ஆளுமை:விஜிலி, முஹம்மது மூசா
பெயர் | முஹம்மது மூசா விஜிலி |
தந்தை | முஹம்மது மூசா |
தாய் | றாகிலா |
பிறப்பு | 1969.11.10 |
ஊர் | மருதமுனை , அம்பாறை |
வகை | கவிஞர், எழுத்தாளர் |
புனை பெயர் | விஜிலி, பிர்ஜா, மருதமுனை விஜிலி, அகலிதன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மது மூசா விஜிலி அவர்கள் (பி.1969.11.10-) அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை கிராமத்தில் முஹம்மது மூசா, றாகிலா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்தார்.
இவர் மருதமுனை அல்-மனார் மத்தியகல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் "கல்வி டிப்ளோமா’’ பட்டமும் (2000), அதே பல்கலைக்கழகத்தில் "இதழியல்” பட்டமும் (2003) பெற்றுள்ள இவர் தற்போது சாய்ந்தமருது அல் - ஹிலால் முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலை முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரது முதலாவது கவிதை 1987ம் ஆண்டில் "தாய்மையின் வடிவம்’ எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் இடம் பெற்றது. 1988ம் ஆண்டில் பாடசாலைச் சஞ்சிகையான கலங்கரையில் ‘புதுயுகம் காண்போம்’ எனும் கவிதை மூலம் அச்சு ஊடகத்தில் தடம்பதித்தார்.
இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் பல இலக்கிய விமர்சனங்களையும், இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், நவமணி, மித்திரன், தினக்கதிர் ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும், அமுது, முனைப்பு, களம், சமாதானம், கீறல், யாத்ரா, கண்டி இலக்கியச் செய்திமடல், உலா, ரோஜா போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
1992 - 1995 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழக 'சங்கப்பலகையில் இவரது பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இளங்கதிர் சஞ்சிகையிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இவரது எழுத்துகளுக்கும், கவிதைகளுக்கும் உற்சாகமூட்டியது கலாநிதி துரை. மனோகரன் அவர்களும், பாடசாலைக் காலத்தில் எழுதத்தூண்டிய அதிபர் மருதூர்பாரி அவர்களுமாகும். சுயமாக ஒரு நூலினை இதுவரை இவர் வெளியிடாத போதிலும் கூட, பல்வேறு சஞ்சிகைகளை வெளியிடுவதில் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
அவை உதயநிலா - 1991 இணையாசிரியர் ரோஜா - 1993 உதவியாசிரியர் ஏடு - 1996 உதவியாசிரியர் கலங்கரை - 1999 இணையாசிரியர் போன்றனவாகும். அத்துடன் மருதூர்க்கொத்தன் மீள்தல் (கதைகள்) நூலின் தொகுப்பாசிரியராகவும் காணப்படுகின்றார். "பாரதி தமிழோசைக் கழகம்’ அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் (2002) சிறப்புப் பரிசும், 'யாத்ரா" (2000) திறந்த கவிதைப் போட்டியில் ஏழாவது இடத்தையும் பெற்றுள்ள இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவிற்கான ஆய்வுநூலாக "நவீன கவிதையில் தென்கிழக்குக் கவிஞர்கள்” எனும் ஆய்வினைச் சமர்ப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் கவிதை மட்டுமல்லாது சிறுகதை எழுதுவதிலும் நாட்டம் உள்ளவர். இவர் உன்னோடு வந்த மழை (2007) எனும் கவிதை தொகுப்பு மற்றும் இரண்டாவது தெருவின் நிழல் (2018) போன்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதுவரை இவர் 12 சிறுகதைகளை எழுதியுள்ளார். இச்சிறுகதைகளை அடுத்துவரும் ஆண்டுகளில் நூலாகக் கொண்டுவரவுள்ளார். இச்சிறுகதைகள் கொரோனா கால நினைவுகள், பல்கலைக்கழக பகிடிவதைகள், பாடசாலை இடமாற்றம், புதிய இயற்கை சூழல், நட்பு போன்ற விடயங்கள் கொண்டு இச்சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இச்சிறுகதைகளில் சில வானொலி, பத்திரிகைகள் மற்றும் சில சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
இவர் கல்முனை பிரதேச சபையின் கலாச்சார அதிகார சபையின் செயலாளராக இருக்கின்றார். அத்துடன் அம்பாறை மாவட்ட புத்தக எழுத்தாளர் சங்கத்தின் மூலம் புதிய இலக்கிய நாட்டமுள்ளவர்களை ஊக்கப்படுத்தல், புத்தக வெளியீடுகள் செய்வதற்கான ஏற்பாடுகளை உண்டாக்கிக் கொடுத்தல் மற்றும் நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான இலக்கியவாதிகளை அடையாளம் காணுதல் போன்ற செயற்பாடுகளையும் செய்கின்றார். அதுமட்டுமில்லாது இலக்கியப் போட்டிநிகழ்ச்சிக்கான பெயர்கள் மற்றும் அவர்களை சிபாரிசு செய்தல் என்பவற்றிலும் ஈடுபடுகின்றார்.