ஆளுமை:முகம்மது பாறூக், முகம்மது லெவ்வை
பெயர் | முகம்மது லெவ்வை முகம்மது பாறூக் |
தந்தை | மீராலெவ்வை மரைக்கார் முஹம்மது லெவ்வை |
தாய் | ஆதம்லெவ்வை முஹல்லாம் அலிமா நாச்சி |
பிறப்பு | 1954.01.01 |
ஊர் | பாலமுனை, அம்பாறை |
வகை | கவிஞர் |
புனை பெயர் | பாலமுனை பாறூக் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலமுனை பாறூக் அவர்கள் (பி. 1954.01.01) அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவின் பாலமுனை கிராமத்தினைச் சேர்ந்த கவிஞராவார். இவர் 1954ம் ஆண்டு மீராலெவ்வை மரைக்கார் முகம்மது லெவ்வை மற்றும் ஆதம்லெவ்வை முஹல்லம் அலிமா நாச்சி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தான் பிறந்த ஊர் மீது கொண்ட பற்றினால் தன் பெயருக்கு முன்னால் ஊரின் பெயரினை சேர்த்துக் கொண்டார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை பாலமுனை றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் ( தற்போது அல் - ஹிதாயா மகளிர் கல்லூரி) தரம் 5 - 11 வரை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் உயர்தரத்தை கல்முனை ஸாகிறாக் கல்லூரியிலும் பயின்றார்.
1977இல் இலங்கை வங்கியில் கனிஷ்ட இலிகிதர் உதவி காசாளராக நியமனம் பெற்று பின் நாளடைவில் பல பதவிகளை வகித்து 36 வருடங்கள் வேலை செய்து பிரதி முகாமையாளராக 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
1968ஆம் ஆண்டு வெற்றிமணி, குயிலோசை போன்ற சிறுவர் சஞ்சிகைகளில் எழுத தொடங்கி கவிதைச் சோலைக்குள் எழுபதுகளில் பிரகாசிக்கத் தொடங்கினார். முக்கியமாக தினபதியில் வாரவெளியீடான சிந்தாமணியில் நகைச்சுவைப் பகுதிக்கு எழுதி எழுத்து துறையில் நுழைந்தார்.
மனிதாபிமானப் படைப்பாளியான இவர் காத்திரமான கவிதைகளை எழுதி வருகிறார். கவியரங்குகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். இவ்வாறு பாலமுனை பாறூக்கின் இலக்கியப் பயணம் நீடித்தது. அந்தக் காலத்தில் ஊர்களில் கவியரங்கம் நடத்துவது ஒரு பெஷனாக இருந்தது. இலக்கியக்காரர்களின் சுவாரஷ்யம் மிக்க பொழுதுபோக்காக கவியரங்கம் இருந்தது. பெரும்பாலும் பாறூக் கவியரங்குக் கவிதைகளில் தனது இருப்பை அதிகம் தக்கவைத்துக் கொண்டார். பாறூக்கின் இலக்கியப் பயணம் கவிதைகளாலே சூழ்ந்திருந்தது.
அதன்வழியாக "பதம்" (1987), "சந்தனப் பொய்கை" (2009) ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன. பிற்காலத்தில் குறுங்காவியம் என்றும் குறும்பாக்கள் என்றும் வலைப்பூக்கள் என்றும் அவர் எழுதத் தொடங்கினார். அத்துடன் "கொந்தளிப்பு" (2010), "தோட்டுப்பாய் மூத்தம்மா" (2011), "எஞ்சியிருந்த பிராத்தனையோடு" (2012), "மீளப்பறக்கும் நங்கணங்கள்" (2020) போன்ற நவீன காவியங்களும் "பாலமுனை பாறுக் குறும்பாக்கள்" (2013) எனும் குறூம்பாக்களும் "வலைக்குள் மலர்ந்த வனப்பு" (2017) எனும் கவிதைத் தொகுதியும் "பாலமுனை பாறுக்கின் மூன்று நவீன காவியங்கள்" (2020), "பாவேந்தல் பாடல்கள்" (2022) பாடல் தொகுதியும், "50 எழுத்துலக ஆளுமைகள்" எனும் கட்டுரை புத்தகமும் இதுவரை இவர் வெளியிட்டதாகும்.
