ஆளுமை:ஷாமிலா, செரீப்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஷாமிலா
தந்தை செரீப்
தாய் ருசூதா
பிறப்பு 1982.01.22
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷாமிலா, செரீப் (1982.01.22) மட்டக்களப்பு செம்மண்ணோடை வாழைச்சேனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஷெரீப்; தாய் ருசூதா. ஆரம்பக்கல்வியை மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் பின் உயர்தரத்தினை ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவிலும் கற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிக்கற்கையையும், முதுமாணிக்கற்கையை தனியார் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார். ஆவணப்பட இயக்குனராக தொழில் புரிந்த முஹம்மட் முஸ்டீன் இவரின் கணவராவார். ஷாமீலா இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். 2006 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் டிப்ளோமா கற்கையினைப் பயின்ற இவர் விசேட சித்தி பெற்றதோடு "ஊடகத்தில் ஆக்க எழுத்து" என்ற பாடத்திற்காக விருதினையும் பெற்றார். 2012 ஆம் ஆண்டு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்ட பின் கல்வி டிப்ளோமா கற்கையினையும் பூர்த்தி செய்துள்ளார். சிறு வயதிலிருந்தே சட்டத்தரணியாக வர வேண்டும் என்ற கனவு நிறைவேறாமலே போக இவரின் மற்றொரு கனவான அறிவிப்பாளராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு 2007 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக இணைந்துகொண்டதன் மூலம் நிறைவேறியது என்கிறார் ஷாமிலா. இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் தயாரிப்பில் இருபதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை நடித்திருக்கிறார். 2006 ஆம் ஆண்டு தொடங்கிய ஆசிரியப்பயணம் இன்றுவரை தொடர்கிறது. மாணவர்களை கவிதை, கட்டுரை,சிறுகதை, பேச்சு,நாடகம் என பல்துறைகளிலும் பங்கு பெறச்செய்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இவரை வளவாளராக பயன்படுத்தி கல்வி அமைச்சின் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்காக மாதிரி கற்பித்தல் படமாக்கப்பட்டு ஆசிரியர் வாண்மை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு கற்பித்தல் உபகரணமாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது. படைப்பிலக்கிய பயணத்தினைப் பொறுத்தவரை ”யாரும் சாப்பிட முடியா குட்டாஞ்சோறு” தான் எனது முதல் கவிதைத்தொகுதி ,"நிலவின் கீறல்கள்" இரண்டாவது தொகுதி , "மறைக்கப்பட்ட சொற்களின் அழகு" பூவரசி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு(இலங்கை),உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு(காயல் பட்டணம்,இந்தியா),சர்வதேசக்கருத்தரங்கு-பெண்ணியத்தின் புதிய போக்குகள் (கேரளா பல்கலைக்கழகம்- இந்தியா) ஊடறுவும் மலையகப்பெண்களும் இலக்கியச்சந்திப்பு (கொட்டக்கலை, இலங்கை)ஊடறுவும் மலேசியப்பெண்களும் இலக்கிய சந்திப்பு (பினாங்கு,மலேசியா) உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு (இலங்கை) போன்ற மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். செய்யுள் இலக்கியம் தொடர்பான செயல்வழி ஆய்விலும் போர் இலக்கியம் தொடர்பான இலக்கிய ஆய்விலும் எனது பணி தொடர்வதாக கூறுகிறார் எழுத்தாளர் ஷாமிலா.

குறிப்பு : மேற்படி பதிவு ஷாமிலா, செரீப் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • யாரும் சாப்பிட முடியா குட்டாஞ்சோறு (கவிதைத் தொகுப்பு)
  • நிலவின் கீறல்கள்
  • மறைக்கப்பட்ட சொற்களின் அழகு

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஷாமிலா,_செரீப்&oldid=408765" இருந்து மீள்விக்கப்பட்டது