நிறுவனம்:அம்/ கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை
பெயர் | கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | கல்முனை |
முகவரி | மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி, அம்பாறை |
தொலைபேசி | +94 672 229 421 |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | www.carmelfatimacollege.org |
கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் அமைந்துள்ளது. இதன் பெண்கள் பிரிவு பிரதான வீதியில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எதிரே அமைந்துள்ளது. ஆண்கள் பிரிவானது கல்முனை நீதிமன்ற வளாக வீதியில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு எதிரே அமைந்துள்ளது. தற்போது இங்கு ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை கற்பித்தல் நடைபெறுகிறது. இங்கு பெரும்பாலும் 400 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் 3000 இற்கு மேற்பட்ட மாணவர்களும் காணப்படுகின்றனர்.
பிரதான வாயிலை அடுத்து இடது பக்கம் தரம் 5 வகுப்புக்கான கட்டிடமும் அருகே பாடசாலை அதிபர் கட்டிடமும், அடுத்து நூலகம், உணவகமும் மற்றும் தெற்கு பக்கமாக தரம் 9,10,11 இற்கான கட்டிடமும், மேற்கு பக்கமாக உயர்தர வகுப்புகளுக்கான கட்டிடமும் வடக்கே பாடசாலையின் கலாச்சார பிரதான மண்டபமும் காணப்படுகின்றது. இது அனைத்தையும் சூழ்ந்து நடுவே பிரதான விழாக்கள் நடைபெறும் திறந்த மேடை காணப்படுகின்றது.
கல்முனையில் பெண்களின் தமிழ்மொழிக் கல்விக்கென புனித இருதயநாதர் ஆலய முன்றலில் கத்தோலிக்க மிஷனரிமாரினால் புனித மரியாள் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்களின் ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு இன்னுமொரு பாடசாலையும் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1938 இல் இப்பாடசாலையைப் பொறுப்பெடுத்து நடாத்தி வந்த புனித வளனார் துறவிகள் 1950 ஆம் ஆண்டுகளில் இதற்கு பாற்றிமாக் கல்லூரி எனப் பெயர் சூட்டினர். 1958 இல் புனித மரியாள் பாடசாலைக்கு கார்மேல் கன்னியாஸ்திரிகள் கார்மேல் மகா வித்தியாலயம் எனப் பெயரிட்டனர்.
பற்றிமா கல்லூரியும், கார்மேல் மகா வித்தியாலயமும் தனித்தனியாக இயங்கி வந்த வேளையில் 1960 களில் தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கத் திட்டமிட்டது. ஆனாலும் போதுமான மாணவர்கள் இன்மையால் இவ்விரு பாடசாலைகளும் அரச உதவிகளை பெறுவதில் பல இடர்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இதனால் அப்போதிருந்த இரு கல்லூரிகளின் முதல்வர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களும், நலன்விரும்பிகளும் இவ்விரு பாடசாலைகளையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
1976 இல் ஒன்றிணைக்கப்பட்ட இப்பாடசாலைக்கு மாண்புமிகு ஆயர் எல். ஆர். அன்ரனி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கார்மேல் பற்றிமாக் கல்லூரி எனப் பெயர் சூட்டப்பட்டது. இதன் முதல்வராக அருட்செல்வர் எஸ். எ. பிரான்சீஸ் அவர்கள் நியமனம் பெற்றார். 1978 இல் இப் பாடசாலையின் அதிபர் பொறுப்பை அருட் சகோதரர் எஸ். எ. ஐ. மத்தியூ அவர்கள் பொறுப்பேற்றார். அவர் 21 வருடங்கள் சேவையாற்றினார். 1978 இல் அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாச அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் எ. ஆர். எம். மன்சூர் அவர்களும் பாடசாலைக்கு வருகை தந்து விஞ்ஞான ஆய்வுகூடத்தை திறந்து வைத்தனர். 1981 இல் மீள் புதுப்பிக்கப்பட்ட கிளனி மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
1978 இல் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்ட பின் மாணவர்களின் தொகையில் அதிகரிப்புக் காணப்பட்டது. அவ்வேளையில் உயர்தர விஞ்ஞான வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. எஸ். எ. ஐ. மத்தியூ அவர்களின் பெருமுயற்சியினால் 1993 இல் இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் பெளதிக வளங்களும் ஆசிரியர்களும் அதிகரிக்கப்பட்டு மாணவர்களின் கல்வித் தரங்களும் அடைவுமட்டங்களும் அதிகரித்ததோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
1999 இல் அருட்சகோதரர் ஸ்டீபன் மத்தீயு அவர்கள் பாடசாலையைப் பொறுப்பெற்றார். இவருடைய காலத்தில் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் மாணவர்களின் தொகையில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. வைத்திய பீடத்திற்கும், பொறியியல் பீடத்திற்கும் கூடுதலான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களின் இடைத்தங்கல் முகாமாக இப்பாடசாலையும் பயன்படுத்தப்பட்டது.
2014 இல் அருட்சகோதரர் பிரெய்னர் செலர் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். இவர் குறுகிய காலம் மட்டுமே இப் பதவியில் இருந்தார். 2017 இல் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு அவர்கள் பாடசாலை நிர்வாகத்தை பொறுப்பெற்றார். அதன் பின்னர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன புனரமைக்கப்பட்டன. நீண்ட வரலாற்றைக் கொண்ட இப் பாடசாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அ. பத்மநாதன், வில்லியம் தோமஸ், எச். எம். எம். ஹரிஸ், க. கோடீஸ்வரன் போன்ற முக்கியமானவர்கள் கல்வி கற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.