நிறுவனம்:அம்/ கல்முனை ஆதார வைத்தியசாலை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கல்முனை ஆதார வைத்தியசாலை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் கல்முனை
முகவரி பிரதான வீதி கல்முனை ஆதார வைத்தியசாலை, அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


கிழக்கிலங்கையில் நீர்வளம், நிலவளம் நிறைந்த மட்டு மாநகரின் தென்பால் அம்பாறை மாவட்டத்திலே கல்முனை எனும் நகரின் வடக்கேயுள்ள ஆதார வைத்தியசாலை அமைந்துள்ள புண்ணிய பூமியிலே கோயில் கொண்டு ஶ்ரீ சித்தி விநாயகர் எனும் நாமத்தோடு இவ் ஆலயத்தில் வீற்றிருந்து அடியார்களுக்கெல்லாம் அவர்கள் உய்யும் வண்ணம் அருள் பாலித்து விக்கினங்கள் தீர்க்கும் பிள்ளையாராக இந்த வைத்தியசாலை ஶ்ரீ சித்தி விநாயகர் இருந்து வருகின்றார்.

இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் இந்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலிருந்தே இப்பிள்ளையார் வழிபாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார வைத்தியசாலையின் முன்பகுதியில் முதிரைமரமும் ஆலமரமும் அருகருகே சூழ்ந்த மரச்சூழலில் முதிரை மரத்தடியில் ஆலமரநிழலின் கீழ் பிள்ளையார் வடிவம் அமைந்த கல்லை முதன்முதல் வைத்தியசாலையில் கடமை புரிந்த சமையல் ஊழியர் ஒருவரினால் வைத்து பூஜித்து வழிபடப்பட்டது. பின்னர் நோயாளிகளாலும் வைத்தியசாலையில் கடமைபுரியும் ஊழியர்களாலும் நித்திய பூசைகள் செய்தும் பராமரித்தும் வழிபட்டும் வந்துள்ளனர்.

அதன் பின்பு சிறுக்கொட்டில் ஆலயமாக அப்போது இருந்து வந்த கடமை ஊழியர்களால் அமைக்கப்பட்டு வைத்தியசாலை காவலாளி ஒருவரினால் பராமரிக்கப்பட்டு நித்திய பூசைகள் சிவஶ்ரீ கணபதி ஐயரால் செய்யப்பட்டும் வந்துள்ளன. அதன் பின்பு 1970ம் ஆண்டளவில் இச்சிறு கொட்டில் ஆலயத்தை ஓரளவு புனரமைத்து சிறிய ஆலயமாக அமைத்து அதனுள் பிள்ளையார் வடிவமாக கருங்கல்லில் பொழிந்து எடுக்கப்பட்ட பிள்ளையாரை வைத்து அப்போதைய நிர்வாகிகளால் 1வது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பின்பு 1979ம் ஆண்டு நிகழ்ந்த கொடூர சூறாவளியினால் ஆலமரம் சரிந்து வீழ்ந்ததனால் சிறிய பிள்ளையார் ஆலயம் உடைந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் இவ் ஆலயத்தைப் பராமரித்து வந்த பக்தர்கள் ஊழியர்களுக்கு ஒரு நிரந்தர கட்டிடம் அமைத்து பிள்ளையாரை வைத்து வழிபட வேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டிட நிர்மாண அபிவிருத்தியின் பயனாக தற்பொழுது காணப்படும் நிரந்தரமான இடத்தில் வெளிச்சுவர் மதில்களால் எல்லை அமைத்து கல்லினால் கட்டப்பட்ட ஒரு ஆலயமாக அப்போது கடமையிலிருந்த வைத்தியசாலை பொறுப்பதிகாரியான வைத்தியரும் இன்னும் சில உத்தியோகஸ்தர்களும் பல தொண்டர்களும் இணைந்து அனுபவம் வாய்ந்த சிற்பாசாரி கிருஷ்ணபிள்ளை அவர்களின் கைவண்ணத்தில் அழகிய சிற்பங்கள் அடங்கிய ஏகதள தூபியுடன் கூடிய ஆகமக் கோவிலாகக் கட்டப்பட்டு அதில் முழு அம்சங்களும் அமையப் பெற்ற விநாயகர் சிலையை வைத்து ஆலய விதிமுறைகளுக்கு அமைவாக மணிக்கோபுரம் அமைத்து 17.05.1981 ஆண்டு சிவஶ்ரீ பூரண தியாகராஜா குருக்கள் அவர்களால் 2வது கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு கா.கூ. சிவசுப்பிரமணியம் குருக்களால் 3வது கும்பாபிஷேகம் 1992ம் ஆண்டளவில் நடைபெற்றுள்ளது. பின்னர் தொடர்ந்து வருடாந்த திருவிழாக்கள் நடைபெற்று ஆவணி சதுர்த்தசியில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது. மேலும் இவ் ஆலயம் அம்பாறை மாவட்டத்திலே 1வது ஆலயமாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் ஶ்ரீ சித்தி விநாயகர் கோவில் கல்முனை என பதிவு இல. HA/5/AM/1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ் ஆலயத்தின் சிறப்பையும் வழிபாடுகளையும் பற்றி பண்டிதர் வி. சி. கந்தையா அவர்கள் “கிழக்கிலங்கையில் சைவக்கோயில்கள்” எனும் நூலில் எழுதியுள்ளார். மேலும் இவ் ஆலயம் புனருத்தாபன அபிவிருத்தி நோக்கில் 11.11.2013 இல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு இவ் ஆலயத்தின் 4வது மகாகும்பாபிஷேகம் 06.04.2015ந் திகதி திங்கட்கிழமை சுவாதி நட்சத்திரமும் கூடிய சுப முகூர்த்த நேரத்தில் பிரதிஷ்டா கும்பாபிஷேக பிரதமகுரு சிவாகம வித்யாபூஷணம், விபுலமணி சிவஶ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் அவர்கள் பிரதம குருவாக இருத்து செய்து வைக்கப்பட்டது.