நிறுவனம்:அம்/ கல்முனை ஐயனார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்/ கல்முனை ஐயனார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் கல்முனை
முகவரி கல்முனை, அம்பாறை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


ஶ்ரீ ஐயனார் தேவஸ்தானமானது கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை 01 இல் அமைந்துள்ளது. இது 1787 ஆம் ஆண்டு கண்டி இராச்சிய மன்னர் ஶ்ரீ விக்ரமராஜசிங்கன் என்றழைக்கப்படும் திரு. கண்ணுசாமி மன்னர் அவர்கள் வழங்கிய நெற்பயிர் காணிகளில் திரு. சங்கரவடிவேலருடைய தந்தையான கந்தன் பரிகாரி அவர்களின் சொந்த நிலத்தில் ஒரு பகுதியை ஶ்ரீ ஐயனார் தேவஸ்தானம் அமைப்பதற்கு ஒதுக்கி கிராம மக்களுக்கு வழங்கினார்.

பின் கிராம மக்களும் கந்தன் பரிகாரியார் அவர்களும் இணைந்து ஶ்ரீ ஐயனார் தேவஸ்தானத்தை ஒரு அரசமரம் நிற்கும் இடத்தில் அமைத்தனர். கந்தன் பரிகாரியார் அவர்களே பிரதான பூசகராக நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டு ஶ்ரீ ஐயனார் தேவஸ்தான மூலமூர்த்தி பூஜையையும், மாரியம்மன் சக்தி வழிபாட்டு பூஜை ஆராதனைகளையும் செவ்வனே செய்து வந்தார். அவருடைய காலத்திற்கு பின் அவருடைய மகன் கந்தன் சங்கரவடிவேல் அவர்கள் தேவஸ்தானத்தின் பூசகராக பொறுப்புகளை மேற்கொண்டார்.

இவருடைய காலத்தில் இலை, குளை, கிடுகு, வைக்கோல், இலுக்கு போன்றவைகளினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் புனரமைக்கப்பட்டு களிமண், தகடு, கல், பீடம், விக்கிரகம் ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் என்பன செய்யப்பட்டு வழிபாட்டு முறைகளும் சமயவிதிப்படி மேற்கொள்ளப்பட்டன. இக்காலத்திலேயே ஶ்ரீ ஐயனார் கோயிலுக்கு சுவாமி சித்தானைக்குட்டி அவர்கள் அடிக்கடி விஜயம் செய்வார். சிவசுவாமி சித்தானைக்குட்டி அவர்கள் ஶ்ரீ ஐயனார் கோயிலுக்கு சமய ஆராதனை, ஆலோசனை, ஆசிர்வாதம், பிரார்த்தனைகளை அதிக நேரம் பயன்படுத்தி சேவை புரிந்து வருவார்.

அத்தோடு இக் கோயிலில் வைத்து சுவாமி சித்தானைக்குட்டி அவர்கள் பல சித்துவிளையாட்டுகளை செய்துள்ளார். ஶ்ரீ ஐயனார் கோயிலுக்கு பக்தியின் நிமித்தம் காரணமாக கல்முனை, காரைதீவு, பாண்டிருப்பு, மூதூர், அக்கரைப்பற்று, யாழ்நகர், சம்மாந்துறை, மல்வத்தை, வீரமுனை, திருக்கோவில், கதிர்காமம், களுதாவளை போன்ற இடங்களில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.

கந்தன் சங்கரவடிவேல் பரிகாரியார் மறைவிற்கு பின் கந்தன் சின்னான் பரிகாரியார் பூசகரானார். இவர் தனது சொந்த நிலத்தில் ஒரு பகுதியை ஶ்ரீ ஐயனார் தேவஸ்தானத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். இவருடைய மறைவிற்கு பின் வைத்தியர் கந்தப்பர் பொன்னம்பலம் பூசகரானார். 1926 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற இவர் 1967 ஆம் ஆண்டு வரை பூசகராகத் தொண்டு செய்தார். இவருடைய காலத்திலேயே ஶ்ரீ ஐயனார் தேவஸ்தானம் செங்கல், சிமெந்து, ஓடு, கொங்கிறீட் கொண்டு ஒரு பூரணமான ஆலயக் கட்டடம் அமையப்பெற்றது. அத்தோடு பலிபீடம், மூலவிக்கிரக பீடம், வைரவர் கோயில் என புது கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1950 ஆம் ஆண்டு மூலமூர்த்திகள் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் சங்காபிஷேகமும் செய்யப்பட்டது.

அக்காலத்தில் வாழ்ந்த கந்தப்பர் பத்தக்குட்டி என்பவர் ஒரு குதிரை வாகனத்தை அன்பளிப்பு செய்தார். 1957 ஆம் ஆண்டு ஶ்ரீ ஐயனார் தேவஸ்தானத்தில் ஒரு ஶ்ரீ ஆதிவைரவர் ஆலயம் உருவாக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு நடந்த பிரச்சினை காரணமாக கரவாகு என அழைக்கப்பட்ட சாய்ந்தமருது தமிழ்குறிச்சி கிராமம் முற்றாக அழிக்கப்பட்டு மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள். பின் 1970 ஆம் ஆண்டு கல்முனை யாட் வீதியில் ஒரு இடத்தில் மீண்டும் புதிதாக ஒரு தேவஸ்தானத்தை கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு வருடா வருடம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. அதில் உத்தர தீர்த்தோற்சவம், வசந்தன் கோலாட்டம் என்பனவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாரியம்மன் குளிர்த்தி நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.