ஆளுமை:ஹம்சா பீ, ஆரிப்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹம்சா பீ
தந்தை மஜீத்கான்
தாய் உம்மு ஹபீபா
பிறப்பு 1929.11.13
ஊர் சிலாபம்
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹம்சா பீ, ஆரிப் சிலாபத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மஜீத்கான்; தாய் உம்மு ஹபீபா. ஆரம்ப இடைநிலைக் கல்வியை சிலாபத்திலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் பெண்கள் பாடசாலையிலும் உயர் கல்வியை கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1947ஆம் ஆண்டு எலபடகம முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையை ஆரம்பித்தார்.1952ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சியை முடித்துக்கொண்டு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். இதே காலப்பகுதியில் பண்டிதர் பரீட்சைக்கும் தோற்றினார். புத்தளம் மாவட்டத்தில் முதல் பெண் பண்டிதர் இவராவார்.

அதிபராக சுமார் 25 வருடமாக சேவையாற்றி பெண்கள் கல்விக்கு பெரும் பங்காற்றியுள்ளார். பாக்கீர் மாக்கார் அவர்களின் பணிப்புரைக்கு அமைய பேருவளை மருதானையிலுள்ள அல்பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலையின் அதிபராக 1964ஆம் ஆண்டு கடமையை பொறுப்பேற்றார். இக்காலப் பகுதியில் பெண்களின் கல்வி நிலை இப்பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருந்தது. கல்வி பயிலக்கூடிய மாணவிகள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கிறார் ஹம்சா. இவர் வீடு வீடாகச் சென்று பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். கிராம எழுச்சிச் சங்கங்களை அமைத்து அதன் ஊடாக முஸ்லிம் பெண் பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறிவுறுத்தியுள்ளார். பாடசாலையிலேயே மாலை நேர வகுப்புக்களையும் நடாத்தி மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தைச் சொல்லி ஊக்கப்படுத்தினார். தையல், கைப்பணி வேலை வகுப்புகளையும் நடத்தி பயிற்றுவித்துள்ளார். இன்று இப்பகுதி பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் எனத் தெரிவிக்கிறார் ஹம்சா. சுமார் 25 வருட காலம் தொடர்ச்சியாக அதே பாடசாலையில் சேவையாற்றியுள்ளார். 1989ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார் ஹம்சா. அத்தோடு இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் முதன் முதலாக மாதர் நிகழ்ச்சியை நடத்திய பெருமைக்குரியவர் இவர் என்பதோடு சௌத்துன் நிஸா என்ற பெயரில் சுமார் 14 வருடகாலமாக மாதர் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

விருதுகள்

வாழ்வோரை வாழ்த்துவோம் முஸ்லிம் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு.

கலைத்தாரகை (நஜ்முல் பன்னான்).

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹம்சா_பீ,_ஆரிப்&oldid=324516" இருந்து மீள்விக்கப்பட்டது