நிறுவனம்:அம்/ அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
பெயர் | அம்/ அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | அக்கரைப்பற்று |
முகவரி | முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய வீதி, அக்கரைப்பற்று, அம்பாறை |
தொலைபேசி | 0672277364 |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முன்னணி முஸ்லிம் தேசிய கலவன் பாடசாலையாகும். 75 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய அரசினர் கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையே, இப்போது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியாக (தேசிய பாடசாலை) வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் பவள விழா 10.06.2021 இல் கொண்டாடப்பட்டது. 1935 இல் அக்கரைப்பற்றில் உதயமான 'ஐனுல் ஹுதா' எனும் வாசிகசாலைச் சங்கமும், அதன் பின்னர் உருவாகிய 'ஹிதாயத்துல் இஸ்லாம்' இயக்கமும், இவ்வூரின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக சிந்தித்து செயலாற்றத் தொடங்கிய முக்கியமான அமைப்புகளாகும்.
ஹிதாயத்துல் இஸ்லாம் சபையின் அங்கத்தவர்களான மர்ஹூம்களான எம்.ஐ.எம். மொஹிதீன்வ் எம். பி. முகம்மதுத் தம்பி இவ்விருவரும், அக்கரைப்பற்றில் ஓர் ஆங்கில கனிஷ்ட பாடசாலையை அமைத்துத் தருமாறு தருமரெத்தினம் வன்னியனாரிடம் கோரிக்கை விடுத்தனர். தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறான ஆங்கிலப் பாடசாலையொன்று அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட தருமரெத்தினம் வன்னியனார் விரைந்து செயலாற்றத் தொடங்கினார்.
ஏறத்தாழ ஒரு வார காலத்தின் பின்னர், ஹிதாயத்துல் இஸ்லாம் சபையின் உப செயலாளர் எம். பி. முகம்மதுத் தம்பி ஆசிரியருக்கு, அவர் தந்தியொன்றை அனுப்பினார் . அதில் "உப்புக் குதம் அமைந்திருக்கும் இடத்தில் ஆங்கிலக் கல்லூரி தொடங்குவதற்கு இரு ஆங்கில ஆசிரியர்களுடன் 10.06.1946 ஆம் திகதி வருகிறேன். திறப்பு விழாவிற்கு உரிய ஆயத்த வேலைகளைச் செய்யுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்கு அருகே அம்பாறை வீதியில் அமைந்திருந்த உப்புக் குதக் கட்டடத்தில்தான் (உப்பு களஞ்சியசாலை) இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபராக இருந்த மர்ஹூம் அஸீஸ் அவர்கள் பாடசாலையை திறந்து வைத்தார். தருமரெத்தினம் MSC அவர்கள், S. A. ஹுஸைன், S. B. C. ஹலால்டீன் எனும் இரு முஸ்லிம் ஆங்கில ஆசிரியர்களுடன் வருகை தந்திருந்தார். 10.06.1946 அன்று பி.ப. 4 மணிக்கு ஆங்கிலப் பாடசாலை 'கிறாஅத்' - 'துஆ' பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்களால் திறப்பு விழா நடந்தேறியது. இவ்விடத்தில் பாடசாலை தொடர்ந்தும் இயங்கி வந்தது.
எனினும், பாடசாலை நிர்வாகத்தினரும் பெற்றோரும், இங்கு நிலவும் இடப் பற்றாக்குறை காரணமாக ஊரின் மத்தியிலிருந்த உப்புக் குதத்திலிருந்து, ஊரின் மேற்குப் புறமாக தில்லையாற்றின் மருங்கில் இருந்த விசாலமான நிலப்பரப்பான நரிப்புட்டிக்கு இப்பாடசாலை இடமாற்றம் செய்யப்பட்டது. 1946.06.10 முதல் 1952.12.31 வரை உப்புக் குதத்தில் இயங்கிய பாடசாலை, 1953.01.01 முதல் தற்போது பாடசாலை இருக்கும் நரிப்புட்டியில் இயங்கத் தொடங்கியது. 120 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, அதில் 5 வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. 1946 இல் 26 மாணவர்களோடு இயங்கிய இப்பாடசாலை, 1953 வரை 125 மாணவர்களையே கொண்டிருந்தது. இந்த இடமாற்றத்தினால் மாணவர் தொகையில் மேலும் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. மாணவர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதில், அக்காலப் பெற்றோரினதும் மூத்த சமூக ஆர்வலர்களினதும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானவை.
இதில் மர்ஹூம்களான மொஹிதீன் கங்காணியார், லெப்பைக்கனி புலவர், மரைக்கார் தம்பி (VC அங்கத்தவர்), முகம்மதிஸ்மாயில் முஅத்தினார், சீனி முஹம்மது ஓடாவியார், சாலி ஓடாவியார், சீனி முகம்மது மரைக்காயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மாணவர் வருகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியதால், 1958-59 களில் கட்டிடம் போதாத நிலை ஏற்பட்டது. அப்போது மொஹிதீன் கங்காணியார், தனது வீடொன்றைப் பிரித்து வந்து, பெரிய கட்டிடத்திற்குக் கிழக்குப் பக்கமாக வகுப்பறையொன்றை அமைத்துக் கொடுத்தமை மறக்க முடியாததாகும்.
1954 இற்குப் பின்னுள்ள பருவங்களில் குறித்த இப்பரீட்சைகளில் முதலாம் தர- இரண்டாம் தரப் பிரிவுகளில், இப் பாடசாலையிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவர்கள் சித்தியடைந்தனர். இதனால் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை அமைக்க அப்போதைய அரசு அனுமதியளித்திருந்தது. இதற்கமைய 09.12.1958 அன்று அப்போதைய தலைமையாசிரியர் திரு வீ. நாகையா மாஸ்டர் தலைமையில் பாடசாலை சமூகத்தினர் இதற்கான அடிக்கல்லை நட்டி கட்டிட நிர்மாணத்தை ஆரம்பித்து வைத்தனர்.
1946 இல் இப் பாடசாலை அரசினர் கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையாக தோற்றம் பெற்றது. பின்னர் 1958 இல் அரசினர் சிரேஷ்ட பாடசாலையாகவும் ( Govt. Senior School), 1963 இல் மகா வித்தியாலயமாகவும், 1979 இல் மத்திய மகா வித்தியாலயமாகவும் தரமுயர்ந்தது. 29.09.1992 இல் தேசியப் பாடசாலையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது மிக முக்கியமானதோர் அடைவாகும். இதுவே கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது தேசியப் பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2013 இல் 1 ஏபி சுப்பர் (1AB Super) பாடசாலை என்ற அங்கீகாரத்தைப் பெற்றமை இன்னொரு முக்கியமான அடைவாகும்.
1960 இல் க.பொ. த உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1969 இல் வணிகப் பிரிவும் 1971 இல் உயர்தர விஞ்ஞானப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பயனாக பல்வேறு மாணவர்கள் பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்று, கல்வியிலும் சமூக பொருளாதார வாழ்விலும் பெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர். பாடவிதான செயற்பாடுகளில் மட்டுமல்லாது, இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் இப்பாடசாலை பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. தற்போது பாடசாலை அதிபராக ஏ. எச். பௌஸ் அவர்கள் கடமையாற்றுகின்றார்.