மஹாகவியிடம் மக்களுக்காகக் கவி பாட வேண்டும் என்று கற்றுக் கொண்ட பாறூக் மஹாகவி, நீலாவணன் முதலானவர்கள் பாடிய குறுங்காவியத்தை கைப்பிடித்துக் கொண்டார். இவ்வகையில் மூன்று குறுங்காவியங்களை அவர் எழுதியுள்ளார். சுனாமிப் பேரவலத்தின் பின்னணியில் எழுந்த ‘கொந்தளிப்பு’ தென்கிழக்குப் பிரதேச மக்களின் சமூக அரசியல் பண்பாட்டு உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இது 2010ஆம் ஆண்டு வெளிவந்தது. அதே போல 2011இல் அதிகப் பிரபல்யம் பெற்ற ‘தோட்டுப்பாய் மூத்தம்மா’ என்ற குறுங்காவியத்தை அவர் எழுதினார்.
அதே போன்று 2012இல் "எஞ்சியிருந்த பிரார்த்தனை" என்ற குறுங்காவியத்தை தருகிறார். இது இப்பிரதேச மக்களின் ஒன்றித்த வாழ்க்கையை - அரசியலை கோடிட்டுக் காட்டுகிறது. இப்படி மூன்று காவியங்களைத் தந்த அவர் நவீன காவியங்களைப் பாடுவதற்கு நமக்குள் தகுதியானவர் என்பதை பிரகடனப்படுத்திக் கொண்டார். இதற்கப்பால் 2013ஆம் ஆண்டில் "பாலமுனை பாறூக் குறும்பாக்கள்" என்ற தொகுதி வெளிவந்தது. இதுவும் மஹாகவியின் வழியாக வந்ததென்றே சொல்ல வேண்டும். சமூகத்தின் அவலங்களை கேலியும் கிண்டலுமாக மஹாகவி பாடியது போல பாறூக்கும் நயமாகப் பாடியுள்ளார். இப்பாடல்களின் ஊடாக பல படிப்பினைகளையும் அவர் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் பாலமுனை பாறூக்கின் "மீளப் பறக்கும் நங்கணங்கள்" என்ற காவியம் 2020இல் வெளிவந்தது. இது நவீன காவிய வரிசையில் பொருள் ரீதியாக வேறுபட்டதாகும். இந்தப் புதிய முயற்சி பலரைக் கவர்ந்தது மாத்திரமன்றி முதியோர் பலருக்கு ஆறுதலாகவும் அமைந்தது. முதிய தம்பதிகளை எப்படிப் பிள்ளைகள் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு வழிவகையாகவும் இருந்தது. இந்த முதியவர்கள் பிரச்சினை தமிழர் சமூகத்திலும் இலக்கியங்களிலும் அதிகம் பேசப்பட்டது.
இவரது படைப்புகளுக்குப் பல்வேறு விருதுகள், சான்றுகள், பரிசுகள், சின்னங்கள் கிடைத்துள்ளன. அந்தவகையில் கொந்தளிப்பு நவீன காவியம் அரச சாஹித்ய சான்றிதழைப் பெற்றது.தோட்டுப்பாய் மூத்தம்மா அரச சாஹித்ய மண்டல விருது, கொடகே சாஹித்ய மண்டல விருது, யாழ் இலக்கியப் பேரவை விருது என்பவற்றைப் பெற்றது. பாவேந்தல் பாடல்கள் அரச சாஹித்ய மண்டல விருதைப் பெற்றது.
இவர் கலாபூஷணம் (2009), கிழக்கு மாகாண வித்தகர் விருது (2014), கலாசாரத் திணைக்களம் வழங்கும் சுவதம் விருதுகள், வென்மேரி அறக்கட்டளையின் வாழநாள் சாதனையாளர் விருது (2022), இலக்கியத்திற்கான தமிழன் விருது (2023) தென்றல் சஞ்சிகையின் வீசு தென்றல் விருது (2023), என்பனபவற்றையும் பாவேந்தல், கவிப்புனல, கவித்திலகம் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.