ஆளுமை:லெட்சுமிப்பிள்ளை, கதிர்காமநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லெட்சுமிப்பிள்ளை, கதிர்காமநாதன்
தந்தை மயில்வாகனம்
தாய் இராசம்மா
பிறப்பு 1952.12.10
இறப்பு 2023.06.30
ஊர் திருக்கோணமலை
வகை கல்வி சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருக்கோணமலையில் சான்றோர் பலரினது பிறப்பிடமான சாம்பல்தீவு என்னும் கிராமத்தில் 1952.12.10 இல் பண்புமிகு மயில்வாகனம், இராசம்மா தம்பதியினரின் இரண்டாவது மகளாக இப்பூமிதனில் ஜனனமானார். இவரது அன்னம்மா எனும் அக்காவையும், மகேஸ்வரி, ஞானேஸ்வரி, விஜயலட்சுமி ஆகிய உடன்பிறப்புக்களாகக் தங்கைகளையும், இராசதுரை, சிவராசா, மனோகரன், ஸ்ரீகரன், சுதாகரன் ஆகிய தம்பிமார்களையும் கொண்டவர்.

இவர் ஆரம்பக் கல்வியை சாம்பல்தீவுப் பாடசாலையிலும், உயர்கல்வியை திருக்கோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றார். இவர் விடுதியில் தமது மூத்த சகோதரி அன்னம்மாவுடன் தங்கியிருந்து கல்வி கற்றார். இவர் கல்வியில் சிறந்து விளங்கினார், எழுத்துக்கள் அச்சடித்ததுபோல் அழகாக காட்சியளிக்கும்.

இவருக்கு "சின்னக்கா" என்ற ஒரு சிறப்பு பெயருண்டு. இவரது சகோதரர்கள் சிறுவயதிலிருந்து இவரை சின்னக்கா என்று அழைத்து வருகின்றனர். சகோதரர்கள் மட்டுமல்ல மைத்துனர்கள், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லோருமே இவரை சின்னக்கா என்றுதான் கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இவர் தனது பிள்ளைகளை மட்டுமல்லாது, தனது சகோதரர்களின் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளைப் போலவே அன்பால் அரவணைத்து, உணவூட்டிச் சீராட்டி வளர்த்தமையை என்றுமே மறக்க முடியாது.

இவர் தனது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்ததன் பின்னர் சாம்பல்தீவில் உள்ள நெசவு சாலையில் நெசவு வேலையைப் பயின்றார். இவர் தனது சகோதரி மகேஸ்வரியுடன் நெசவு பயின்றார். இவர் நெசவுத் தொழிலை மிகவும் சீக்கிரத்திலேயே மிகச் சிறப்பாகக் கற்றுக் கொண்டார். போர்வை விரிப்பு, துவாய், சாய்மனைக் கதிரைக்கான துணி போன்ற பலவற்றையும் மிக அழகாக நெய்தார். இவர் நெசவு பாடத்தை தனியாக பரீட்சை எழுதி அதில் திறமைச் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு நெசவு ஆசிரியராக வேலை கிடைத்தது. மூதூரில் உள்ள தோப்பூர் பாடசாலையில் நெசவு ஆசிரியராக நியமனம் கிடைத்தது. சாம்பல்தீவிலிருந்து தோப்பூருக்கு தினமும் சென்றுவர முடியாத காரணத்தால் தோப்பூரிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்பு கடல் வழியாகத்தான் பயணம் நடைபெற்றது. இவ்வாறுதோப்பூரிலிருந்து வீட்டுக்கு வருவதற்காக "லோஞ்" என்று சொல்லப்படும் படகில் ஒருநாள் பயனத்தை மேற்கொண்டிருந்த வேளையில் தவறுதலாக கடலில் விழுந்துவிட்டார். மயிரிழையிலே இவர் காப்பாற்றப்பட்டார். கடலில் இச் சம்பவம் இவரின் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர் இவ்வேலைக்குப் போவதை விரும்பவில்லை.

இதன் பின்னர் இவருக்கு மாத்தறையில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக நியமனம் கிடைத்தது. அதன் பின்னர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை பயிற்சியினை பெற்றுக்கொண்டார். பயிற்சி காலம் முடிந்ததும் கோபாலபுரம் பாடசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்றார். தினமும் சாம்பல்தீவிலிருந்து கோபாலபுரம் சென்று கல்வி கற்பித்து வந்தார். சில வருடங்கள் அங்கு கடமையாற்றிய பின்னர் ஆத்திமோட்டை பாடசாலையில் இடமாற்றம் பெற்றுக் கொண்டார்.

கோபாலபுரம் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 1979 ஆண்டு பதினோராம் மாதம் முதலாம் திகதி குச்சவெளியைச் சேர்ந்த கனகசுந்தரம், தங்கம்மா தம்பதியினரின் மூத்த மகனான கதிர்காமநாதனை தனது மணவாளனாகத் திருமணம் புரிந்து கொண்டார். அவர் தபாலதிபராகக் கடமை புரிந்து கொண்டிருந்தார். பெற்றோர், உற்றார், உறவினர் பாராட்டும் வகையில் இவர்கள் இல்லறம் நடத்தினர். இவர்களது இல்லறம் சிறக்க சுகந்தினி, நிஷாந்தினி, பிரசாந்தி ஆகியோர் செல்ல குழந்தைகளாக வந்துதித்தனர். இவர்களது குடும்பத்திலே அன்பு சுமை கூடியது. இனிய மனைவியாகவும், பொறுப்பான தாயாகவும் மட்டுமன்றி பாசமிகு சகோதரியாகவும், நல்ல மருமகளாகவும், நல்ல சிற்றன்னையாகவும், நல்ல மைத்துனியாகவும், அன்பான அத்தையாகவும், பற்றுள்ள அம்மாவாகவும் இவ்வுலகில் வாழ்ந்து காட்டினார். இவர் தனது குடும்பத்தோடு மட்டும் நில்லாது தனது ஈகோதரர்களின் குடும்பங்களிற்கும் உதவுபவராக விளங்கினார்.

இவர் ஆத்திமோட்டை பாடசாலையில் ஆரம்ப ஆசிரியராகவும், அதன் பின்னர் பிரதி அதிபராகவும் பாடசாலையில் பற்பல சேவைகளை ஆற்றியுள்ளார். இவர் கடமையின் போது லீவு எடுக்கும் நாட்களமிக மிக அரிது. மிகவும் பொறுப்புணர்வுடன் கடமையாற்றி அதிபர், ஆசிரியர், பெற்றோர் மனதில் நீங்காத இடம் பிடித்தார். கற்பிக்கும் போது மாணவர்களை இவர் தனது சொந்தப் பிள்ளைகளை போல் அன்பால் அரவணைத்து பாடம் புகட்டுவார். இவரால் வழிநடத்தப்பட்ட மாணவர்கள் பலரும் இன்று உயர்நிலையில் உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள மாணவர் சிலர் தொலைபேசியில் இவரது நலம் விசாரித்து இவருடன் உரையாடியுள்ளனர். தமக்கு கற்பித்தலோடு சிறந்த அரவணைப்பாளராகவும் காட்டியுள்ளார்கள்.

இவர் தனது கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றதும் வீட்டில் பேரப்பிள்ளைகளுக்கு ஆசிரியரானார். அன்பான முறையில் பேரக்குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுத்துள்ளார். தனது பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி ஆசிரியராக, உத்தியோகத்தர்களாகத் திகழ வைத்த பெருமை இவரையே சாரும். 2023.06.30 இறைபதமடைந்தார்.