நிறுவனம்:அம்/ அமீர் அலி பொது நூலகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீர் அலி பொது நூலகம்
வகை நூலகம்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் சம்மாந்துறை
முகவரி அமீர் அலி பொது நூலகம், அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


அமீர் அலி நூலகம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நகரில் அமைந்துள்ளது. இது 40 வருடங்கள் பழமை வாய்ந்த நூலகமாகும். இது 1983.10.09 அன்று திறந்து வைக்கப்பட்டதாகும். ஆரம்ப காலப்பகுதியில் 1952ஆம் ஆண்டு ஒரு வாசிகசாலையின் தேவையை உணர்ந்த சம்மாந்துறை பிரதேச மக்களும் அப்போதைய பட்டின சபையினரும் 1952.02.08 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் வாடகைக்கட்டடத்தில் ஓர் இலவச வாசிகசாலையை திறப்பதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

பட்டின சபையின் நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆறு மாதத்திற்கு பின்பு சம்மாந்துறை கடைத்தெருவில் உள்ள ஒரு சிறிய அறையில் ‘சம்மாந்துறை வாசிப்பு அறை’ எனும் ஆரம்ப நூல் நிலையம் காலம் சென்ற பட்டினசபைத் தலைவர் ஜனாப். எம். யூ. உதுமா லெவ்வை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு பொறுப்பாக காலம் சென்ற சாகுல் அமீத் அவர்கள் செயற்பட்டார்.

இவ்வாசிகசாலையின் ஆரம்ப காலத்தில் தினகரன், வீரகேசரி, டெய்லி நியூஸ் போன்ற நாளாந்த பத்திரிகைகளும் கல்கி, ஆனந்த விகடன் போன்ற இந்திய பத்திரிகைகளும் வாசகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. காலஞ் செல்ல செல்ல வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய காரணத்தினால் வாசிகசாலையை பெரிதாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 1953ம் ஆண்டு பக்கத்தில் உள்ள அறையும் சேர்க்கப்பட்டு ஜனாப். ஐ. அஹமது, திரு. எம். கந்தையா இவர்கள் புதிய அங்கத்தவர்களாக சேர்த்து கொள்ளப்பட்டனர்.

உள்ளூராட்சி சேவையினருக்கு வழங்கப்படும் நன்கொடையின் சமமான தொகையை பட்டினசபையும் இந்நூலகத்திற்கு வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு முதலாவது நன்கொடையாக 500 ரூபாய் பெறப்பட்டு அதில் 160 புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. இதே வருடத்தில் ஏசியா பவுன்டேசனும் 88 ஆங்கில புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்கள். 1955ஆம் ஆண்டு நூலகத்திற்கு சொந்தமான காரியாலய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

சம்மாந்துறைகு ஒரு தரமான நூலகம் வேண்டும் என ஆலோசனையை தூண்டி விட்டவர் மர்ஹூம். ஜனாப். முகம்மட் அமீர் அலியையே சாரும். 1962 தொடக்கம் 1977 வரை சம்மாந்துறை பட்டினசபை தலைவராக பணியாற்றினார். இப்போதுள்ள புதிய கட்டிடம் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள அழகிய இடத்தில் 2 ஏக்கர்காணியை பெற்று அமைய வழி வகுத்தவரும் இவரே ஆவார்.

இவ்வாறு புதிய நூலகத்திற்காக அளப்பெரிய பல சேவையை ஆற்றியதனால் இந்நூலகத்திற்கு அமீர் அலி நூலகம் என பெயர் வைக்கப்பட்டது. இப் புதிய நூலகத்தை கட்டுவதற்கு சம்மாந்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜனாப். எம். ஏ. அப்துல் மஜீட் அவர்கள் மாவட்ட வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கி உதவியுள்ளார். 1969ஆம் ஆண்டில் 6 இலட்சம் பணம் ஒதுக்கப்பட்டு சம்மாந்துறை பொறியியலாளர் ஜனாப். எஸ். எம். இப்ராலெவ்வை அவர்களுடன் 1979ஆம் ஆண்டு இரண்டு மாடி அடுக்கு நூலகத்தை அமைக்க கைச்சாத்திடப்பட்டது.

மேலும் 1981ஆம் ஆண்டு மலசலகூடம், மதில் சுவர் கட்டுவதற்கு ஒரு இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நூலகம் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டு அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அதிலிருந்து சிறப்பாக செயற்பட்டுக் கொண்டு வந்தது. பின்னர் தொழில்நுட்பத்துடனான சேவைகளை அப்போதைய தவிசாளர் எ.எம்.எம்.நெளஷாட் அவர்களின் வழிகாட்டலின் கீழ் Wifi internet, e-Reference, i-Study நிலையம் போன்றன அமைக்கப்பட்டன.

இவருடைய தலைமையில் 2013 இல் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாப்பட்டது. அத்துடன் நூலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் சிறுவர் பூங்கா உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டது. இந்நூலகத்தில் பத்திரிகைப் பகுதி, ஆங்கிலப் பிரிவு, இரவல் பிரிவு, சிறுவர் பகுதி போன்றன காணப்படுகிறது.