ஆளுமை: விஸ்வலிங்கம், சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்துரை விஸ்வலிங்கம்
தந்தை சின்னத்துரை
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு 1928.05.11
இறப்பு 1993
ஊர் திருக்கோணமலை
வகை நாடகத்துறை சார் செயற்பட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலை நாடக வரலாற்றில் நாடகக் கலையின் தந்தையாக போற்றப்பட வேண்டியவர் அபிநயசிகாமணி விஸ்வலிங்கம் ஆவார். இவர் திருகோணமலை அன்புவெளிபுரம் கிராமத்தில் நகர சபை காவலாளியாக பணியாற்றிய சின்னத்துரை மற்றும் பார்வதிப்பிள்ளைக்கு நான்காவது மகனாக 1928 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 10ஆம் திகதி 9 சகோதரர்களுடன் பிறந்தார். இவர் இந்து கல்லூரியில் ஆரம்பக் கல்வியை பெற்றார். இவர் இளவயதில் பெற்றோரின் வறுமையின் காரணமாக தரம் எட்டுக்கு மேல் படிக்க முடியாமல் போனது. இவர் தையல் தொழிலை ஒரு ஜீவனோபாயமாக புரிந்து வந்த போதிலும் உறவினர் ஒருவரின் உதவியால் சிறை அமைப்பு கூட வழித்துணை சேவகராக பணியாற்றி, இறுதியில் ஓய்வு பெற்றார்.

இவரது வாழ்க்கை துணையாக 1953 ஆம் ஆண்டு மனோமணி என்பவரை மணம் முடித்து 5 பிள்ளைகளுக்கு தந்தையாகிய போதும், நாடகமே தனது முதல் துணை என்ற எண்ணத்தில் வாழ்ந்து காட்டியவர் விஸ்வலிங்கம் ஆவார். பல நாடக மேடைகளில் விஸ்வலிங்கம் முக்கிய கதாபாத்திரமாக இருந்ததுடன் 1928 தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரை தனது ஆளுமையை நிலைநாட்டினார். தனது பன்னிரண்டாவது வயதில் அண்ணாவி தம்பி முத்து அவர்களை மானசீக குருவாகக் கொண்டு செயல்பட்டார். இவர் நாடகத் துறையில் செயலாற்றி வந்தது இவரது தந்தைக்கு பாரிய அளவில் விருப்பத்தை கொடுக்கவில்லை என்பதும், அதற்காக இவர் பல முறை தந்தையின் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்தக் காலத்தில் திருகோணமலையில் நாடகத்துக்கென விசேடமாக காணப்பட்ட கணேசன் தியேட்டரில் (இன்றைய கார்கீல்ஸ் புட் சிட்டி) அண்ணாவி தம்பிமுத்து அவர்களின் நாடகத்தை தவறாது பார்த்து, அதில் காணப்படும் கதாபாத்திரங்களை அதேபோன்று அயலவர்களுக்கு, நண்பர்களுக்கு நடித்துக் காட்டுவதில் விஸ்வலிங்கம் கைதேந்த ஒரு கலைஞர்.திருக்கோணமலையில் இயங்கி வந்த திருவள்ளுவர் கழகம் திருக்குறள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்த போது ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்ய நினைத்த போதிலும் இவரது திருமணம் காரணமாக அந்த நாடகத்தை மேடையற்ற பல இன்னல்களை எதிர் நோக்கியும், திருமணத்துக்கு மறுநாள் திருக்குறள் மாநாட்டில் நாடகத்தை மேடையேற்றி காட்டினார்.

மேலும் இவர் சிங்கள மொழிப் புலமையைக் கொண்டிருந்தமையால், சிங்கள மொழியில் நாடகங்களை எழுதி சிங்கள கலைஞர்களை கொண்டு திருகோணமலையின் கிராமங்கள் தோறும் சிங்கள நாடகங்களை மேடையேற்றி சிங்கள நாடகத் துறைக்கும் ஓர் முக்கிய கதாபாத்திரமாக இவர் காணப்பட்டுள்ளார். நாடக எழுத்தாளர், நடிகர், ஒப்பனைக் கலைஞர், உடை தயாரிப்பாளர், அணிகலன் வடிவமைப்பாளர் என பல்துறை ஆளுமை கொண்ட ஒருவராக கலைஞர் விஸ்வலிங்கம் திகழ்ந்துள்ளார்.

