ஆளுமை:மரியசேவியர் அடிகளார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மரியசேவியர் அடிகளார்
பிறப்பு 1939.12.03
ஊர் இளவாலை
வகை கலைஞர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரியசேவியர் அடிகள், நீ. (1939.12.03 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த கலைஞர், புலவர், சமயப் போதகர். இவர் ஆரம்பக்கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் அதன் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் கற்றார். இவர் தன் வாழ்வைக் குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ். மருதனார் குருமடத்தில் சேர்ந்து சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பைக் கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார்.

இவர் 1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு ரோம் நகருக்குச் சென்று தனது 21 ஆவது வயதில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்றதுடன் உரோம் தமிழ்ச் சங்கத் தலைவராக 1960- 1961 ஆம் ஆண்டு பணிபுரிந்தார். இவர் ஒருவர்தான் பட்டப் படிப்பின் இறுதி ஆண்டில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் முழுப்புள்ளிகளையும் பெற்றுப் பாராட்டுப்பெற்றவர். இவர் 1962 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் திகதி ரோம் நகரில் தனது 22 ஆவது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி வயதுக்குறைவால் பரிசுத்த தந்தை 23 ஆம் அருளப்பரின் சிறப்பு அனுமதியுடன் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் பதினைந்து வயதில் எழுதிய "மலருந் தமிழகமே மறந்து விடாதே” என்னும் கட்டுரை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மலரில் வெளிவந்தது. இவர் பத்திரிசியார் கல்லூரியில் பயிலும் காலத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர். சிறுவயது முதல் நாடகங்களில் நடித்துவந்த இவர், 1966 ஆம் ஆண்டு உரும்பராயில் 'திருமறைக் கலாமன்றம்' என்ற அமைப்பை நிறுவிக் காட்டிக்கொடுத்தவன், பலிக்களம், நல்லதங்காள், நெஞ்சக்கனல், நீ ஒரு பாதை, யூதகுமாரி முதலான பல நாடகங்களை உள்ளூரிலும் ஐரோப்பிய தேசங்களிலும் மேடையேற்றினார். இவ் அமைப்பினூடாக 1990 ஆம் ஆண்டு “கலைமுகம்” என்னும் காலாண்டுக் கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் சிறிது காலம் பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பன்மொழிப்புலமை பெற்றிருந்த அடிகளார் ஆங்கிலத்தில் Cathalic-Hindu Encounter, Jaffna: The Land of the Lute, Siddhanta Tradition's Philosopher Sages, Life and Times of Orazio Bettachini ஆகிய நூல்களையும் ஜேர்மன் மொழியில் Die Mentaphysik des shaiva siddhanta என்ற நூலையும் அளவுகோல், கதையும் காவியமும், ஒரு துளி, கபடமனக் காவலன், எழுதிய கரம் முதலான நாடகங்களையும் அருளும் இருளும் என்ற நடன நாடகத்தையும் மூவேந்தர், சிங்க குலச் செங்கோல் ஆகிய நாட்டுக்கூத்துக்களையும் கலைமுகம் என்ற கட்டுரைத்தொகுப்பையும் சுவைத்தேன் என்ற கவிதைத் தொகுப்பையும் ஆக்கியளித்துள்ளார்.

இவருக்கு இவரது சமய, கலைப் பணிகளைப் பாராட்டி 1997 ஆம் ஆண்டு ஜேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் அருட்தந்தை ஜெயசேகரம் அடிகளார் பொன்னாடை அணிவித்துக் “கலைத்தூது” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார். மேலும் இவரின் இவருக்கு ஆளுநர் விருதும் யாழ். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் அளித்துள்ளது.

வெளி இணைப்புக்கள்

மரியசேவியர் அடிகளார், நீ பற்றி தினகரன் இணையத்தில்

இவற்றையும் பார்க்க

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 120-121
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 103-105
  • நூலக எண்: 1034 பக்கங்கள் 23