ஆளுமை:வினோசா, வரதராஜன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வினோசா
தந்தை சிவசோதி
தாய் லீலாவதி
பிறப்பு 1979.11.03
ஊர் முள்ளியவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வினோசா, வரதராஜன் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசோதி; தாய் லீலாவதி. வினோசாவின் தந்தையார் இசை, வாத்தியக் கலைஞராவார். ஆரம்பக் கல்வியை முள்ளியவளை இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை முள்ளியவளை கலைமகள் வித்தியாயலத்திலும் உயர் கல்வியை வித்தியானந்தா கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொது கலைப்பிரிவு பட்டதாரியான இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் முடித்துள்ளார். யாழ்ப்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழில் முதுகலைமாணிப் பட்டத்தையும் முடித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே பட்டிமன்றம், கவியரங்குகளில் பங்குபெற்றுவரும் இவர் முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய முல்லைமோடிக் கூத்தை பாடசாலை மாணவர்களுக்கு பழக்கி வருகிறார். கதிர்கலை இலக்கிய மன்றத்தின் ஸ்பாகரும் இவர் ஆவார். இடம்பெயர்வுக்கு முன்னர் தொலைக்காட்சியில் இடம்பெற்ற தமிழமுது நிகழ்வில் சில வருடங்கள் நிகழ்வுகளை வழங்கியதுடன் செய்தி விவரணப் பகுதியில் பின்னணிக் குரலும் வழங்கி இருந்தார். தமிழ் ஆசிரியரான இவர் 2013இல் நெறியாள்கை செய்த காத்தவராயன் கூத்து, கோவலன் கூத்து ஆகியவை இவரால் எழுதி நெறியாள்கை செய்யப்பட்டது என்பது விசேட அம்சமாகும். இவ்விரு கூத்தும் சமநேரத்தில் மேடையேற்றப்பட்டு பாராட்டப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய கூத்தான இராவணேசன் வடமோடிக் கூத்தினை மாணவர்களைப் பயிற்றுவித்து அரங்கேற்றி வருகின்றார். நெஞ்சிருக்கும் வரை (கவிதை தொகுப்பு) தேசிகன் (கவிதைத் தொகுப்பு), இலக்கியக் கதைகள் (கதைத் தொகுப்பு, க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பாடநூற் தொகுப்புக்கள் நான்கு, தரம் 9 பயிற்சி நூல் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவரின் ஆக்கங்கள் ஞானம், ஜீவநதி, நறுமுகை, கலைமகள் ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. கர்ணன், பாஞ்சாலி, யேசுபிறப்பு, வானுயர முதலான மேடை நாடகங்களையும் இல்லறம் எனும் நல்லறம், சூரிய புத்திரன், ஊழ்வினை உறுத்தும், சத்தியமே வாழ், சரஸ்வதி சபதம் முதலான வில்லிசைகளையும் சிலம்பு, இராம இராவணன், யேசு கிறிஸ்து முதலிய நாட்டிய நாடகங்களையும் எழுதி நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.


குறிப்பு : மேற்படி பதிவு வினோசா, வரதராஜன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வினோசா,_வரதராஜன்&oldid=337998" இருந்து மீள்விக்கப்பட்டது