நிறுவனம்:அம்/ திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம்
பெயர் | திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | திருக்கோவில் |
முகவரி | திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம், அம்பாறை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
சிவபூமி என்றும் பூலோக சொர்க்கம் என்றும் போற்றப்படும் இந்து மகா சமுத்திரத்தில் முத்தெனத் திகழும் இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்குத் தென்கிழக்கு திசையில் அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகு திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தொன்மைமிகு நாகர்முனை கந்தபாணத்துறை ஆறுமுகன் ஆலயமே இன்றைய திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயமாகும். திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வரலாற்றுப் பாதையினை நோக்குகின்ற போது சூரனை சங்காரம் செய்து முருகனின் ஞானவேலில் இருந்து தோன்றிய மூன்று பொறிகளில் ஒன்று நாகர்முனையில் இயற்கை வனப்புமிகு தடாகத்தின் வெள்ளை நாவல் மரத்தில் தங்கியதாக திருக்கோவில் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.மு 1ம் நூற்றாண்டில் தமிழ் மன்னன் எல்லாளனே முதன் முதலாக கற்கோயிலாக கருவறை முதல் விமானம் வரை அமைத்து திருப்பணியை ஆரம்பித்தான் என்றும் சத்திரியர்கள் எனப்படும் ஜந்து பாண்டிய அரசர்களின் மானியம் பெற்று இது கட்டப்பட்டதுடன் இலங்கை தமிழ், சிங்கள மன்னர்களாலும் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் மட்டு மாநகரை ஆட்சி புரிந்த வாகூரன் என்னும் அரசனின் மகன் பிரசன்ன சித்து திருக்கோவில் முருகனின் திருப்பணிகளைச் செய்ததுடன் பின் கலிங்க நாட்டு இளவரசன் புவனேக கயவாகு என்பவன் மகப்பேறு வாய்க்க வில்லையென்றும் பிரசன்ன சித்துவுடன் நட்பு கொண்டு பிரசன்ன சித்துவின் வேண்டுகோளின்படி திருக்கோயிலின் திருப்பணிகள் செய்வதற்காக சோழ நாட்டில் இருந்து சோழ மன்னர்களின் உதவியுடன் தச்சர்கள் சிற்பிகள் மற்றும் கட்டிடப் பொருட்களுடன் திருக்கோவில் துறைமுகத்தை வந்தடைந்தனர்.
இதனையடுத்து அவர்களின் உதவியுடன் அழகிய தூபிகளுடன் கூடிய மாடங்கள் வீதிகள் அமைத்து சிறப்பான ஆகம முறையிலான மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா செய்து வைத்து ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பை பிரசன்ன சித்துவிடம் கயவாகு மன்னன் கையளித்ததாகவும் திருக்கோவில் முருகன் அருளால் மழைக்காலத்தில் அழகான ஆண் குழந்தை கிடைத்ததாகவும் அக்குழந்தைக்கு மேகவருணன்(மனுநேய கயவாகு) என பெயர் சூட்டி மகிழ்ந்தான் என தலவரலாறுகள் செப்புகின்றன. மட்டக்களப்புத் தேசத்தில் தோன்றிய பெருங் கற்கோயில்களில் திருக்கோவிலும் சிறப்பு பெறுவதுடன் கயவாகு மன்னனைத் தொடர்ந்து அவனது மகன் மேகவருணன் சிறப்பான ஆலய திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான்.
இவனது திருப்பணிக் காலத்திலேயே ஆலயத்திற்கு முறையான ஆலய பூஜைகளை முன்னெடுக்கும் நோக்குடன் நாற்பது சோழ குடிமக்களையும் பூஜை திரவியங்களையும் அனுப்பி வைத்தான் அவ்வாறு வந்தவர்களை வரவேற்று “தம்பட்டர்” எனும் பட்டம் சூட்டியதாக கூறப்படுகிறது. இங்கு ஆலய பூஜை செய்ய மல்லிகார்ச்சுனம் (ஸ்ரீசைலம்) என்னும் இடத்தில் இருந்து ஆதிசைவ மரபினரான வீரசங்கம குருமார்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் பூஜை செய்யும் பொறுப்புக்களை கையளித்து அவர்களுக்கென தம்பட்டை என்னும் பெயரில் கிராமம் ஒன்றினை உருவாக்கி அவர்களை நிலையாக இருத்தி ஆலயத்தின் பூஜை பணியை கொடுத்தான் இன்றும் தம்பட்டை கிராமம் அதன் பெயருடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கயவாகு மன்னனின் மகன் மேகவருணனைத் தொடர்ந்து ஆலயத் திருப்பணிகளை மகள் ஆடகசவுந்தரி ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின் தொடர்ந்து தந்தையின் பணியியை முன்னெடுத்த ஆடகசவுந்தரி திருப்பணிகளை மேற்கொண்டதுடன் ஆடி அமாவாசைத் திருவிழாவின் இறுதி நாளான தீர்த்த உற்சவத்தின் போது மாமங்கைத் தீர்த்தம் கொண்டு வந்து கடலில் விட்டு தீர்த்தமாடும் சம்பிரதாயத்தைக் கொண்டிருந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்த மாகன், குளக்கோட்டன் மற்றும் பாண்டியர்கள் பாலசிங்கன் என்ற அரசன் தனது மனைவி சீர்பாத தேவியுடன் வந்து தங்கி திருப்பணிகள் செய்யப் பெற்ற சிறப்பு மிக்க திருத்தலமாக திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் சிறப்பு பெறுகின்றது.
இவ் ஆலயத்தினை இலங்கை வேந்தன் இராவணன் வழிபட்டு வந்ததாகவும், இவனது இலங்காபுரி கோட்டை அழிந்த நிலையில் அதன் சின்னங்கள் திருக்கோவிலுக்கு கிழக்கே காணப்படுவதாகவும் வித்துவான் வி. சீ. கந்தையா கூறியுள்ளதாக தேரோடும் திருக்கோவில் எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பிலே பழமையும், பிரசித்தியும் உடைய முருகன் கோயில்களை திருப்படைக்கோயில்கள் என அழைப்பர். பண்டைய மன்னர்களின் செல்வாக்கும், மானியமும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்கள் என போற்றப்பட்டன.
இந்நிலையில் மட்டக்களப்பில் முதலாவது திருப்படைக்கோயில் என அழைக்கப்பட்டது திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயமாகும். திருக்கோவில் முருகன் ஆலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம், என்பனவற்றோடு விருட்சம் முறையாகக் கொண்டு விளங்குவதுடன் இவ்வாலயத்தில் தாய் தந்தையரின் பிதிர் கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ திருவிழா இவ்வாலயத்தின் சிறப்பு வாய்ந்ததொன்றாகும்.