ஆளுமை:முகம்மது ராசிக் மரிக்கார், செய்யது அஹமது
பெயர் | முகம்மது ராசிக் மரிக்கார் |
தந்தை | செய்யது அஹமது |
தாய் | ஆயிஷா பீவி |
பிறப்பு | 1938.10.11 |
இறப்பு | 2014.08.12 |
ஊர் | திருகோணமலை |
வகை | ஆங்கிலப் பாட ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது ராசிக் மரிக்கார் அவர்கள் மர்ஹூம்களான செய்யது அஹமது மற்றும் ஆயிஷா பீவி தம்பதிகளின் புதல்வராக 1938.10.11 இல் நாவலப்பிட்டியில் பிறந்தார்.
இவர் நாவலப்பிட்டி சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றார். 1964.05.04 இல் யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி மாணவராக நுழைந்த இவர் 31.12.1965 வரை அங்கு கற்று பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார்.
திருகோணமலை இந்துக்கல்லூரி, மூதூர் அல் ஹிலால் மகா வித்தியாலயம், கஞ்சிமடம் மகா வித்தியாலயம், திருகோணமலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பேராற்றுவெளி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1989, 1990 காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இதனை விட தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகவும், இலங்கைக் கடற் படைத்தளத்தில் ஆங்கில போதனாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட GELT வகுப்பின் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் ஆங்கிலத்தை இவர் கற்பித்து வந்தமையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவரது மாணவர்கள் இருக்கின்றனர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றிருந்த இவர் மிகவும் நுட்பமான முறையில் ஆங்கிலத்தைக் கற்பித்து வந்தார். இதனால் மாணவர்கள் சலிப்பின்றி மிகுந்த விருப்பத்துடன் இவரிடம் கற்றனர்.
கனடா உலக பல்கலைக்கழக சேவை (WUSC) திருகோணமலை மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் பல்வேறு சமூகப் பணிகள் செய்யக் கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இவரது சேவைக்காலத்தில் சுமார் 21 வருடங்கள் திருகோணமலை இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இன, மத பேதமற்ற முறையில் இவரது அனைத்துப் பணிகளும் அமைந்திருந்தன. இதனால் இவரிடம் கற்றோரும், இவரது சேவைகளைப் பெற்றவர்களும் இன்றும் இவரை நினைவு கூர்கின்றனர்.
திருகோணமலையைச் சேர்ந்த திருமதி. ஸீனத்துன்னிசா அஸீஸ் இவரது வாழ்க்கைத் துணைவியாவார். முகம்மது றிஸ்மி மரிக்கார் (ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி), முகம்மது பௌமி மரிக்கார் (அமானா வங்கி), பாத்திமா ரீஸ்மா மரிக்கார் (ஆசிரியை) ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
இவர் 2014.08.12 இல் காலமானார். இவரது ஜனாஸா திருகோணமலை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.