நிறுவனம்:அம்/ கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயம்
பெயர் | கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | கல்முனை |
முகவரி | கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயம், கல்முனை, அம்பாறை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயமானது அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் பிரதான வீதிக்கருகாமையில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கடந்த 80 வருடங்களுக்கு மேலாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தை புலவிப்பிள்ளையார் ஆலயம் என்றும் பெற்றோல் நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளதால் செற்றடிப்பிள்ளையார் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆனால் இது ஆரம்பத்தில் புரவிப்பிள்ளையார் ஆலயம் என்றே அழைக்கப்பட்டது. புரவி என்பது ஆற்று நீர் பாயும் இடம், வயனிலம், கொடை, அரசிறை, இறையியல் நிலம், ஆட்சியிடம், பாதுகாப்பு, செழுமை எனப் பல்வேறு பொருள் கொண்டது. புரவி எனும் சொல் நாளடைவில் பேச்சுவழக்கில் திரிபடைந்து புலவி என்றாகிவிட்டது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக உள்ள ஆலமரத்தின் கீழ் விநாயகப் பெருமான் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
1945ம் ஆண்டு காரைதீவில் இருந்து இவ்வழியாக கால்நடையாக செல்லும் சித்தானைக்குட்டி சாமியார் இவ்விடத்திற்கு வருகை தந்து ஆலமர நிழலில் தியானத்திலிருந்து விட்டு செல்வது வழக்கமாயிருந்தது. அவ்வேளையில் ஊர்மக்கள் ஆலமரத்தின் அடிப்பாக விழுதுகளுக்கிடையில் இருந்த சிறிய பிள்ளையார் விக்கிரகத்தை கண்டெடுத்து அதனை அவ்விடத்தில் வைத்து வழிபாடு செய்துள்ளனர். இதனை அவதானித்த பக்தர்கள் பெருங்கூட்டமாக இவ்விடத்திற்கு வந்து வழிபடத் தொடங்கினர்.
இதனால் நாளடைவில் மக்களிடையே ஆலயம் பிரசித்தி பெறத்தொடங்கியது. ஆலயத்திற்கு முன்புறமாக பிரதான வீதியில் சிங்கம்ஸ் ஸ்ரூடியோ அமைந்துள்ளது. நாளடைவில் அதிகரித்த எண்ணிக்கையினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தரத் தொடங்கியதால் இட நெருக்கடி ஏற்படத்தொடங்கியது. இதனால் ஆலயத்தை விஸ்தரிப்பதற்காக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சைவ அடியார் அமரர். வீரசிங்கம் என்பவர் தனது சொந்தக்காணியை நன்கொடையாக வழங்கினார்.
ஆலய உண்டியல், பக்தர்களின் தட்சணை மற்றும் நன்கொடைகளைக் கொண்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறுகிய காலத்திலேயே ஆலயக் கட்டிடங்கள் அழகுற விஸ்தரிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. தற்போது மூன்று வேளை பூசைகளும் ஒழுங்காக நடைபெறுகின்றன. ஆடி அமாவாசைக்கு முன்வரும் 9 நாட்களும் திருவிழாக்கள் நடைபெற்று ஆடி அமாவாசையில் தீர்த்தோற்சவம் இடம்பெறும். ஐப்பசி மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சங்காபிஷேகமும் நடைபெறுகின்றது.