ஆளுமை:மோகனசுந்தரம், செல்வராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராசா மோகனசுந்தரம்
தந்தை செல்வராசா
தாய் பாக்கியம்
பிறப்பு 1957.02.16
ஊர் சாம்பல்தீவு, திருகோணமலை
வகை பல்துறை ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


செல்வராசா மோகனசுந்தரம் திருகோணமலை சாம்பல்தீவு கிராமத்தைச் சேர்ந்த பல்துறை ஆளுமை ஆவார். இவர் சாம்பல்தீவு கிராமத்தின் ஆறாம் வட்டாரத்தில் 1957ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி செல்வராசா மற்றும் பாக்கியம் தம்பதியினருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியினை ஆத்திமோட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றதுடன், ஏழாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து திருகோணமலை இந்துக்கல்லூரியில் கலைத்துறையில் கல்வி கற்று, உயர்தரத்தில் சித்தி அடைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். பிரதானமாக பொருளியல், வர்த்தகம், புவியியல் பாடங்களில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றார்.

அதன் பின்னர் தனியார் கல்வித்துறை கற்பித்து வந்ததுடன், அதனைத் தொடர்ந்து விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் பணி இணைப்பு உத்தியோகத்தராக இணைந்து கொண்டு கல்லோயா நீர்ப்பாசன திட்டத்தில் மட்டக்களப்பில் பணியாற்றினார். பின்னர் நிரந்தர ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்கப்பட்டு குருநாகல் குளியாபிட்டியவில் உள்ள முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி தனது சிறப்பு திறமை ஊடாக குறித்த பாடசாலையில் முன்னேற்றம் ஏற்பட காரணமாக அமைந்தார். 5 வருடங்கள் அங்கு சேவை ஆற்றிய பின் தனது சொந்த மாவட்டமான திருகோணமலைக்கு திரும்பி, மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் உயர்தரம் மற்றும் தரம் 10, 11 க்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக ஏழு வருடங்கள் சேவையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து திருக்கோணமலை கோட்டைக்கல்வி அலுவலகத்தில் முறைசாரா கல்வி திட்ட உத்தியோகத்தராக இரண்டு வருடம் பணியாற்றி, பின் வலய கல்வி அலுவலகத்தில் முறைசாராக் கல்விக்குரிய ஆசிரியர் ஆலோசகராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். அரசசேவையில் இருந்து சேவை முடிவுக்காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்று அரசு சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றி தனது திறமையும் வெளிப்படுத்தியதுடன், சமூகத்தில் சேவைகளை ஆற்றினார்.

Care International நிறுவனம் ஊடாக திட்ட இணைப்பாளராக பணியாற்றிய பின், அணி பொறுப்பாளராகவும் சேவையாற்றினார். அதனைத் தொடர்ந்து Offer Ceylon நிறுவனத்தில் மாவட்ட திட்ட அமைப்பாளராக 54 ஊழியர்களுக்கு பொறுப்பான அதிகாரியாக பணியாற்றினார். இவர் வடக்கு கிழக்கின் மன்னார், வவுனியா, திருக்கோணமலை, முல்லைதீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார்.

பின்னர் Child Fund நிறுவனத்தில் பணியாற்றியதுடன், தற்சமயம் திருக்கோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றார். அத்துடன் இவர் தனியார் கல்வித் துறையில் 18 வருடங்கள் சேவையாற்றி பல மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு காரணமாக அமைந்திருந்தார்.

இவரது பல்கலைக்கழக கல்வியின் போது அங்கிருந்த புவியியல் கழகத்தின் செயலாளராக பணியாற்றி 'புவியியலாளன்' என்ற சஞ்சிகையை பிரசுரிக்க காரணமாக அமைந்ததுடன், தமிழ் மன்ற உறுப்பினராகவும், மறுமலர்ச்சி மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும் வடக்கு கிழக்கு மாகாண கல்வி ஊழியர் கூட்டுறவு நலன்புரி சங்கத்தின் முதலாவது தலைவராக இருந்து அந்த சங்கத்தின் ஸ்தாபகத்துக்கு காரணமாக இருந்தார். மேலும் சாம்பல்தீவு மாங்காய் மாரியம்மன் ஆலய நிர்வாக சபையின் ஆலோசராகவும் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. இவரது சில கட்டுரைகள் வீரகேசரி வார வெளியீட்டில் வெளியாகியுள்ளன. அத்துடன் இவர் 'சாம்பல்தீவு - ஒரு பார்வை' என்ற சாம்பல்தீவு கிராமத்தின் வரலாறு தொடர்பான ஒரு நூலையும் எழுதியுள்ளார்.