நிறுவனம்:அம்/ கல்முனை சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம்
பெயர் | கல்முனை சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | கல்முனை |
முகவரி | கல்முனை, அம்பாறை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயமானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் அமைந்துள்ளது. இது கல்முனை பிரதான வீதியில் இருந்து கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் நாற்சந்தியில் அமைந்துள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ஆலமரமும் வம்மி மரமும் ஓங்கி வளர்ந்திருந்தன. இம்மரங்களின் நிழலில் ஒரு கல்லை வைத்து அதனைப் பிள்ளையாராக உருவகித்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர்.
இக் காலப்பகுதியில் கல்முனை பெரியபிள்ளைப் போடி என்பவர் தீர்க்க முடியாத நோயினால் துன்பப்பட்டார். நோயினால் வருந்திய இவரது கனவில் ஒரு நாள் பிள்ளையார் தோன்றி மேற்குறிப்பிட்ட மரங்கள் இருக்குமிடத்தில் ஆலயம் அமைத்து வழிபட்டால் நோய்கள் தீருமென திருவாய் மலர்ந்தருளினார். இதன்படி பெரியபிள்ளைப்போடியார் மனைவியின் உதவியுடன் இவ்விடத்தில் புற்று மண்ணைக் கொண்டு ஆலயம் அமைத்து வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். இதன் பின்னர் இவ்வாலயத்தின் திருப்பணிகளுக்கு கல்முனையை சேர்ந்த அம்பலவாணப் போடியார், ஆறுமுகம் வட்ட விதானையார், கதிரவேற்பிள்ளை போன்றோர் பெரும் உதவிகளைப் புரிந்துள்ளனர்.
ஆலயத்தின் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்று அழகுற அமைக்கப்பட்ட அதன் கும்பாபிஷேக நிகழ்வு 1927 ஆம் ஆண்டு நடைபெற்றது. சர்வ வல்லமையுடன் சகலருக்கும் சித்திகளை அளிப்பதால் சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயம் என அழைக்கப்பட்டது. பிரதான வாசலின் முகப்பில் கருங்கல்லினாலான இரு யானைகள் இருப்பத்தினால் கிராம மக்கள் சிலர் இதனை யானைப் பிள்ளையார் கோயில் எனவும் அழைப்பர். சித்தி விநாயகரின் புகழ் நாளடைவில் இப் பிரதேசமெங்கும் பரவத் தொடங்கியது. அதனால் தமது வேண்டுதல்களுக்காக அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதரத் தொடங்கினர்.
வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் மட்டுமன்றி அனைத்து முக்கிய பூசைகளும் இங்கு நடைபெறத் தொடங்கின. இவ்வாறு பலவாறும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தை 1946 ஆம் ஆண்டில் திருடர்கள் சிலர் உடைத்து பெறுமதி மிக்க பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இச்செயலால் சில பின்னடைவுகள் ஏற்பட்ட போதும் சில மாதங்களில் அவை சீர் செய்யப்பட்டு மீண்டும் பூசைகள் வழமைக்குத் திரும்பின. சில வருடங்களின் பின்னர் நிருவாகத்தினால் பூசைகள் ஒழுங்கமைக்கப்பட்டு பெயர்கள் குறிக்கப்பட்டன.
25 வருடங்களுக்கு மேல் எதுவித இடையூறுகளும் இன்றி சித்தி விநாயகர் கோயில் இருந்த வேளையில் 1972 ஆம் ஆண்டில் ஆலயத்தின் மூலஸ்தானம் உடைக்கப்பட்டு சில பொருட்கள் திருடர்களினால் களவாடப்பட்டன. மனமுடைந்த ஊர் மக்கள் சில மாதங்களில் மீண்டும் மூலமூர்த்தியைப் பாலஸ்தாபனம் செய்துவிட்டு பூசைகளை ஆரம்பித்தனர். பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்த போதும் மூலமூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. கும்பாபிஷேகம் செய்வதற்கு பெருமளவு நிதி தேவையாக இருந்தது. இவ்வேளையிலே 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியால் ஆலய மண்டபங்களின் கூரைகளும் சில கட்டிடங்களும் சிறிய அளவில் சேதத்திற்குள்ளாகியது. பக்தர்களின் நன்கொடையினால் மீண்டும் ஆலயம் சிறப்புற அமைக்கப்பட்டு 1990 இல் மஹா கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகமும் நடைபெற்றது. தற்போது ஆண்டு தோறும் வருடாந்த உற்சவமும், சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.