நிறுவனம்:அம்/ கல்முனை மஹா விஷ்ணு ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கல்முனை மஹா விஷ்ணு ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் கல்முனை
முகவரி கல்முனை மஹா விஷ்ணு ஆலயம், கல்முனை, அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


கல்முனை மஹா விஷ்ணு ஆலயம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1970ம் ஆண்டு சில சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது விஷ்ணுவின் சிலையொன்றைக் கண்டெடுத்தனர். இதனை அவர்கள் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டுவர அனைவரும் ஒன்று சேர்ந்து அச்சிலையை கடற்கரையில் இருந்த ஒரு அரச மரத்தின் கீழ் வைத்து வழிபட்டனர். இச்செய்தி பிரதேசமெங்கும் பரவியதால் பொதுமக்கள் கூட்டமாக வருகைதந்து அதனை வழிபடத் தொடங்கினர்.

இதனால் கல்முனை முதலாம் குறிச்சியில் உள்ள இப்பிரதேசம் விஷ்ணுபுரம் என அழைக்கப்பட்டது. சில மாதங்களின் பின் குறிப்பிட்ட காணியின் சொந்தக்காரரான பிரபல வர்த்தகர் ஹென்றி வடிவேல் அவர்களின் அனுமதியுடன் மரத்தின் கீழ் கொட்டிலொன்று அமைத்து மக்கள் அதனுள் அச்சிலையை வைத்து வழிபட்டனர். விஷ்ணுவின் பெருமையறிந்து மக்கள் வெள்ளிக் கிழமைகளிலும் விஷேட தினங்களிலும் அதிக எண்ணிக்கையில் வந்து வழிபடத் தொடங்கினர்.

1978ம் ஆண்டு சூறாவளியினால் சிலை அமைந்திருந்த கொட்டில் பலத்த சேதத்திற்குள்ளாகியது. இதனால் சில மாதங்கள் விஷ்ணுபுர மக்களால் வழிபாடு செய்யமுடியாமல் இருந்தது. இந்நிலையில் காணி சொந்தகாரரின் கனவில் தோன்றிய அதிசய சிறுவனொருவன் தனக்கு இருப்பிடம் ஒன்றை அமைத்து குடியமர்த்துமாறு கேட்டுக்கொண்டான். மறுநாள் காலையில் கொட்டில் இருந்த அவரது காணியிலே நிரந்தரக் கட்டிடம் அமைத்து விஷ்ணுவின் சிலையைப் பிரதிஷ்டை செய்ய தீர்மனிக்கப்பட்டது.

அவ்வூர் மக்களும் இதற்கான திருப்பணி வேலைகளை தொடங்கினர். இவ்வேளையில் துப்பரவில் ஈடுபட்ட போது ஒரு அழகான சங்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இச்சங்கையும் மூலஸ்தானத்தில் வைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 1984ம் ஆண்டு அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த சிவஶ்ரீ லோகநாதக் குருக்கள் அவர்களால் கும்பாபிஷேகம் சிறப்பாக செய்து வைக்கப்பட்டது. ஆலயத்தின் காவல் தெய்வமாக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்கழி மாத வைகுந்த ஏகாதசியில் இடம்பெறும். ஆலயத்தின் தர்மகர்த்தாவிற்கு ஆலயத்தின் அமைப்புப் பற்றி குறைபாடுகள் தெரியத் தொடங்கின. எனவே அதனை மீண்டும் விதிமுறைப்படி அழகாக அமைக்க வேண்டுமென அவர் திட்டத்தை மேற்கொண்டு 1996ம் ஆண்டில் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து மூலமூர்த்தி ஶ்ரீ மகாவிஷ்ணுவின் விக்கிரகமும் பரிவாரக் கோயில்களுக்குரிய விக்கிரங்களும் கொண்டுவரப்பட்டன.

கும்பாபிஷேகத்திற்காக ஏற்பாடுகள் நடந்த வேளையில் 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் ஆலயம் முற்றாக சேதத்திற்குள்ளாகியது. அத்தோடு ஆலய தர்மகர்த்தாவான ஹென்றி வடிவேல் அவர்களும் இறைபதம் அடைந்தார். அதன் பின் சில இளைஞர்கள் அழிவுற்ற ஆலயத்துக்குச் சமீபமாகச் சென்று விக்கிரகங்களைத் தேடி எடுத்தனர். அவற்றை சிவாச்சாரியார்களின் அறிவுரைப்படி அபிஷேகம் செய்து கல்முனை ஶ்ரீ முருகன் ஆலயத்தில் ஒரு அறையினுள் வைத்து பூசைகள் செய்யத் தொடங்கினர். சில வருடங்களின் பின் ஆலயத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். குறிப்பிட்ட காணி ஹென்றி வடிவேல் அவர்களுடையது என்பதாலும் அவருடைய பெயரிலே இந்து கலாச்சார திணைக்களத்தில் ஆலயம் பதிவு செய்யப்பட்டிருந்ததாலும் பொதுமக்கள் அதனை மீளவும் அமைப்பதில் பல சட்டப்பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.

இக்காலப்பகுதியில் ஹென்றி வடிவேல் அவரின் இரண்டாவது மகள் தாமரைலோஜினி வீட்டைச் சுற்றி அடிக்கடி ஒரு பெரிய பாம்பு வந்து சுற்றத்தொடங்கியது. இதன் பின் தனது குடும்பத்தாருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2011ம் ஆண்டு ஆலய சூழலில் மக்களுடன் இணைந்து ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் உரையாற்றிய ஹென்றி வடிவேல் அவர்களின் புதல்வர் ஜதிராஜ் தனது தனது தந்தையின் விருப்புக்கு அமைவாகவும் மக்களின் கோரிக்கைக்காகவும் குறிப்பிட்ட காணியை மக்களுக்குரிய சொத்தாக அறிவித்தார். அவ்விடத்திலேயே திருப்பணி சபையும் தெரிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி ஆலயத்தை மீளவும் கட்டியெழுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெறத் தொடங்கின. 2024ம் ஆண்டு சிறப்பான முறையில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.