ஆளுமை:வேலாயுதம், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலாயுதம் கந்தையா
தந்தை கந்தையா
தாய் -
பிறப்பு 1929.12.23
இறப்பு 2005.02.24
ஊர் சாம்பல்தீவு, திருக்கோணமலை
வகை சமூக ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் சாம்பல்தீவு கிராமத்தின் முக்கிய சமூக ஆளுமை ஆகும். யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 23.12.1929 பிறந்தவர். சாம்பல்தீவு 03ஆம் வட்டாரத்தில் வாழ்ந்தவர். சாம்பல்தீவு மகாவித்தியாலத்தில் கல்வி கற்றவர். தனது 07 வயதிலே தாய், தந்தையரை இழந்தமையினால், தனது சகோதரி பாக்கியம் என்பவருடன் இருந்து வளர்ந்தார். 1971 - 1975 காலப்பகுதியில் கிராமசபைத்தலைவராகப் பணியாற்றினார். இக்காலத்தில் சாம்பல்தீவின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். சாம்பல்தீவு பாடசாலையை மகாவித்தியாலயமாக்குவதற்காக பாடுபட்டார். சாம்பல்தீவு மக்களை ஒன்றுதிரட்டி பல சிரமதானப்பணிகளைச் செய்தார். சாம்பல்தீவிற்கு மின்சாரவசதி கிடைக்க, மின்சார கம்பிகளைப் பொருத்துவதற்கு வீதியின் ஒருபுறத்தில் இருந்த மரங்களை வெட்டித்துப்பரவு செய்யவேண்டியிருந்தது. மக்களை ஒன்றுதிரட்டி பாரிய சிரமதானப்பணியொன்றின் மூலம் ஒரு நாளிலேயே சாம்பல்தீவு சந்தியில் இருந்து கேணியடிச் சந்திவரையான 02 கிலோமீற்றர் தூரத்தை துப்பரவு செய்து கொடுத்தார்.

1952ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் ஈடுபட்டுவந்தார். தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் தீவிர ஆதரவாளராவார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சாம்பலதீவு கிளைத்தலைவராகவும், மாவட்டக்கிளையினுடைய உபதலைவராகவும் கடமையாற்றினார். அத்துடன் மாங்கணாய் மாரியம்மன் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவராக 1990 தொடக்கம் 1995 வரை இருந்தார். சாம்பல்தீவு மகாவித்தியாலத்தின் பெற்றோர், ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர், ஆத்திமோட்டைப்பகுதியின் கிராம அபிவிருத்திச்சபையின் தலைவர் ஆகிய பொறுப்புக்களிலிருந்தும் கடமையாற்றினார்.

இவருக்கு இரண்டு புதல்வர்கள், மூத்தவர் கும்புறுபிட்டியில் “ஜேர்மன் குரல்” நிறுவனத்தில் கடமையாற்றிய போது இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் போனார். இளையமகன் யுத்தத்தின் காரணமாக நகரப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றார். இறுதிக்காலத்தில் தனது மகனுடன் வாழ்ந்து 24.02.2005 அன்று காலமானார். அவரது பூதவுடல் அவர் வளர்ந்த, அவர் சேவையாற்றிய, அவர் நேசித்த கிராமமான சாம்பல்தீவு கிராமத்தின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.