ஆளுமை:பாக்கியராசா, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் கண்ணம்மை
பிறப்பு 1951.09.08
ஊர் பெரியநீலாவணை, அம்பாறை
வகை பாடகர், எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கணபதிப்பிள்ளை பாக்கியராசா அவர்கள் 1951.09.08 இல் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தின் கருங்கொடித்தீவு எனும் கிராமத்தை பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் கணபதிப்பிள்ளை, கண்ணம்மை என்பவர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.

இவர் தன்னுடைய ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையிலும் அத்துடன் உயர் கல்வியையும் அதே பாடசாலையில் பயின்றார். உயர்தர சித்திக்கு பின் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்தார்.

1976 ஆம் ஆண்டு தொடக்கம் 1978 ஆம் ஆண்டு வரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் கிழக்குமாகாண கிராம சஞ்சிகை மற்றும் இளம்சுடர் நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளராக இருந்த விவியன் எஸ். நமசிவாயம் என்பவருடன் உதவியாளராக பணியாற்றினார். இவருடைய இலக்கிய பயணம் 1971 ஆம் ஆண்டில் ஆரம்பமானது. ஆனால் பாடசாலைக் கால பருவத்தில் இலக்கிய சம்பந்தப்பட்ட கவிதை, நாடகம், பாடல், வில்லுப்பாட்டு போன்றவற்றில் ஈடுபட்டதுண்டு. அக்காலத்தில் அக்கரைப்பற்றிலிருந்து வெளியான முகில் மற்றும் ஏனைய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கம் இடம்பெற்றுள்ளது.

இவரது முதலாவது கவிதையாக பெண்கள் அணியும் ஒழுக்கம் இல்லாத ஆடைகளை கருப்பொருளாகக் கொண்டு அணங்கே கழற்றி எறி எனும் தலைப்பில் எழுதினார். இது 1971 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. இதற்கு வந்த பாராட்டின் காரணமாக மேலும் ஆர்வம் கொண்டு அக்கால பத்திரிகைகளான வீரகேசரி, சிந்தாமணி, தினபதி போன்றவற்றில் எழுதி வந்தார். 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் பிரச்சினை சூழல் காரணமாக இவரது கவிதை எழுத்து வீழ்ச்சியானது.

1975 ஆம் ஆண்டு இவரது முதல் பாடலாக இசையமைப்பாளர் முத்துசாமி மற்றும் பாடகர் எஸ். விவேகானந்தன் குரலில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் உள்ள பிரபல இசையமைப்பாளர்களான எம். கே. றொக்சாமி, ரி. வி. பிச்சையப்பா, எம். எஸ். செல்வராசா, கண்ணன் நேசம், போன்றவர்கள் இவருடைய பாடல்களை இசையமைத்துள்ளார்கள். வி. முத்தழகு, சின்னச்சாமி, இமானுவேல், சத்தியமூர்த்தி, மோகன்ராஜ், விவேகானந்தன், அமுதன் அண்ணாமலை போன்ற இலங்கை பிரபல பாடகர்கள் இவரது பாடல்களைப் பாடியுள்ளார்கள்.

இவருக்கு 1978 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் கிடைத்தது தொடர்ந்து ஆசிரியர் சேவையில் இருந்த இவர் 2009 ஆம் ஆண்டு அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக ஓய்வு பெற்றார். அக் காலங்களில் கிராமத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் பாடல் பாடியுள்ளார். இவர் சுமார் 40 இற்கு மேற்பட்ட வில்லுப்பாடல்களை இயற்றியுள்ளார். திருக்கோவில், கல்முனை, பெரியநீலாவணை, துறைநீலாவணை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு போன்ற இடங்களில் குருவாக இருந்து வில்லுப்பாடல்களை பயிற்றுவித்தும் இருக்கின்றார்.

அத்தோடு வடமொழி நாட்டுக்கூத்து, நாடகம் போன்றனவும் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. பல கவியரங்குகளிலும் பங்கேற்றும் உள்ளார். அவரது மறக்கமுடியாத கவியரங்காக கவிஞர் நீலாபாலன், கவிஞர் நீலாவணன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் கலந்து கொண்டதாகும். சடாட்சரன், ஜீவ ஜீவரத்தினம், பாண்டியூரன், சண்முகம் சிவலிங்கம், மருதூர் கொத்தன், மருதூர் கனி போன்ற கவிஞர்களுடன் இணைந்தும் கவியரங்குகளில் பங்குபற்றியுள்ளார். இவருடைய கவிதை வளர்ச்சிக்கு ஒரு அத்திவாரமாக இருந்தவர் கல்முனை பூபால் அவர்களாகும்.

மாணவ அமைப்பு பேரவை, சுவிஸ் உதயம், சிகரம் கல்வி நிலையம் போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் பெற்று சமூக சேவை செய்து வருகின்றார். இவர் இயற்றிப் பாடிய பக்திப்பாடல்கள் இன்றும் சில கோவில்களில் இடம்பெறுவதுண்டு. அக்கரைப்பற்று மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம், கல்முனை ஶ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயம், பெரியநீலாவணை நாகநன்னி ஆலயம், 11ம் கிராமம் படர்மலை பத்தினி அம்பாள் ஆலயம், கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயம், துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலயம், கிட்டங்கிப் பிள்ளையார் ஆலயம் போன்ற இன்னும் பல கோயில்களுக்கு மொத்தமாக 28 பாடல்கள் பாடியுள்ளார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உண்டு. மனைவி பெயர் நவமணி மகள் பெயர் சபேஜிதா. இவரும் தந்தை போலவே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள். 1978 ஆம் ஆண்டு அக்கறை எனும் 40 கவிதை தொகுப்புக்கள் 10 மெல்லிசைப் பாடல்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார். சாதியம் சம்பந்தப்பட்ட ஆய்வு நூலான மறைந்து போன அரசகுல மான்மியம், பாப்பா பாடும் பாடல் எனும் நூல் போன்றவும் இவரது படைப்புகளாகும்.

அத்தோடு இவர் பிரதம ஆசிரியராக இருந்து மணிப்புறா எனும் சஞ்சிகையை வெளியிட்டார். கல்முனை பிரதேச செயலகத்தினால் உருவாக்கப்பட்ட விமோசனம் எனும் குறுந்திரைப்படத்திற்கு கதை, வசனம், இயக்கம் போன்றவற்றிக்கு பொறுப்பாக இருந்தார். இவருக்கு 2012 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதும், கிழக்கு மாகாண அமைச்சின் வித்தகர் விருதும், 2005ம் ஆண்டு இலங்கை தேசிய கலைப்பேரவையால் பாவாணர் என்ற பட்டமும், ஜே. ஆர். ஜெயவர்தன அவர்களால் கவிச்செல்வர் பட்டமும், இலங்கை நல்லுறவு ஒன்றியத்தினால் கலாஜோதி மற்றும் சாமஶ்ரீ பட்டங்களும், அக்கரை இளைஞர் முன்னணியால் வில்லிசைத் திலகம் எனும் பட்டமும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 126-127