இவரது நாடகப் பசிக்கு தீராத உணவாக அமைந்தது திருகோணமலை திருவள்ளுவர் கழகமும், வைத்தியர் சின்னத்துரை, காந்தி ராஜகோபால், ஆர்மோனியம் சின்னையா போன்றவர்கள் ஆவார். 1950ஆம் ஆண்டு திருகோணமலையில் கலைப்பணி, கல்விப் பணியாற்றி வந்த திருவள்ளுவர் கழகத்துடன் தன்னை இணைத்துக் கொண்ட விஸ்வலிங்கம் அவர்கள் 1950ஆம் ஆண்டு முதல் நாடகமான கொள்ளைக்காரன் எனும் நாடகத்தை இந்து கல்லூரியில் மேடையேற்றி அந்த நாடகத்தில் பிரதான நடிகராகவும் நடித்துக் காட்டினார். தனது இரண்டாவது நாடகமான "சேரநாட்டு இளவரசி" எனும் சரித்திர நாடகத்தை வைத்தியர் சின்னத்துரையின் உதவியோடு மேடையேற்றினார். மக்கள் நாடக மன்றம், எங்கள் நாடக மன்றம், மறுமலர்ச்சி மன்றம், கலையரசி நாடக மன்றம், திருமலை கலைவட்டம், முத்தமிழ் கலாமன்றம், சரஸ்வதி நாடக மன்றம் போன்ற நாடக மன்றங்களில் திருகோணமலை நகரப் பிரதேசத்திலும், பட்டிதிடல் கலைமகள் நாடக மன்றம், மூதூர் கத்தோலிக்க இளைஞர் நாடக மன்றம், மூதூர் பெண்கள் கலை வட்டம், மூதூர் முத்தமிழ் மன்றம், கட்டைபறிச்சான் விநாயகர் நாடக மன்றம், சம்பூர் நாமகள் நாடக மன்றம் போன்றவற்றில் 1970 ஆம் ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியில் சுமார் 500 நாடகங்களை மேடையேற்றி காட்டிய ஒரு அபார கலைஞர் இவராவார்.

இவர் மேடை ஏற்றிய நாடகங்கள் என்ற வகையில் பின்வரும் நாடகங்கள் இன்றுவரை பெருமைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

1950 - கொள்ளைக்காரன் நாடகம் 1952 - சேர நாட்டு இளவரசி நாடகம் 1953 - இளைஞர் பாரதியார் நாடகம் 1954 - ஏன் மறந்தோம் நாடகம் 1955 - சிற்பியின் சிதைந்த உள்ளம் நாடகம் 1956 - சமாதி நாடகம் 1957 - யார் குற்றம் நாடகம் 1958 - தவறான பாதை நாடகம் 1963 - சிவ பக்தன் சித்திரபானு நாடகம் 1966 - கணபங்கம் நாடகம் 1967 - தந்தையின் குழந்தை நாடகம் 1968 - அடங்கிய பிடாரி, காலம் மாறிப்போச்சு நாடகம் 1969 - திருக்கோணலிங்கம், தெய்வமே துணை, அன்பே சிவம் நாடகம் 1970 - ஓடி வந்தவர்கள், இருண்ட நெஞ்சம் நாடகம் 1971 - மாமி விஜயம், தமிழ் நந்தி, சோக்கல்லோ சோமு நாடகம் 1972 - நெஞ்சிலோர் ஆலயம் 1973 - பலிபீடம், எல்லாம் காசுக்காக

திருகோணமலை சேவையை பாராட்டி கண்டி தென்னக்கும்பர சச்சிதானந்தம் அவர்கள் 1965 ஆம் ஆண்டு இவருக்கு "அபிநயா சிகாமணி" என்ற பட்டத்தை சூட்டினார். அதுபோலவே 1980ல் வைத்திய சின்னத்துரை செல்வநாயகம் என்பவர் ஆலடி விநாயகர் ஆலயத்தில் வைத்து "பத்மசிரோன்மணி" என்ற பட்டத்தையும் சூட்டினார். இவர் 1967 ஆம் ஆண்டு அன்புவெளிபுரத்தில் "மதிவளர் நாடக மன்றம்" ஒன்றை ஸ்தாபித்து 21 நாடகங்களை மேடை ஏற்றினார். ஈழத்தின் நவீன நாடக மேடை வரலாற்றில் விஸ்வலிங்கம் ஆச்சரியப்படும் சாதனை படைத்த ஒரு கலைஞன் ஆவார்.

இவர் 1993ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.