ஆளுமை:முத்துமீரான், எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தம்பி, முத்துமீரான்
தந்தை சின்னத்தம்பி
தாய் மீரசாஹிபு மீரா உம்மா
பிறப்பு 1941.05.03
ஊர் அம்பாறை
வகை கவிஞர், சட்டத்தரணி, எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துமீரான், எஸ். (1941.05.03 - ) அம்பாறையைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், சட்டத்தரணி, நிருபர் (தினகரன், வீரகேசரிப் பத்திரிகை).இவர் சிறுகதைகள், கவிதைகள், உருவகக் கதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள் என்பனவற்றை நிந்தவூரான், நிந்தன், லத்தீபா முத்துமீரான் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்.

இதுவரை 100க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் , 250க்கு மேற்பட்ட கவிதைகளையும் , 100க்கு மேற்பட்ட உருவகக்கதைகளையும், 200க்கு மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும் எழுதியுள்ளதுடன் 30க்கு மேற்பட்ட ஆய்வுகளையும் செய்துள்ளார். இஸ்லாமியர்கள் மத்தியில் பாரம்பரியமாகக் காணப்பட்ட நாட்டாரியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். நாட்டாரியல் பற்றிய இவரின் நுால்கள் தென் இந்திய பல்கலைக்கழகங்களில் உசாத்துணை நூல்களாகவும் பயன்படுகிறது.

இவர் எழுதிய நூல்களாக உருவகக்கதைகள் (1982), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் (1991), முத்துமீரான் சிறுகதைகள் (1991), முத்துமீரான் கவிதைகள் (1993), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் (1997), இயற்கை (1999), மானிடம் சாகவில்லை (2005), கருவாட்டுக் கஸ்ஸா (கவிதைத்தொகுதி) (2005), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள் (2005), மானிடம் உயிர் வாழ்கிறது (2005), இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள் (2007) , கக்கக் கனிய… (2007), அண்ணல் வருவானா? (2008), கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள் (2011), என்னடா கொலமும் கோத்திரமும் (2013), கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும் (2013), மனப்பிரசவம் (2021) போன்றவை காணப்படுகின்றன.

1958.12.02ம் திகதி இலங்கை வானொலி தமிழ் சேவையில் இவரது முதல் நாடகமான ‘காதலும் கருணையும்’ எனும் சரித்திர நாடகம் ஒலிபரப்பப்பட்டது. முத்துமீரானின் நாடகங்களும் , கதைகளும் யதார்த்தமானவை. கடந்த 65 வருடங்களுக்கு மேலாக இடைவிடாது இலக்கியப்பணி ஆற்றிவரும் முத்துமீரான் அவர்கள் இலங்கையில் இதுவரையில் முஸ்லிம்களின் நாட்டார் இலக்கியத்தில் பல சிரமங்களுக்கிடையே கள ஆய்வு மேற்கொண்டு வியக்கத்தக்க முறையில் தேடுதல் செய்து ஏழு நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களைத் தந்துள்ளார்.

எஸ். முத்துமீரான் அவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் பங்குகொண்டு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் வழங்கிவரும் தாலாட்டுப் பாடல்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படித்து பாராட்டைப் பெற்றார். முத்துமீரான் அவர்களின் உருவகக் கதை தொகுதிகள் இரண்டும் தென்னிந்தியாவில் வெளியிடப்பட்டிருப்பது இத்துறையில் இவருக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம்.

அதுவும் புகழ்பெற்ற இரு கவிஞர்களான சாரணபாஸ்கரன் அவர்களுடைய தென்றல் மன்றத்தினாலும் தத்தினரும் கவிஞர் மீராவினுடைய நோவேன் அச்சக கம்பனியின் மூலமாகவும் வெளிவந்திருப்பது இவரின் ஆளுமைக்கு கிடைத்த நல்ல சிறப்பாகும். இத்தொகுதியில் திரு. முத்துமீரானின் ஒரு உருவகக் கதைத் தொகுதிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் உள்ளன. இக்கதைகளில் வேடம், துறவி, ஞானகுரு, மனமே, இறைவன், ஞானம், அழிவு, படைத்தவனும் படைப்பும், நெறியாளன், ஊனம், ஊழ் போன்ற கதைகள் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.

இவரின் எழுத்துத்துறையை கெளரவிக்குமுகமாக இலங்கை அரசு 1998ம் ஆண்டில் ‘கலாபூஷணம்’ விருது வழங்கியது. அத்துடன் 1994ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் ‘தாஜபூல் அதீப்’ எனும் விருதையும், 2002ம் ஆண்டில் தென்கிழக்கு கலாசாரப் பேரவை ‘இலக்கியத்திலகம்’ எனும் பட்டத்தையும், 2003இல் ‘சமாதானம்' சஞ்சிகை 'கவிக்குரிசில் பட்டத்தையும் வழங்கி கெளரவித்தன. அத்துடன் 1998 டிசம்பரில் தென்னிந்திய கோட்டக் குப்பத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழாவில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அமைச்சர் கெளரவ மு. தமிழ் குடிமகன் ‘தமிழ்மாமணி’ பட்டம் வழங்கி கெளரவித்தார்.

இவரின் கிழக்கிழங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்’ எனும் ஆய்வு நூலுக்கு 1997 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. அத்துடன் ‘இயற்கை’ எனும் நூலுக்கு மொழித்திணைக்கள விருதும் கிடைத்துள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 67-69
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 171-174
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 77-82
  • நூலக எண்: 1649 பக்கங்கள் 05-07