்கு தென்பட்ட இருவரை விசாரித்த போது இவர்கள் நற்பிட்டிமுனையிலுள்ள கந்தப்போடி நிலமையின் படகோட்டிகள் எனத் தெரியவந்தது. பால்குடிபாவா இப் படகோட்டிகளிடம் விடயத்தைக் கூற அவர்கள் கந்தப்போடி நிலமைக்குத் தெரிவித்தனர். கந்தப்போடி நிலமை பால்குடிபாவாவை அணுகி சிநேகம் கொண்டாடி அவருக்குக் கிடைத்த அற்புத அருளாட்சி பற்றியும், அம்மனின் ஆலயம் மறைந்து கிடந்தமை பற்றியும் பால்குடிபாவாவிடம் அறிந்து கொண்டார்.பால்குடிபாவா அம்மனின் ஆலயப் பணியை சிறப்புற நடாத்தும் பணியை கந்தப்போடி நிலமையிடம் ஒப்படைத்தார்.

அதன்பிறகு கந்தப்போடி நிலமை அக்கசாலைக் கணபதியை அழைத்து அம்பாளைப் பிரதிஷ்டை செய்வித்து பூசை செய்விக்க ஒழுங்குகள் செய்யப்பட்டன. முதலில் அம்பாள் வடக்கு வாசலில் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். அப்போது தாயாரின் உக்கிரம் தாங்க முடியவில்லை. இதனால் பூசகர் பூசை செய்ய முடியாது பின்வாங்கினார். பின்னர் கிழக்குப் பக்கமாக நிலைநிறுத்திப் பூசை செய்ய முயற்சிக்கப்பட்டது. அப்போது தாயாரின் அழகின் உக்கிரம் தாங்க முடியாதிருந்தது.

இறுதியில் அம்மனின் சிலை தென்திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது சாந்தமே உருவான வடிவத்தில் தாயார் காட்சி தந்தார். பொதுவாக அம்மன் வடபத்திரகாளியாக இருப்பதே உண்டு. வேறெங்குமில்லா வகையில் தென்பத்திரகாளியாக அம்பாள் காட்சிகொடுத்தருளுவது சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனைப்பதியிலே ஆகும். கதிர்காமக் கந்தன் கோயில் கொண்டிருக்கும் திசை நோக்கி அம்பாள் சாந்தரூபியாக அருளாட்சி செய்கிறாள். பால்குடிபாவா மீண்டும் நற்பிட்டிமுனைக்கு வந்து அம்பாளின் சந்நிதிக்குக் கும்பாபிஷேகம் செய்வித்ததாக வரலாறு கூறப்படுகிறது.