நிறுவனம்:அம்/ காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் காரைதீவு
முகவரி காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயமானது கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்காகச் செல்லும் நெடுவீதியில் 27 ஆவது மைல் தொலைவில் அம்பாறைக்குச் செல்லும் வீதி பிரியும் சந்திக்கு அண்மையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மிகப் பழைய வரலாற்றைக் கொண்ட இவ்வாலயம் பற்றிக் கண்ணகி வழக்குரை, வசந்தன் கவித்திரட்டு போன்ற நூற்பாடல்களில் அறியலாம்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை அமைத்து சேரநாட்டு தலைநகரமாம் வஞ்சி மாநகரில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் பிரதிட்டை செய்து பெருவிழா எடுத்தான். கி.பி 12 ஆம் நூற்றாண்டில் கஜவாகு மன்னனின் அழைப்பின் பேரில் இவ் விழாவிற்கு சென்ற சேரன் செங்குட்டுவனின் வழிவந்த சேனாதிராஜனின் மகள் தேவந்தி அம்மையாரும் அவருடைய மகள் சின்னநாச்சியாரும் இலங்கை வரும் போது கண்ணகி அம்மனின் சிலையைக் கொண்டு வந்ததாகக் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. அம்மையாரின் பாதயாத்திரையின் வழியில் பழம்பெரும் கிராமமான காரைதீவு காணப்பட்டது.

இங்கு அம்மையார் வந்து தங்கியிருந்தார். பின்னர் கண்ணகி அம்மன் பேரருள் இக் கிராமத்தின் மீது பதிந்த காரணத்தினாலும் தேவந்தி அம்மையார் இங்கு வாழ்ந்த காராளர்களின் உபசரிப்பிலும், ஆதரவிலும் ஈர்க்கப்பட்டு நிரந்தரமாக தங்கி வேப்பமர நிழலில் தான் கொண்டுவந்த பத்தினி தெய்வத்தின் விக்கிரகத்தை சிறு ஆலயம் அமைத்து பிரதிஷ்டை செய்து பூசைகள் செய்து வழிபட்டார். இவ்வாறு கஐபாகு மன்னனால் வரவழைக்கப்பட்ட தேவந்தி அம்மையாரும் அவர் மகள் சின்னநாச்சியாராலும் காரைதீவில் கண்ணகி அம்மன் ஆலயம் அமைய அடித்தளம் இடப்பட்டது. பின்னர் சின்னநாச்சியாரின் மூன்று பெண்களாலும் அவர்கள் பெண் வழிச்சந்ததி யாராலும் இவ்வாலயக் கிரிகைகளும் விழாக்களும் நடாத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் சந்ததியை சேர்ந்த மூன்று கப்புமார்கள், மூன்று தருமகர்த்தாக்கள், மூன்று கணக்குப் பிள்ளைமாரோடு ஆறுபேர் அடங்கிய ஒரு குழுவும் உள்ளிட்ட பதினைந்து பேர் கொண்ட பரிபாலன சபையினரால் ஆலயம் பரிபாலிக்கப்படுகிறது.

அக்காலத்தில் தேசத்து வன்னிமையாக விளங்கிய கங்கன் தன் மனைவியுடன் கோயிற் பூசைக்கு சமூகமளித்த நேரத்தில் அவனது மனைவியின் கண்கள் இரண்டும் பார்வையிழந்து போயின. தன் மனைவியின் பரிதாப நிலை கண்டு மனம் வருந்தி கங்கன் கண்ணகித் தாயாரை வேண்டினான். கண்ணகி அருளால் வன்னிமையான கங்கனின் மனைவியின் பார்வை கிடைக்கப் பெற்றமையால் ஈற்றில் 101 ஏக்கர் காணியை ஆலயத்திற்கு மானியமாக உரிய நேர்த்திகளோடு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக வேப்பமரம் காணப்படுகிறது.

இங்கு ஆதியிலிருந்தே வருடத்திற்கொரு முறையே கோயிற் கதவு திறக்கப்பட்டு பத்து நாள் சடங்கும், குளிர்த்தியும் வைத்த பின்னர் கதவை பூட்டிவிடும் வழக்கமும் காணப்பட்டது. காலப்போக்கில் வெள்ளிக் கிழமைகளில் பொங்கல் செய்து வெளியில் வைத்து படையலிடும் வழக்கமும் காணப்பட்டது. காலப்போக்கில் வெள்ளிக் கிழமைகளில் பூசகர் வந்து ஆலயக்கதவினை திறந்து பூசை செய்யும் நடைமுறையும் உருவாகியது. இன்று ஆகமம் சாரா நெறிமுறைகளிலிருந்து ஆகமம் சார் நெறிமுறைகளை நோக்கி மாற்றமடைந்து வரும் வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு விமானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்பன அமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. புதிய மாற்றங்களுக்கும் அமைப்புகளுக்கும் ஆலயம் உட்பட்டிருந்தாலும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளே இன்றும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இன்றும் பூசைகள் மூன்று காலங்களிலும் அந்தணர்களால் நடாத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு மாத சங்கிராந்தி அபிஷேகங்களும் பூரணைத் தினங்களில் விஷேட அபிஷேகப் பூசையும் நடாத்தப்படுகிறது. பங்குனி உத்தரத்தன்று தீர்த்த உற்சவம் இடம்பெறத்தக்க வகையில் வருடாந்த மகோற்சவம் பத்து நாட்கள் நடாத்தப்படுகிறது.

இவ்வாலயத்தில் இடம்பெறும் உற்சவங்களுள் வைகாசி மாதத்தில் ஆற்றப்படும் வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி விழாவே சிறப்பானதாகும். அது நாட்டார் மரபில் அமைந்ததோடு அதனை கப்புகனார் தலைமைதாங்கி நடாத்துகிறார். திருக்குளிர்த்தி சடங்கு எட்டு நாட்கள் நடாத்தப்படும். முதலாவது நாளாகிய திங்கட்கிழமை மாலை காரைதீவு சமுத்திர தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுதலும் அதனைத் தொடர்ந்து கல்யாணக் காலுக்குரிய பூவரசமரம் வெட்டப்பட்டு கல்யாணக்கால் சுப வேளையில் நாட்டப்படுதலும் இடம்பெறும். அதன் பின்னர் கண்ணகி வழக்குரை, ஊர் சுற்று காவியம் என்பன படிக்கப்படும்.

ஐந்தாம் நாள் கோவலனுக்கும் கண்ணகிக்கும் கல்யாணச்சடங்கு இடம்பெறும். ஆறாவது நாள் கப்பற் சடங்கும், ஏழாவது நாள் பச்சைகட்டற் சடங்கும் இடம்பெறும். எட்டாம் நாள் அதிகாலை இடம்பெறும் குளிர்த்திச் சடங்கே இங்கு இடம்பெறும் இறுதிச் சடங்காகும். அதிகாலை நான்கு மணியளவில் திருக்குளிர்த்தி பாடப்படும். இங்கு வழங்கப்படும் திருக்குளிர்த்தித் தீர்த்தம் தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைக்கும் மகிமை வாய்ந்தது. அன்றைய தினம் அடியவர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுதல், பொங்கல் பொங்கி மடை பரவுதல் என்பன இடம்பெறும்.