ஆளுமை:மாதுமை, சிவசுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாதுமை
தந்தை சிவசுப்பிரமணியம்
தாய் ராதாதேவி
பிறப்பு 1978.01.09
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதுமை சிவசுப்பிரமணியம் (1978.01.09) யாழ்ப்பாணம், இணுவிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசுப்பிரமணியம்; தாய் ராதாதேவி. இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் கற்றார், யாழ்ப்பாணத்துச் சூழ்நிலை காரணமாக பெற்றோருடன் திருகோணமலைக்குச் சென்று புனித மரியாள் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து கற்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் இளமானி பட்டதை முதலாம் தரத்தில் பெற்றார். அதனைத் தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில் M.A மேற்படிப்பு மாணவியாகவும், திறந்த பல்கலைக்கழத்தில் சட்டத்துறை மாணவியாகவும் சேர்ந்து படிக்கலானார். அந்த வேளையில் புலமைப்பரிசில் சுவிஸ்சர்லாந்து பேண் பல்கலைக்கழகத்துக்கு சென்று படிப்பதற்கு கிடைத்ததனால் அங்கு சென்று M.A உயர்கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஜேர்மன் மொழியைக் கற்று மொழி பெயர்ப்பு செய்யும் அளவுக்கு பாண்டித்துவம் பெற்றவர் மாதுமை.

தந்தை முற்போக்கான கொள்கையுடன் எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருவதை அவதானித்த மாதுமை, தந்தை வாசிக்கும் புரட்சிகரமான எழுத்தாளர்களின் நூல்களை தாமும் வாசிக்கலானார். பாடசாலை மட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்த அவர், தமது முதற்கதையைத் தமிழ்த்தினப் போட்டிக்கு கோட்ட மட்டத்தில் எழுதி முதற் பரிசினைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்ட மட்டம், மாகாண மட்டம் அகியவற்றிலும் முதலிடம் பெற்று அகில இலங்கை மட்டத்தில் முதல் முறையாகப் பங்குபற்றி மூன்றாம் பரிசினைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அகில இலங்கை மட்டத்தில் சிறுகதைக்கான தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்துக்கொண்டார். திருகோணமலை பட்டணமும்-சூழலும் பிரதேச சாகித்திய விழாப் போட்டியில் மாதுமை எழுதிய பயணம் என்னும் சிறுகதை முதல் பரிசினைப் பெற்றது.

16 வயது தொடக்கம் 19 வயதுவரை 27 சிறுகதைகளை எழுதியுள்ளார். அதில் 23 சிறுகதைகள் முதல் பரிசினையும், இரண்டு சிறுகதைகள் இரண்டாவது பரிசினையும், இரண்டு சிறுகதைகள் மூன்றாவது பரிசினையும் பெற்றிருந்தமை விசேடமாகும். இதில் 15 சிறுகதைகளைத் தொகுத்து தூரத்து கோடை இடிகள் என்னும் சிறுகதைத் தொகுதியைத்தான் கல்வி பயின்ற திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வெளியிட்டார். சிறுகதையுடன் மட்டும் நின்றுவிடாமல் இவர் கவிதையிலும் ஈடுபாடு காட்டலானார். மாதுமையின் ஐந்து கவிதைகள் இந்தியாவின் காவ்யா வெளியீடான பெண்கள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. அதில் வெளிவந்த புத்தகம் என்னும் கவிதை இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 11ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழி நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியச் சஞ்சிகைகள் பலவற்றில் மாதுமையின் கவிதைகள் வெளிவந்துள்ளன.

இதேவேளை இந்தியாவில் வெளிவருகின்ற சிறந்த சிறுகதைகளை மாதா மாதம் தெரிவுசெய்யும் பணியை ஆனந்த விகடன் மேற்கொண்டு வந்தது. அதில் யுகமாயினி சஞ்சிகையில் மாதுமையின் சிறுகதை ஒரு மாதத்தின் சிறந்த சிறுகதையாக ஆனந்தவிகடன் தெரிவு செய்திருந்தமை விசேட அம்சமாகும். இந்தியச் சஞ்சிகைகளில் வெளிவந்த மாதுமையின் கவிதைகள் எலலாவற்றையும் உயிர்மை சஞ்சிகை நிறுவனத்தார் தொகுத்து ஒற்றைச் சிலம்பு என்னும் கவிதைத் தொகுதியை வெளிக்கொண்டுவந்துள்ளது.

திருமணத்திற்கு பின்னர் தற்பொழுது இலண்டனில் வசித்து வரும் மாதுமை தனது ஆக்கங்களை இணையம் மூலம் வெளியிட்டு வருகின்றார். முற்போக்கு எண்ணம் கொண்ட மாதுமை பெண்ணிலைவாதக் கருத்துக்களை முன்னிறுத்தி தமது கவிதைகளைப் படைத்து வருகின்றார்.

குறிப்பு - மேற்படி தகவல் மாதுமையின் தந்தை சிவசுப்பிரமணியம் அவர்களின் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

படைப்புகள்

வெளி இணைப்புக்கள்