ஆளுமை:விஜயகுமாரி, தவசலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயகுமாரி தவசலிங்கம்
தந்தை இராமநாதப்பிள்ளை
தாய் சிவசோதிப்பிள்ளை
பிறப்பு 1953.07.25
ஊர் திருகோணமலை
வகை இசைத்துறை ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


விஜயகுமாரி தவசலிங்கம் அவர்கள் 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி திருகோணமலையில் இராமநாதப்பிள்ளை மற்றும் சிவசோதிப்பிள்ளை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு 11 சகோதரர்கள். இவரது தந்தையார் ஒரு தொழில் அதிபராக இருந்தார். இவர்கள் சிறு வயது முதல் திருகோணமலை சாரதா வீதியில் வசித்து வந்ததுடன், இவரது தாயார் இசை துறையில் ஆர்வம் மிக்கவராக காணப்பட்டார்.

திருகோணமலையின் இசை பாரம்பரியத்தின் முக்கிய ஆளுமைகளுள் இவரும் ஒருவராவார். இவர் சுமார் 24 வருடங்களாக இலவசமாக இசை நடன கலாலயம் எனும் அமைப்பு ஊடாக தனது இசை கலையை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வந்து வசித்த தில்லையம்பலம் ஆசிரியர் ஊடாக இசையை கற்று தேர்ச்சி அடைந்த இவரது தாயாரும், சகோதரிகளும் இவருக்கு இசைத்துறையில் ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்தனர். இவருடைய இசை பயணத்தில் இவரது குருவாக இருந்தது, இராஜ ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் ஆவார். இவரிடம் இசையைக் கற்று தேர்ந்த இவர், பின்னர் 1973 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று தஞ்சாவூர் டி. எம். தியாகராஜர் அவர்களிடம் கற்று தேர்ச்சி அடைந்தார்.

மேலும் 1977 ஆம் ஆண்டு சண்முக வித்தியாலயத்தில் உயர்தர மாணவர்களுக்கான இசைத் துறை ஆசிரியராக பணியாற்றி 1992 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 1990 ஆம் ஆண்டு லண்டன் சென்று பின்னர் 1992 இல் இலங்கை திரும்பினார்.

வட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன் 1997 ஆம் ஆண்டு முதலாவது இன்னியம் இசைக்குழுவை அமைப்பதில் அரும்பெரும் பணியாற்றிய ஒருவர் இவராவார். இந்த இன்னியம் இசைக்குழுவில் 42 மாணவர்கள் இருந்ததுடன், இதில் ஏழு பாடசாலையை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பி கிரேட் ஆட்டிஸ்ராக பணியாற்றினார். அத்துடன் 2000 ஆண்டு முத்துக்குமார சுவாமி ஆலய திருமண மண்டபத்தில் தைப்பூச தினத்தில் இசை நடன கலாலயம் என்ற அமைப்பை நிறுவி இலவசமாக இசைத்துறை பயிற்சிகள் அளித்தார்.

பண்ணிசை, வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதம் போன்றவற்றை இலவசமாக இந்த அமைப்பு வழங்கி வருகின்றது. மேலும் ஒகஸ்ட்ரா என்று அழைக்கப்படுகின்ற பல இசைக்கருவிகளின் சங்கமத்தையும், இவர் முன் நின்று நடத்திய பெருமைக்குரியவர்.

மேலும் இன்று வரை தொடர்ந்து தன்னுடைய பணியை ஆற்றி வருவதுடன் மாணவர்கள் வட இலங்கை சங்கீத சபையின் சான்றிதழ்களை பெறுவதற்கும் வழிகாட்டி வருகின்றார்.