ஆளுமை:றபீஉத்தீன், அப்துல் கபூர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் கபூர் றபீஉத்தீன்
தந்தை அப்துல் கபூர்
தாய் காதர் பீபி
பிறப்பு 1963.07.08
ஊர் மருதமுனை , அம்பாறை
வகை கவிஞர், ஓவியர்
புனை பெயர் டீன் கபூர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் கபூர் றபீஉத்தீன் (டீன் கபூர்) (1963.07.08) அம்பாறை மாவட்டம் மருதமுனை கிராமத்தைச் சேர்ந்த ஓர் இலக்கியச் செயற்பாட்டாளர். இவர் 1963 ஆம் ஆண்டு அப்துல் கபூர், காதர் பீபி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரியும் நான்கு சகோதரர்களும் இருக்கின்றார்கள். ஒரு சகோதரர் கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் மற்றவர் ஆங்கில ஆசிரியராகவும் இருக்கிறார். இவர் தனது ஆரம்பக் கல்வி, உயர்கல்வி ஆகியவற்றை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் பயின்றார்.

1992.05.15 ஆம் திகதி ஆசிரியராக நியமனம் பெற்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கடமையாற்றி தனது ஆசிரியப் பணியை 2001 ஆம் ஆண்டு வரை முன்னெடுத்தார். அதன் பின்னர் பல பாடசாலைகளில் (சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, நிந்தவூர்) இடமாற்றம் பெற்று 2011ஆம் தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை மீண்டும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கடமையாற்றினார். 2019ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று நிந்தவூர் அஸ்-ஸபா வித்தியாலயத்தில் கடமையாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

இவரது இலக்கிய பணி 1987ஆம் ஆண்டு மித்திரன் வார பத்திரிகையில் வெளியான முதலாவது கவிதையில் இருந்து ஆரம்பமானது. பின்னர் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, எங்கள் தேசம், தமிழன் ஆகிய பத்திரிகைகளிலும் முனைப்பு, வியூகம், நன்றி, மல்லிகை, சுகந்தம், இணைகரம் ஆகிய சஞ்சிகைகளிலும் திண்ணை, வார்ப்பு, தட்டுங்கள், புதுவிதி, கொலுசு ஆகிய இணையதளங்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை நான்கு கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

குரோட்டன் அழகி எனும் நூலை 1994இலும் திண்ணைக் கவிதைகள் எனும் நூலை 2007இலும் சொற்களில் சுழலும் பிரபஞ்சம் எனும் நூலை 2019இலும் வேரினிடை எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை 2023இலும் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள லதா ராமகிருஷ்ணன் என்பவர் இவரது கவிதைகளில் ஒன்றை எடுத்து தனது ஆங்கில மொழி பெயர்ப்பு நூலான Fleeting Infinity எனும் நூலில் பிரசுரித்துள்ளார். மேலும் இந்தியாவைச் சேர்ந்த திரு. வரதன் என்பவர் இவரது கவிதைகளை மலையாளத்திலும் மொழிபெயர்த்துள்ளார். அதேபோல் இபுனு அசுமத் என்பவரும் சிங்கள மொழியிலும் பல கவிதைகளை மொழிபெயர்த்து வருகின்றார். ஹிந்தி மொழியிலும் சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவருக்கு ஆறாம், ஏழாம் தரங்களில் படிக்கும் போதே எழுத்துத் துறையிலே நாட்டம் இருந்துள்ளது. அப்போதைய காலங்களில் இவர் தனது பிரதேசத்தில் உள்ள பொது நூலகத்தின் மூலம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன் விளைவாக அன்றைய நாட்களில் மின்னஞ்சல், தூரிகை, காற்று எனும் கையெழுத்துச் சஞ்சிகைகளை இவரே உருவாக்கி நூலகத்திலே ஏனையவர்களின் பயன்பாட்டிற்கு கொடுத்திருக்கின்றார். இவர் உயர்தர மாணவர்களுடன் இணைந்து கலங்கரை எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட இணைந்து செயற்பட்டுள்ளார்.

அத்தோடு ஆசிரியர் பணியில் சேவையாற்றிய போது இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். அத்துடன் பாடசாலைகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை அறிவிப்பாளராகத் தொகுத்து வழங்கியவர். பாடசாலைகளின் சுற்றுச்சூழலை அழகுபடுத்துவதிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதிலும் இவரது பங்களிப்பு அதிகம்.

சிறுவயதில் இருந்து இன்று வரை கலை, இலக்கியத் துறையில் தடம்பதித்து வருகின்றார். அத்தோடு இவருக்கு ஓவியத்துறையிலும் நாட்டம் அதிகம். அதிலும் பல ஓவியங்களை வரைந்துள்ளார். பாடசாலையில் கல்வி பயிலும் போது சித்திரப் பாடத்தில் மிகவும் விருப்பத்துடன் பயின்றதன் காரணமாக பிற்காலத்தில் ஓவியம் வரைய வேண்டுமென்ற ஆசை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.

நடு எனும் இணையம் சஞ்சிகை, உள்ளம் எனும் இணையம் சஞ்சிகை போன்றவற்றில் இவரது ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவரது தற்கால ஓவியங்களாக எண்ம ஓவியங்கள் பிரதானமாக உள்ளது. சிறுவயதில் இருந்து இன்று வரை கலை, இலக்கியத் துறையில் தடம்பதித்து வருகின்றார். இவருக்கு 2019இல் கலைஞர் சுவதம் விருதும் ஓவியத்துறைக்காக 2021இல் அமரர். ஆனந்தகுமாரசுவாமி சின்னத்துரை - தையல்நாயகி கனகரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக உள்ளம் ஓவியர்களுக்கான விருதும் 2016இல் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினால் ஒரு நினைவுச்சின்னமும் பெற்றுள்ளார்.