நிறுவனம்:அம்/ கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் கல்முனை
முகவரி உடையார் வீதி, கல்முனை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயமானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் இப்பாடசாலை அமைந்துள்ளது. இது கல்முனை பிரதேசத்தில் உடையார் வீதி முச்சந்தியில் அமைந்துள்ளது. ஆரம்பகாலத்தில் இப் பாடசாலையானது சுவாமி விபுலானந்தரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக 1934 ஆம் ஆண்டில் ஐம்பதுக்குட்பட்ட குழந்தைகளுடனும், ஒரு ஆசிரியருடனும் கல்முனை இந்து வாலிபர் சங்கத்தால் இது ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக 31.01.1936 அன்று அப்போது அரசாங்கத் தலைவராக இருந்த சேர். வைத்தியலிங்கம் துரைசாமி அவர்களின் பங்குபற்றுதலுடன் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

ஆரம்பகால ஆசிரியர்களாக சந்தனப்பிள்ளை, குமாரசாமி, குஞ்சித்தம்பி பூபதி, கனகசுந்தரி, செல்லம்மா, தங்கராசா போன்றோர் கடமைபுரிந்துள்ளனர். 1936 அக்டோபர் மாதத்தில் மூன்று ஆசிரியர்களுடனும் 46 மாணவர்களுடனும் கல்முனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம் என்ற பெயருடன் இராமகிருஷ்ண மிஷன் இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றது. இதன் பின்னர் படிப்படியாக இப்பாடசாலை வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்தது. மாணவர்களின் அதிகரிப்பிற்கேற்ப 1941 இல் ஐந்து ஆசிரியர்களும் 1945 இல் பன்னிரெண்டு ஆசிரியர்களும் கடமை புரிந்தனர்.

பாடசாலையில் அமைந்துள்ள முக்கியமான மண்டபமாக விபுலானந்தா மணி மண்டபம் 1947 இலும் பாரதி மண்டபம் 1956 இலும் கட்டப்பட்டன. பாடசாலை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும் வரை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனரியினரால் பராமரிக்கப்படு வந்தது. 1941 இல் ஆரம்பப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1945 இல் முதுநிலை விடுகை வகுப்பு வரை உயர்ந்து பன்னிரண்டு ஆசிரியர்களுடனும் 375 மாணவர்களுடனும் காணப்பட்டது. 1991 இல் க.பொ. த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பாடசாலை வரலாற்றில் முதலாவது அதிபரான வேலுப்பிள்ளை உடையார் மயில்வாகனம் அவர்களே மிக நீண்டகாலம் அதிபராக இப்பாடசாலையில் கடைமையாற்றியுள்ளார்கள்.

குறிப்பாக 1936 இல் இருந்து 1984 வரையான காலப்பகுதிகளில் நிறைய அதிபர்கள் குறுகிய காலத்திற்குள் பணியாற்றியுள்ளனர். இவர்களது காலப்பகுதியில் குருபூசை தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டதுடன் சரஸ்வதிப் பூசை நிகழ்வுகளும், கற்பித்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 1984 இல் பாடசாலை வளர்ச்சி பாரியதாக இருந்தது. உயர்தர வகுப்புக்கள், தரம் 5 புலமைப்பரீட்சை விசேட வகுப்புகள் போன்றன ஆரம்பித்ததால் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 1993 இல் இப் பாடசாலை மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. இதன் பின்னர் ஆசிரியர்களினதும் மீண்டும் மாணவர்களினதும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றம் உண்டானது.

கல்விச் செயற்பாடுகள் மட்டுமன்றி இணைப் பாடவிதான செயற்பாடுகள், விளையாட்டு, ஆன்மீகம் போன்ற செயல்களிலும் மாணவர்களின் பங்களிப்புகள் அதிகமாக இருந்தது. 2006 இல் திருமதி. அ. பேரின்பராஜா அதிபராக நியமனம் பெற்றார். இவருடைய காலப்பகுதியில் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் அதிகமாக இடம்பெற்றது. பாடசாலையின் நிருவாகக் கட்டிடத்தின் மாடி நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டதுடன் பாடசாலை நூலகம் சீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது. மற்றும் மனையியல் கூடமும் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டது.

இவற்றுடன் அதிபர் திருமதி. அ. பேரின்பராஜா அவர்களின் சொந்தச் செலவில் பாடசாலை முன்புற வீதியோரமாக பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்விலே அப்போதைய கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களை அழைத்து பரிசளிப்பு வைபவமும் நடாத்தப்பட்டது. இதனையடுத்து 2015 இல் புதிதாக அமைக்கப்பட்ட மாடிக்கட்டிடத்திற்கு அன்னை சாரதாதேவியின் பெயர் சூட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. 2019 இல் ஆரம்பக் கற்றல் வளநிலையமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது அதிபராக திருமதி. சா. நந்தகுமார் அவர்கள் கடமையாற்றுகிறார். தற்போது கல்விச் செயற்பாட்டில் பாடசாலை பல முன்னேற்றங்களை கண்டு வருகின்றது.