நிறுவனம்:அம்/ கல்முனை ஶ்ரீ மாமாங்க வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கல்முனை ஶ்ரீ மாமாங்க வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் கல்முனை
முகவரி கல்முனை - 02, கல்முனை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


ஶ்ரீ மாமாங்க வித்தியாலயமானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ளது. கல்முனையில் கடலைச் சார்ந்து ஜீவனோபாயம் நடாத்தும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் 1960 ஆம் ஆண்டில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. திருமதி. பொன்னுத்தங்கம் தில்லையம்பலம் அவர்களின் நிதியுதவியுடன் அரச காணியில் ஓலைக் குடிசையில் ஐந்து மாணவர்களுடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

முன்னாள் கிராமசேவையாளர் முத்துலிங்கம், தொண்டர் சாமித்தம்பி ஆகியோருடன் ஊர்ப்பிரமுகர்கள் சிலரும் இதனை அமைப்பதற்கு உதவி செய்தனர். கல்முனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயருடன் இப்பாடசாலையை 1961.05.10 அன்று அரசாங்கம் பொறுப்பேற்றது. அவ்வேளையில் இப் பாடசாலையின் முதலாவது அதிபராக திருமதி அருளம்மா வில்லியம் பாடசாலை அதிபராக பொறுப்பேற்றார். 1964.06.19 அன்று வீசிய சூறாவளியினால் பாடசாலைக் கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. 1970.05.16 அன்று பாடசாலையின் பெயர் கல்முனை ஶ்ரீ மாமாங்க வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1974 ஆம் ஆண்டு இப்பாடசாலையின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தரம் 5 ஆண்டு புலமைப்பரீட்சையில் பல மாணவர்கள் சித்தியடைந்தனர். அதனைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு தரம் 5 வரை நடைபெற்ற வகுப்புகள் தரம் 9 வரை அதிகரிக்கப்பட்டு பாடசாலை Type II பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. பாடசாலைக் கீதம், பாடசாலை இலச்சினை என்பவையும் உருவாக்கப்பட்டன. அதன் பிறகான காலப்பகுதிகளில் விஞ்ஞான ஆய்வுகூடம், நூல் நிலையம் உட்பட பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டு தரம், பெளதீக வளத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டன. அத்தோடு 2000 ஆம் ஆண்டளவில் இல்ல விளையாட்டுப் போட்டி முதல் தடவையாக நடாத்தப்பட்டது.

2004.12.26 இல் ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தத்தினால் இப் பாடசாலை கட்டிடங்கள் அழிவுற்றன. அத்தோடு இப் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. லீலாவதி ரணதுங்கவும் 23 பாடசாலை மாணவர்களும் இச் சுனாமியால் உயிரிழந்தனர். இப் பாடசாலை முற்றாக அழிவுற்றமையால் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் மாலைநேர வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டன. இதன் பின்னர் அம்மன் கோவில் வீதியிலுள்ள திரு குமாரசிங்கம் அவர்களின் காணியில் கல்முனை W.D.C அமைப்பின் உதவியுடன் தகரக் கொட்டில்கள் அமைக்கப்பட்டு பாடசாலை காலை 8.00 – 2.00 மணி வரை நடைபெறத் தொடங்கியது.

அண்ணளவாக 5 வருடம் இப்பாடசாலை இவ்விடத்தில் நடைபெற்றது. மீண்டும் இப் பாடசாலை கொஸ்தப்பர் வீதியிலுள்ள திரு. சாள்ஸ் சில்வா அவர்களின் 113 பரப்பு காணியில் சில நல்ல உள்ளங்களின் உதவியால் இப்பாடசாலை மீளக் கட்டக்கூடியதாக இருந்தது. பாடசாலை சுற்றுமதில், வகுப்பறைக் கட்டிடங்கள் யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் மேலதிக வசதிகளுடன் எழுப்பப்பட்டது. Save The Children நிறுவனத்தின் நடவடிக்கையின் மூலம் பாடசாலை பிள்ளை நேயப் பாடசாலை திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டது. 2009.08.13 இல் புதிய பாடசாலை வளாகத்தை பொறுப்பேற்ற பாடசாலை நிர்வாகம் 2009.08.19 இல் பாடசாலையை வைபவ ரீதியாகத் தொடங்கியது.

அதன் பின்னர் தரம் 09 இருந்து தரம் 12,13 வகுப்புகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வி செயற்பாடுகளிலும் விளையாட்டு போட்டிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கப்பட்டது. 2018, 2019 ஆகிய இரு வருடங்களில் பாடசாலை நிர்வாகத்தை சிறப்பாக செய்த திருமதி. எஸ். ரவீந்திரகுமார் 2019 டிசம்பரில் ஓய்வு பெற்றதன் பின் நிரந்த அதிபராக திரு. கா. உதயகுமார் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் வருடந்தோறும் மழை வெள்ளத்தினால் பாடசாலைக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலைக் காணிக்கு மணல் போட்டு சீராக்கினார். அதன் பின் இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது திரு. எஸ். புவனேஸ்வரன் அவர்கள் அதிபராக கடமையாற்றுகின்றார். அத்தோடு 16 ஆசிரியர்களும் 82 மாணவர்களும் தற்போது உள்ளனர்.